பாண்டித்துரைத் தேவர்

நான்காம் தமிழ் சங்கம் நிறுவனர் மற்றும் தமிழ் அறிஞர் பாலவனத்தம் ஜமீன்தார்

பாண்டித்துரைத் தேவர் (மார்ச் 21, 1867 – டிசம்பர் 2, 1911) மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.

பொன். பாண்டித்துரைத் தேவர்
வள்ளல் பாண்டித்துரைத்தேவர்
பிறப்புபொன். உக்கிரபாண்டியன்
(1867-03-21)21 மார்ச்சு 1867
இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புதிசம்பர் 2, 1911(1911-12-02) (அகவை 44)
இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியத் தமிழர்
கல்விதமிழ்ப் பண்டிதர்
பணிபாலவனத்தம் சமீன்தார்
அறியப்படுவதுநான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியமை
பட்டம்வள்ளல்
சமயம்சைவம்

பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமீந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்க்கலாவிநோதர் என்றும், செந்தமிழ்ப் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர். மூவேந்தரும் போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பாருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவரும் காலக்கட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்குப் பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் வாசக இதழை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினைத் திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார்.[1]

பிறப்பு தொகு

மறவர் மரபில் தோன்றிய பொன்னுசாமித் தேவருக்கு மூன்றாவது மகனாக 1867-ஆம் ஆண்டு பங்குனி 21-ஆம் நாள் பிறந்தார். பொன்னுசாமித் தேவரவர்கள் இராமநாதபுர மன்னருக்கு அமைச்சராகயிருந்தவர்.இவர் சிறுவராக இருக்கும் போதே தந்தையை இழந்தமையால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். இக்காலகட்டத்தில் அழகர் ராஜ் என்ற தமிழ்ப் புலவர் இவரின் தமிழ் ஆசானாகவும் மற்றும் வழக்குரைஞர் வெங்கடேஸ்வர சாஸ்த்திரி இவரின் ஆங்கில ஆசிரியராகவும் இருந்தனர். இவர்களிடம் மிக்க ஆர்வத்தோடு கல்வி கற்ற தேவர், இரு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்று, இராமநாதபுரத்தில் சிவர்டிஸ் என்ற ஆங்கிலேயாரால் நடத்தப்பட்ட உயர்பள்ளியில் மேல்கல்வி கற்றார்.

சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துகள் எல்லாம் இவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே கையளிக்கப்பட்டன. இச்சொத்துகளில் பாலவநத்தம் ஜமீனும் அடங்கும். இளம் வயதில் தமிழில் நல்ல தேர்ச்சியும் ஆர்வமும் பெற்றிருந்த தேவர், அதன் வளர்ச்சிக்காகதீ தன் உடல், உயிர், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார் என்றால் மிகையாகாது. இக்காலகட்டத்தில் தேவரின் நெருங்கிய உறவினராகிய இராமநாதபுர ஜமீந்தார் பாஸ்கர சேதுபதி அவர்கள் இவரின் தொண்டுகளுக்குத் துணை புரிந்தார் என்பர்.

தமிழ்த் தொண்டு தொகு

அக்காலத்தில் அரிய தமிழ் நூல்களைக் கண்டெடுத்து, அவை அழியாவண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாதையருக்கு உதவும் பொருட்டு தேவர் அவர்கள், அவரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவியும் செய்தார். தனது ஆசிரியர்களில் ஒருவரான இராமசாமிப்பிள்ளை என்றழைக்கப்படும் ஞானசம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார். பிற மதத்தவரின் சைவ எதிர்ப்புப் போக்கை மறுக்கும் பொருட்டு கோப்பாய் சபாபதி நாவலர் மூலம் மறுப்பு நூல்கள் வெளியிட்டார். மேலும் தண்டியலங்காரம் போன்ற சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களின் நூல்கள் பதிப்பிக்கும் பொருட்டு தேவர் அவர்கள் உதவி புரிந்திருந்தார். குமாரசுவாமிப்புலவர், தேவரால் தொகுக்கப்பட்ட சைவமஞ்சரிக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம் இவரின் சிறப்பை நன்கு புலப்படுத்தும்.

சைவமஞ்சரி சிறப்புப்பாயிரத்தை கீழே காட்டுதும்:-

திக்குலவும் புகழாளன் பிரபுகுல சிகாமணியாய்ச் சிறந்த சீலன் 
அக்கிரகண் ணியன்பொன்னு சாமியெனு நரபால னருளும் பாலன் 
நக்கனடி யாவர்பாலன் பேறுளத்தன் வெண்ணீறு நண்ணும் பாலன் 
தக்கபொரு   ணிலவுகலை வினோதனுயர் சற்சங்க சனானு கூலன் .

