பாலாமணி அம்மையார்
பாலாமணி அம்மையார் 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பழம்பெரும் நாடக நடிகை ஆவார்.
பாலாமணி அம்மையார் | |
---|---|
![]() பாலாமணி அம்மையார் | |
பிறப்பு | கும்பகோணம், இந்தியா |
இறப்பு | மதுரை, இந்தியா |
பணி | நாடக நடிகை |
அறியப்படுவது | நாடக நடிகை |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் ராஜாமணி. சிறுவயதிலேயே பரதம், இசை, நாடகம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். சமசுகிருதத்திலும் நல்ல புலமைப் பெற்றவராக இருந்தார். குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து கொள்ளாமல், தன் ஆர்வம் முழுவதையும் நடகக்கலை மீது காட்டினார். 1920கள் வரை பாய்ஸ் கம்பெனிகள் பெண் வேடங்களையும் ஆண்களைக் கொண்டே நடிக்கவைத்தனர். இந்நிலையில் பாலாமணி முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே கொண்டு நடக நிறுவனத்தைத் துவக்கினார்.[1] 1887 முதல் 1895 வரை ஐம்பதிற்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு நடகக் கலையைக் கற்பித்து அரங்கேற்றினார்.[2]
முதல் நாடகக் கம்பெனி
தொகுமுதன் முதலில் கும்பகோணத்தில் எழுபது பெண்களைக் கொண்டு நாடகக் கம்பெனி நடத்தினார். தன் சகோதரியானிராஜாம்பாளுடன் இணைந்து கைவிடப்பட்ட தேவரடியார்களுக்கு அடைக்கலம் தரும் விதமாக முழுவதும் அவர்களைக் கொண்டே தன் நாடக நிறுவனத்தை அமைத்தார்.[3] பெட்ரோமாக்ஸ் விளக்கு இவர் நாடகங்களில்தான் முதன் முதலாக அறிமுகமானது. இவரது கம்பனியின் ஆசிரியர் எம். கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தையார்).[2] நகைச்சுவை நடிகர் சி. எஸ். சாமண்ணா கம்பனியின் நிர்வாகியாகவும், நடிகராகவும் இருந்தார்.[2] நாடகங்களின் மூலம் கிடைத்த பொருளை கோயில் திருப்பணிகளையும், ஏழைகளுக்குத் திருமணங்களும் நடத்தினார். கும்பகோணம் கும்பேசுவரர் கோயில் கல்வெட்டில் இவரது பெயர் உள்ளது.[2]
நாடகங்கள்
தொகுமனோகரா, தாரரச சாங்கம் போன்ற நாடகங்கள் இவர் கம்பெனியில் நடத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மிகச் செல்வாக்கோடு இவர் நாடகக் கம்பெனி விளங்கியது. இவர் கதாநாயகியாக நடித்த டம்பாச்சாரி என்ற நாடகம் மாதக் கணக்கில் நடைபெற்றது.[2]
இறுதி வாழ்க்கை
தொகுஇறுதிக் காலத்தில் ராஜாமணி அம்மாள் நோய்வாய்ப்பட்டார். நாடகங்களும் நிறுத்தப்பட்டு, பொருட்களை விற்று உள்ளூர் தனவந்தர்களிடம் வாங்கிய கடன்களை அடைத்தார். ஏமாற்றத்துடன் கும்பகோணத்தை விட்டு மதுரை வந்து இருக்க இடமில்லாமல், குடிசை ஒன்றில் தனது 62-ஆவது அகவையில் காலமானார். இதனைக் கேள்வியுற்ற சி. எஸ். சாமண்ணா நிதி சேகரித்து இறுதிக் கிரியைகளை செய்தார்.[2]
பாலாமணி அம்மையாரின் கலைச் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "நாடக ராணி கையிலெடுத்த 'டம்பாச்சாரி '! - கண் விழித்த சினிமா 10". Hindu Tamil Thisai. 2025-03-07. Retrieved 2025-03-08.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 வெங்கட்ராமன், சட்டாம் பிள்ளை. அறந்தை மணியன் (ed.). தமிழ் நாடகக் கலைமணிகள். சென்னை: விஜயலட்சுமி பப்ளிசர்சு. p. 63-67.
- ↑ "தடைச் சட்டத்துக்கு அடிக்கல்! - கண் விழித்த சினிமா 11". Hindu Tamil Thisai. 2025-03-14. Retrieved 2025-03-25.
- தமிழ் இலக்கிய வரலாறு, வெங்கடராமன், கா. கோ, கலையக வெளியீடு.