வயலின்
விழையாழ் அல்லது வயலின் (பிடில்) (ⓘ) என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்கருவி ஆகும். இது பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வாசிக்கப்படுகின்றது. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது. எனினும், ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன. இவை சங்கீதத்தில் மிக முக்கியமானவை ஆகும். அத்துடன், பல வகையான சங்கீத வகைகளை வயலின் மூலம் வாசிக்கலாம்.
வரலாறு
தொகுஇக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் "Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது.[1] அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் புகழ் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி இருந்தது . ரோட்டில் வசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. [2] வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும், அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன. நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .
கருநாடக இசையில் வயலின்
தொகுதென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். கர்நாடக இசைக்கருவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணிசைக் கருவிகள் (melodic instruments). மற்றொன்று தாளக் கருவிகள் (percussion instruments). ஆகும். குரலுக்கு இணையாக இராகங்களையும், மெட்டுகளையும் (tunes) இசைக்கக்கூடிய கருவிகள் பண்ணிசைக் கருவிகள், புல்லாங்குழல், நாகசுரம், வீணை, வயலின் ஆகியவை பண்ணிசைக் கருவிகள். மண்டலின், கிளாரினெட், சக்ஸோபோன் ஆகிய மேலைநாட்டுக் கருவிகளும் தற்காலத்தில் கருநாடக இசையைத் தருகின்றன. தாளத்தின் நுட்பங்களை இசை, லய நயத்துடன் வாசிக்கும் கருவிகள் தாளக்கருவிகள். கருநாடக இசையில் முதன்மையான தாளக் கருவி மிருதங்கம். தவில் என்னும் கருவி நாகசுர இசையோடு இணைந்த ஒரு தாளக் கருவியாகும். வயலின் ஒரு நரம்புக் கருவி (stringed instrument). மேலைநாட்டு இசைக்கருவி. கி.பி. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கருநாடக இசையில் வயலின் ஒரு இன்றியமையாத கருவியாக உள்ளது. குரலிசைக்கு ஒப்ப எல்லா இசை நுணுக்கங்களையும் வயலினில் இசைக்கலாம். கர்நாடக இசையில் தனி நிகழ்ச்சி நிலையில் (solo concert) நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பக்க இசை நிலையிலும் (accompanying instrument) இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது .
வயலினின் கட்டமைப்பும் இயங்கும் விதமும்
தொகுவயலின் பல அளவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. வயலினின் முக்கியப்பகுதி மேபில் (maple) எனப்படும் மரத்தால் செய்யப்படுகிறது. அதற்கு மேல் கழுத்து போல் ஒர் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். அதன் முன்பகுதி கருங்காலி மரத்தால் (ebony) செய்யப்படுகிறது. அந்த மரத்தின் கடினமான அமைப்பும், சுலபமாக தேய்ந்து போகாத திறனுமே இந்த பகுதி செய்ய உபயோகப்படுத்தப்படுவதற்கு காரணம். இந்த பகுதியில்தான் கலைஞர்கள் தன் விரல்களை தந்தியின் மீது அழுத்தி வித விதமான ஓசைகளை எழுப்புவார்கள். இந்த கழுத்துபகுதியின் மற்றொரு விளிம்பில் தந்திகளின் அழுத்தத்தை