பூதேவன் புகலியர்கோன் முதலறிஞர் தமிழ்நூலின் பொருள்க ளுள்ள
மீதேவன் பறமருவப் பதித்தேவன் றேவனெனும் வெளிறு நீங்கி 
நீதேவ னெனக்கொண்டு நிலத்தேவன் பகைகடந்து நெறிநின் றீசன்
மாதேவன் பதத்தேவன் மகிழ் பாண்டித்துரைத்தேவ மன்னன் மாதோ

நான்காம் தமிழ்ச் சங்கம் தொகு

மதுரை மாநகரில் தேவர் தங்கியிருந்த போது, அவ்வூர் அறிஞர்கள் "தமிழ்ச் சிறப்பு" பற்றிச் சொற்பொழிவாற்றும்படி வேண்டிக் கொண்டனர். இதற்கு இணங்கிய தேவர், உரைக்கு வேண்டிய ஆராய்ச்சி செய்யும் பொருட்டு, திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களை ஈட்ட முயற்சித்த போது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் மனைகளிலிருந்தும் பெற முடியவில்லை. இந் நிகழ்வு தேவரின் உள்ளத்தை மிகக் கடுமையாகப் பாதித்தது. பண்டைக்காலம் முதல் தமிழ்ச் சங்கங்கள் கூடிய மதுரை மூதூருக்கும், அங்கு வளர்ந்த தமிழுக்கும் ஏற்பட்ட துன்ப நிலையை எண்ணி இவர் உள்ளம் வேதனையுற்றது. இந்நிலையை மாற்றும் நோக்குடன் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்ட தேவர் அவர்கள், தனது திட்டத்தை 1901-ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் அவையோர் முன் வேண்டுகோளாக முன்வைத்தார். அம் மாநாட்டில் நான்காம் தமிழ்ச் சங்கம் மதுரையில் நிறுவுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பிலவ வருடம் ஆவணி மாதம் 13-ஆம் தேதி சித்திரை நட்சத்திரம் அமைந்த நன்னாளில் ஞாயிற்றுக்கிழமை, 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி அன்று நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுச் செயல்படத் தொடங்கியது. இத்தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராகத் தேவரே பொறுப்பேற்றுச் சங்கத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு அயராது செயல்பட்டார். தமிழ் சங்கத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை தமிழிலும் வடமொழியிலும் புலமை வாய்ந்தவரும், தன்னுடன் இளம் வயதில் கல்வி பயின்ற நாராயண ஐயங்கார் அவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் தமிழகம் மற்றும் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து தமிழ் வல்லுநர்களை அழைத்துச் சங்கத்தில் அங்கத்தவராக்கி எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் தேவராவார்.தமிழன்னைக்கு மேல் கூறிய தொண்டுகள் மட்டுமல்லாது, செய்யுள் இயற்றித் தொண்டாற்றும் புலமையும் ஆற்றலும் தேவரவர்களிடம் இருந்தது, இதற்குச் சான்றாக சிவஞானபுர முருகன் காவடிச்சிந்து, சைவ மஞ்சரி, இராஜராஜேஸ்வரிப் பதிகம், பன்னூல் திரட்டு மற்றும் பல தனி நிலைச் செய்யுள்களும் பல சிறப்பாயிரங்களும் திகழ்கின்றன. தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும், வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த தேவரவர்கள், வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. தமிழின் உயர்வுக்காக உறங்காது உழைத்த உத்தமர், வள்ளல் பாண்டித்துரை தேவர், 1911-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாள் உயிர் துறந்ததை எண்ணித் தமிழ் உலகம் வருந்தியபோதும், அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கம் நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தொண்டாற்றி வருவது தேவரவர்களின் உண்மைத் தமிழ்ப் பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.[2].

மேற்கோள்கள் தொகு

  1. குமாரசுவாமிப்புலவர், தமிழ் புலவர் சரித்திரம், 1914. பக். 210
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-26. பார்க்கப்பட்ட நாள் 2009-11-25.
  • தமிழ்ப்ரியன் என்.ஏ. (2005). இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும். சென்னை: நர்மதா பதிப்பகம்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டித்துரைத்_தேவர்&oldid=3913893" இலிருந்து மீள்விக்கப்பட்டது