பாம்பிக்ஸ் மோரி இனத்தின் சிறப்பியல்புகள்- பகுதி I

பாம்பிக்ஸ் மோரிபட்டுப்பூச்சியில் பல இனங்கள் காணப்படுகின்றன.இவை பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஜப்பானிய, சீன, ஐரோப்பிய மற்றும் இந்திய இனங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பானிய இனங்கள்

இவை ஒரு சந்ததி மற்றும் இரு சந்ததி இனங்களாகும்.இவ்வினத்தின் கூடு நிலக்கடலை விதையின் வடிவத்தைக் கொண்டது. கூடுகள் பொதுவாக வெண்ணிறத்திலும், சில சமயங்களில் மஞ்சள் நிறத்திலும் கட்டப்படும். இவை நீண்ட புழுப்பருவத்தைக் கொண்டவை. இவ்வினத்தின் புழுக்கள் உணவை மெதுவாக உண்ணும் தன்மையுடையவை.இவற்றின் இழைகள் தடிமனாகவும், குட்டையாகவும் இருக்கும். ஜப்பானிய இனங்கள் மோசமான சூழ்நிலையிலும் வளரக்கூடியவை. இவை அதிகமான இரட்டைக்கூடுகளை கட்டும் தன்மையுடையவை.

சீன இனங்கள்

ஒரு சந்ததி,இரு சந்ததி மற்றும் பல சந்ததி இனங்கள் உள்ளன. கூடுகள் முட்டை வடிவத்திலும், வெண்மை மற்றும் பொன் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.இழைகள் மெலிந்தும், நீளமாகவும் இருக்கும். அதிக வெப்பத்தில் புழுக்கள் வேகமாகவும் வீரியமாகவும் வளரக்கூடியவை.அதிக ஈரப்பதத்தில் சோர்வுற்றுக் காணப்படும். இலைகள் வேகமாக உண்ணப்படும்.

ஐரோப்பிய இனங்கள்

ஒரு சந்ததி இனம் மட்டும் காணப்படுகிறது. முட்டைகள் பெரிதாகவும்,அதிக எடை கொண்டதாகவும் இருக்கும். கூடுகள் நீளமாகவும், நீள்வட்டமாகவும், சிறிய குறுக்கத்துடனும் காணப்படும். கூடுகள் வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இழை நீளமாகவும்,அதிக நூற்புத்திறன் உள்ளதாகவும் இருக்கும். புழுக்கள் மல்பெர்ரி இலைகளை அதி வேகமாக தின்னக்குடியவை.ஐந்தாவது தோலுரிப்பு இடைப்பருவம் நீண்டிருக்கும். அதிக வெப்பத்திலும், அதிக ஈரப்பதத்திலும் வளர்ச்சி குன்றிக் காணப்படும்.

இந்திய இனங்கள்

இவை பல சந்ததி இனங்களாகும். இவற்றின் வாழ்நாள் குறைவாக இருக்கும். ஆனால்,இவை அதிக வெப்பத்தையும், அதிக ஈரப்பதத்தையும் தாங்கி வளரக்கூடியவை. புழுக்களும், கூடுகளும் சிறியவையாக இருக்கும். இவை பச்சை மற்றும் மஞ்சள் அல்லது வெண்ணிறத்துடனும்,நூற்புக்கதிர் வடிவிலும் தோற்றமளிக்கும். கூடுகள் நீளம் குறைந்த, மெல்லிய இழைகளைக் கொண்டவை.

மேற்கோள்

[1]

  1. Dhote A K,1990. Silkworm Biology and Rearing, Sericulture-Insructional-cum-Practical Manual Volume II. NCERT Publications, p: 10-11.