கூட்ட குறைக்க குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வயலினின் எல்லா பகுதியும் ஒருவித கோந்து பொருளால் ஒட்டப்பட்டிருக்கும். வயலினின் மேல் பகுதியில் தந்திகளை நன்றாக இழுத்து பிடித்த படியான அமைப்பு இருக்கும் இதில் தந்திகளின் அழுத்தத்தை லேசாக சரி செய்து கொள்ளலாம். அதற்கு நடுவில் தந்திகளை தாங்கி பிடிக்க பாலம் என்ற ஒரு அமைப்பும் உண்டு. மேல் பகுதியில் தாடையை தாங்கி கொள்வதற்கான ஒரு பகுதியை (chin rest) வேண்டிபவர்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலர் வாசிக்கும் போது வேர்வை படாமல் இருக்க வயலினின் மேல் பகுதியில் துண்டு ஒன்றை போட்டு அதற்கு மேல் தன் தாடையை வைத்துக்கொள்வார்கள். வயலினில் உபயோகிக்கப்படும் நான்கு வெவேறு தடிமனான தந்திகள் முன்னொரு காலத்தில் ஆட்டின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இப்பொழுதெல்லாம் எஃகு கொண்டு உருவாக்கப்படுகிறது.தந்திகள் அவ்வப்போது அறுந்துவிடும் என்பதால் கலைஞர்கள் தங்களுடன் எப்போழுதும் உபரியாக சில தந்திகளை எடுத்து செல்வார்கள். வயலினின் இன்னொரு முக்கியமான பகுதி "போ"(bow) எனப்படும் வில். இதை கொண்டு தந்திகளை தேய்த்த வாரே விரல்களால் அழுத்தத்தை கூட்டி குறைத்து இசை உருவாக்கப்படுகிறது. சராசரியாக ஒரு வில் 29 இன்ச்கள் அல்லது (74.5 cms) வரை நீலம் இருக்கும். இந்த குச்சியின் ஊடே ஒருவிதமான பட்டை காணப்படும். இது வெள்ளை அல்லது சாம்பல் நிற ஆண் குதிரையின் வாலில் உள்ள முடியினால் செய்யப்படுகிறது. வில்லின் ஒரு முனையில் இந்த முடிக்கற்றை ஒட்டப்பட்டிருக்கும்,மறு முனையில் அதன் இறுக்கத்தை மாற்றிக்கொள்ள குமிழ்கள் உண்டு.
வாசிக்கும் நிலை
தொகுகருநாடக இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிப்பவர், மேடையின் தரையில் அமர்ந்து அல்லது கதிரையில் ஒருகால் மேல் மறு கால் போட்டு வாசிக்கின்றனர். வாசிக்கும் போது வலது காலை முன்னிறுத்தி அதனில் வயலினைத் தாங்குவர். இடதுகால் உள்ளே மடக்கப்பட்டிருக்கும். மேலைத்தேய சங்கீதத்தில் நின்று கொண்டும், இருந்துகொண்டும் வயலின் வாசிக்கப்படும். வயலினின் மேல் இடது பக்கத்தை நாடியினால் அழுத்திப் பிடித்தபடி வயலின் மேலைத்தேய சங்கீதத்தில் வாசிக்கப்படுகின்றது.
இசைவடிவத்தின் வகைகள்
தொகுதமிழிசை , நாட்டுப்புற இசை , கர்நாடக இசை , மெல்லிசை , திரையிசை , தமிழ் ராப் இசை , தமிழ் பாப் இசை , துள்ளிசை , தமிழ் ராக் இசை , தமிழ் கலப்பிசை போன்றவை இசை வடிவத்தின் வகைகளாக உள்ளன .
பிடில்
தொகுஇது ஒரு மேல்நாட்டு நரம்பிசைக்கருவி. மிடற்றிசையைப் பிடில் கருவியில் இசைக்கலாம் . மேல்நாட்டு இசைக்கருவியாக இருந்தாலும் , இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அமைக்கமுடியும்.
மின்சாரத்தில் இயங்கும் வயலின்கள்
தொகுதற்காலத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வயலின்கள் உள்ளன . இதன் மூலம் வாசிக்கும் பொழுது , இசையின் ஒலியை பெருக்குவதற்கு ஆம்ப்ளிபயர்ஸ் [amplifier] பொருத்தப்பட்டு இருக்கும் . இதனால் வயலின் ஒலியை கூட்டவோ குறைக்கவோ முடியும். இது இசை கச்சேரியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது . இது உறுதியான வடிவமைப்புடன் வருவதால் எளிதில் உடையாது .
