பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு

7ஆம் நூற்றாண்டில் சாசானியப் பேரரசு வெல்லப்பட்ட நிகழ்வு

பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு என்பது பொ. ஊ. 632 முதல் பொ. ஊ. 654ஆம் ஆண்டு வரை ராசிதீன் கலீபகத்தால் நடத்தப்பட்டது. இது ஈரான் மீதான அரபுப் படையெடுப்பு[2] என்றும் அறியப்படுகிறது. இப்படையெடுப்பு சாசானியப் பேரரசின் வீழ்ச்சிக்கு இது இட்டுச் சென்றது. இறுதியில் சரதுச சமயமும் வீழ்ச்சியடைந்தது.

பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு
தொடக்க கால முசுலீம் படையெடுப்புகளின் ஒரு பகுதி

முசுலீம் படையெடுப்புகளுக்கு சிறிது காலத்திற்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவின் வரைபடம்
நாள் பொ. ஊ. 632 – பொ. ஊ. 654[1]
இடம் மெசொப்பொத்தேமியா, காக்கேசியா, ஈரான், மற்றும் குராசான்
ராசிதீன் கலீபகத்தின் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
* சாசானியப் பேரரசின் வீழ்ச்சி
பிரிவினர்
ராசிதீன் கலீபகம் சாசானியப் பேரரசு

அரேபியாவில் முசுலீம்களின் வளர்ச்சியானது பாரசீகத்தில் அதற்கு முன்னர் கண்டிராத அரசியல், சமூக, பொருளாதார மற்றும் இராணுவ பலவீனத்துடன் ஒத்துப் போனது. பைசாந்திய பேரரசுக்கு எதிராக தசாப்தங்களுக்கு நடைபெற்ற போர்களுக்கு பிறகு, ஒரு காலத்தில் உலகின் ஒரு முக்கிய சக்தியாக இருந்த சாசானியப் பேரரசு அதன் மனித வள மற்றும் பொருள் வள ஆதாரங்களில் பெரிதும் குன்றியிருந்தது. 628ஆம் ஆண்டு மன்னர் இரண்டாம் கோசுரோவின் மரண தண்டனைக்கு பிறகு சாசானிய அரசின் உள்நாட்டு அரசியல் நிலையானது சீக்கிரமே சிதைவுற ஆரம்பித்தது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் அரியணைக்கு உரிமை கோரிய 10 புதிய மன்னர்கள் அரியணையில் இறுதியாக அமர வைக்கப்பட்டனர்.[3] 628-632ஆம் ஆண்டின் சாசானிய உள்நாட்டு போரைத் தொடர்ந்து பேரரசானது மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பை கொண்டிருக்கவில்லை.

அரபு முசுலீம்கள் முதன் முதலில் சாசானிய நிலப்பரப்பை 633ஆம் ஆண்டு தாக்கினர். மெசொப்பொத்தேமியா மீது கலீத் இப்னு அல் வாலித் படையெடுத்தது இதில் முதன்மையானதாக அமைந்தது. அந்நேரத்தில் மெசொப்பொத்தேமியாவானது அசோரிசுதான் என்ற சாசானிய மாகாணமாக அறியப்பட்டு வந்தது. இது தோராயமாக நவீன கால ஈராக்குடன் ஒத்துப் போகிறது. சாசானிய அரசின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மெசொப்பொத்தேமியா திகழ்ந்தது.[4] லெவண்ட் பகுதியில் பைசாந்தியப் போர் முனைக்கு கலீத்தை மாற்றியதை தொடர்ந்து சாசானிய எதிர் தாக்குதல்களுக்கு தாங்கள் கைப்பற்றி வைத்திருந்த நிலப்பரப்பை முசுலீம்கள் இறுதியாக இழந்தனர். இரண்டாவது முசுலீம் படையெடுப்பானது 636ஆம் ஆண்டு தொடங்கியது. இது சாத் இப்னு அபி வக்காசு தலைமையில் நடைபெற்றது. அல் கதிசியா யுத்தத்தில் இவர்கள் ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றனர். நவீன கால ஈரானுக்கு மேற்கே உள்ள சாசானிய கட்டுப்பாடானது நிரந்தரமாக முடிவுக்கு வருவதற்கு இது இட்டுச் சென்றது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ராசிதீன் கலீபகம் மற்றும் சாசானியப் பேரரசுக்கு இடையில் ஓர் இயற்கையான தடையான சக்ரோசு மலைத்தொடரானது எல்லையைக் குறித்தது. 642ஆம் ஆண்டு பாரசீகம் மீதான ஒரு முழு அளவிலான படையெடுப்பை நடத்த ராசிதீன் இராணுவத்திற்கு அந்நேரத்தில் முசுலீம்களின் கலீபாக இருந்த உமர் ஆணையிட்டார். 651ஆம் ஆண்டு வாக்கில் சாசானியப் பேரரசானது முழுவதுமாக வெல்லப்படுவதற்கு இது இட்டுச் சென்றது. சில ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுகளுக்கு அப்பாலிருந்த மதீனாவில் இருந்து ஆணையிட்டுக் கொண்டிருந்த இவரின் ஒரு தொடர்ச்சியான, நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட, பல முனை தாக்குதல்களானது பாரசீகத்தில் விரைவான வெற்றியைத் தேடித் தந்தது. இது இவரது மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஒரு சிறந்த இராணுவ மற்றும் அரசியல் உத்தியாளராக இவரது பெயருக்கு இது பங்களித்தது.[3] 644ஆம் ஆண்டு பாரசீகத்தை அரபு முசுலீம்கள் முழுவதுமாக இணைத்துக் கொள்வதற்கு முன்னர் அபு லுலுவா பிரூசு என்கிற ஒரு பாரசீக கைவினைஞரால் உமர் அரசியல் கொலை செய்யப்பட்டார். அபு லுலுவா பிரூசு யுத்தத்தில் பிடிக்கப்பட்டு, அரேபியாவிற்கு ஓர் அடிமையாக கொண்டு வரப்பட்டிருந்தார்.

