புல உமிழ்ச்சி எக்சு கதிர் குழாய்

புல உமிழ்ச்சி எக்சு கதிர் குழாய் (field emission x-ray tube) என்பது ஒரு சிறப்பு வகை எக்சு-கதிர்க் குழாய் ஆகும். ஆரம்ப காலத்தில் புல உமிழ்ச்சிக் குழாய்களே இருந்தன. பேராசிரியர் வில்லெம் ரோண்ட்கன் பயன்படுத்தியதும் இப்படிப் பட்ட குழாய்களே. இதில் எதிர் மின்முனையானது சிறிய உள்குவிந்த குழியாடி போன்று இருந்தது. ஆனால் எக்சு கதிர்களைப் பெற புதிய புல உமிழ்ச்சிக் குழாய்களில் எதிர் மின்முனை மிகவும் மெல்லிய கம்பிவலையால் ஆனது. அதிக மின் அழுத்தம் மின்முனைகளுக்கிடையே செலுத்தப்படும் போது புல உமிழ்ச்சிக் காரணமாக இலத்திரன்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. வெப்பமூட்டி இலத்திரன்களைத் தோற்றுவிக்கத் தேவையில்லை. இப்படிப்பட்ட சிறப்புக் குழாய்கள் குழந்தைகளைப் படம் எடுக்கவும் நெஞ்சகப் படம் பெறவும் பயனாகின்றன. இப்படிப்பட்ட குழாய்களில் 1000 மில்லிஆம்பியர் வரையிலான குழாய் மின்னோட்டம் பெறமுடியும்.