கருநாடக இசை வயலின் மேதைகள்
தொகுஎம். எஸ். கோபாலகிருஷ்ணன்
தொகுஎம். எஸ். கோபாலகிருஷ்ணன் , கர்நாடக இசையில் தேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவர் பத்மசிறீ, கலைமாமணி, சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் சங்கீத கலாநிதி போன்ற விருதுகளைப் பெற்றவர். 2012ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியது.
குன்னக்குடி வைத்தியநாதன்
தொகுகுன்னக்குடி வைத்தியநாதன் (மார்ச் 2, 1935 - செப்டம்பர் 8, 2008) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
டி. என். கிருஷ்ணன்
தொகுடி. என். கிருஷ்ணன் தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார் எட்டாவது வயதில் தனது முதல் மேடைக் கச்சேரியை செய்தார். இளம் வயதிலேயே புகழ்வாய்ந்த பாடகர்களான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ‘இசை மற்றும் கலைகளுக்கான’ பள்ளியின் முதல்வராக பணியாற்றினார். 2006ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். உலகின் பல நாடுகளுக்கும் இசைப் பயணம் செய்துள்ளார்.
லால்குடி ஜெயராமன்
தொகுலால்குடி ஜெயராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர். இவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார். ஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார். இவர், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், கே. வீ. நாராயணசுவாமி, மகாராஜபுரம் சந்தானம், டி. கே. ஜெயராமன், மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, டி. வீ. சங்கரநாராயணன், டி. என். சேஷகோபாலன், போன்ற புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கும் புல்லாங்குழல் கலைஞர் மாலி போன்றோருக்கும் பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.
எல். சுப்பிரமணியம்
தொகுகேரளத்தைச் சேர்ந்த வி. இலக்சுமிநாராயண ஐயர் எனும் வயலின் இசைக் கலைஞரின் மூன்று மகன்களில் ஒருவர் எல். சுப்பிரமணியம். சுப்பிரமணியம் தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி சங்கர் என்பவரும் வயலின் இசைக் கலைஞர்களாவர். தந்தை இலக்சுமிநாராயண ஐயர் யாழ்ப்பாணம் இசைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர்களின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தது. பிறகு சென்னையில் நிலையாக குடியேறிவிட்டனர். சுப்ரமணியம் எம். பி. பி. எஸ். எனும் மருத்துவப் படிப்பு தேறியவர். எனினும் அவர் இசையினை தனது தொழிலாகக் கொண்டார்.
நாகை முரளிதரன்
தொகுநாகை ஆர். முரளிதரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை திருமதி கோமளவல்லியிடமிருந்து தனது 7 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து தனது வயலின் இசைப்பயிற்சியை ஆர். எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். மேடைகளில் கடந்த 40 ஆண்டுகளாக வயலின் வாசித்து வரும் இவர், பாடகர்கள் மறைந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் முதல் இன்றைய டி. எம். கிருஷ்ணா வரை அவர்களின் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.
மேலும் வாசிக்க
தொகு- ஆங்கிலத்தில்
- Galamian, Ivan (1999). Principles of Violin Playing and Teaching. Ann Arbor, Minnesota: Shar Products Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9621416-3-1.
- Strange, Patricia (2001). The Contemporary Violin: Extended Performance Techniques. Berkeley, California: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-22409-4.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Thede, Marion (1970). The Fiddle Book. Oak Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8256-0145-2.
- Bardfeld, Sam (2002). Latin Violin. Milwaukee, Wisconsin: Hal Leonard Publishing Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9628467-7-5.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - Stowell, Robin (1992). The Cambridge Companion to the Violin. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-39033-8.
- Beament, James (1992/1997). The Violin Explained - Components Mechanism and Sound. Wotton-under-Edge, Gloucestershire: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-816623-0.
{{cite book}}
: Check date values in:|year=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - Hill, William Henry (1902/1963). Antonio Stradivari, his life and work, 1644-1737. Chemsford, Massachusetts: Dover Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0486204251.
{{cite book}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|coauthors=
ignored (help)