சில ஈரானிய வரலாற்றாளர்கள் அரேபிய நூல் ஆதாரங்களை பயன்படுத்தி "சில வரலாற்றாளர்களின் பதிவுகளுக்கு மாறாக ஈரானியர்கள் உண்மையில் படையெடுத்து வந்த அரேபியர்களுக்கு எதிராக நீண்ட காலத்திற்கு, கடுமையாக சண்டையிட்டனர்" என்று தங்களது முன்னோர்களை குறித்து குறிப்பிடுகின்றனர்.[5] 651ஆம் ஆண்டு வாக்கில் ஈரானிய நிலங்களில் இருந்த பெரும்பாலான நகர்ப்புற மையங்கள் அரபு முசுலீம் படைகளின் மேம்பாட்டின் கீழ் வந்தன. இதில் குறிப்பிடத்தக்க விதி விலக்கு காசுப்பியன் மாகாணங்களான தபரிசுதான் மற்றும் திரான்சாக்சியானா ஆகியவை மட்டுமே ஆகும். பல உள்ளூர் நகரங்கள் படையெடுப்பாளவர்களுக்கு எதிராக சண்டையிட்டன. எனினும், அரேபியர்கள் பெரும்பாலான நாடு முழுவதும் ஓங்கு நிலையை நிறுவினர். தங்களது அரேபிய ஆளுநர்களை கொல்லுதல் அல்லது அவர்களது கோட்டை காவல் படையினரை தாக்குதல் ஆகியவற்றின் மூலம் பல்வேறு நகரங்கள் கிளர்ந்தெழுந்தன. இறுதியாக ஈரானிய கிளர்ச்சிகளை அரேபிய இராணுவ வலுவூட்டல் படைகள் ஒடுக்கின. ஒட்டு மொத்த இசுலாமிய கட்டுப்பாட்டை ஏற்கும் படி செய்தன. ஈரான் இசுலாமிய மயமாக்கப்பட்ட நிகழ்வானது படிப்படியாக நிகழ்ந்தது. பல்வேறு வகைகளில் நூற்றாண்டுகள் கழிந்த காலத்தில் இதற்கு ஊக்குவிப்பு அளிக்கப்பட்டது. சில ஈரானியர்கள் என்றுமே மதம் மாறவில்லை. பல்வேறு நிகழ்வுகளில் சரதுச புனித நூல்கள் எரிக்கப்பட்டன. சரதுச மத குருமார்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பாக வன்முறையான எதிர்ப்பை காட்டிய நிலப்பரப்புகளில் இவ்வாறு நடைபெற்றது.[6] பாரசீக மொழி மற்றும் ஈரானிய கலாச்சாரத்தை தொடர்ந்து பேணியதன் மூலம் பாரசீகர்கள் தங்களது நிலையை மீண்டும் நிலை நிறுத்தினர். பிந்தைய நடுக் காலத்தின் போது ஈரானில் முக்கியமான சமயமாக இசுலாம் உருவானது.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. Pourshariati 2008, ப. 469.
  2. "ʿARAB ii. Arab conquest of Iran". iranicaonline.org. Archived from the original on 26 September 2017. பார்க்கப்பட்ட நாள் 18 January 2012.
  3. 3.0 3.1 The Muslim Conquest of Persia By A.I. Akram. Ch: 1 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-597713-4
  4. Stephen Humphreys, R. (January 1999). Between Memory and Desire. University of California Press. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520214118 – via இணைய ஆவணகம்.
  5. Milani A. Lost Wisdom. 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-934211-90-1 p.15
  6. (Balāḏori, Fotuḥ, p. 421; Biruni, Āṯār, p. 35)
  7. Mohammad Mohammadi Malayeri, Tarikh-i Farhang-i Iran (Iran's Cultural History). 4 volumes. Tehran. 1982.
  8. ʻAbd al-Ḥusayn Zarrīnʹkūb (2000) [1379]. Dū qarn-i sukūt : sarguz̲asht-i ḥavādis̲ va awz̤āʻ-i tārīkhī dar dū qarn-i avval-i Islām (Two Centuries of Silence). Tihrān: Sukhan. இணையக் கணினி நூலக மைய எண் 46632917.

நூல் ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு