பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கண்காணிப்பு முகமை

பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கண்காணிப்பு முகமை (Multi-Disciplinary Monitoring Agency (MDMA), முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரணை செய்த ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையின் படி, இராஜீவ் காந்தி படுகொலையில் இருந்ததாக கருதப்படும் பெரிய அளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சதி திட்டங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு இந்திய அரசால் டிசம்பர், 1998-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த விசாரணை முகமையில் இந்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, ரா, இந்திய உளவுத்துறை, அமலாக்க இயக்குனரகம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.[1]

இராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 25 நாடுகளுக்கு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.[2]மேலும் கொழும்பு சிறையில் இருந்த நிக்சன் என்ற சுரேன் குறித்து விசாரிக்க கோரிக்கை கடிதம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இராஜீவ் காந்தி படுகொலையில் கைது செய்யப்பட்டு சிறை இருந்த பேரறிவாளன், பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கணக்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கை வெளியாகும் வரை தன்னை சிறை தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் இந்திய உச்ச நீதிமன்றம் பேரறிவாளனின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது.

விமர்சனங்கள் தொகு

பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கண்காணிப்பு முகமை டிசம்பர், 1998-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவுற்றும் அதன் அறிக்கை வெளியிடப்படாதது குறித்து அரசியல் நோக்கர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இராஜீவ் காந்தி படுகொலை சதி தொடர்பாக, ஜெயின் ஆணையம் சந்திராசாமி[3] , சுப்பிரமணியன் சுவாமி, மு. கருணாநிதி, செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன் உள்ளிட்ட 21 பேர்களை விசாரணை செய்ய பரிந்துரைத்தும், பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கண்காணிப்பு முகமை மேற்படி நபர்களை விசாரிக்கவில்லை.[4]

கலைப்பு தொகு

பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கண்காணிப்பு முகமையை இந்திய அரசு அக்டோபர் 2022ல் கலைத்து விட்டது. இந்த முகமை விசாரிக்க வேண்டியவைகள் மற்றும் புலனாய்வு செய்ய வேண்டியவைகளை நடுவண் புலனாய்வுச் செயலகம் போன்ற புலனாய்வுத் துறைகளிடம் பிரித்து வழங்கப்பட்டது.[5][6][7]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு