புள்ளி அமைவுரு அச்சுப் பொறி
புள்ளி அமைவுரு அச்சுப் பொறி (Dot Matrix Printer) என்பது மையில் தோய்த்த நாடாவை எழுதுமுனை ஒரு குறித்த விதத்தில் தட்டுவதன் மூலம் அச்சீடு நடைபெறும் தாக்க அழுத்த அச்சுப் பொறி ஆகும். இதன் செயல்பாடு தட்டச்சுக் கருவியின் செயல்பாட்டை ஒத்திருக்கும். எனினும் தட்டச்சு போல் அல்லாது இதில் எழுத்துகள் புள்ளிகளின் கோர்வையாக உருவாக்கப்படும். டெய்ஸி சக்கர அச்சுப்பொறி, தட்டச்சுக் கருவி போலல்லாது, இதனால் பல்வேறு எழுத்துருக்களையும், சிற்சில வரைகலை(கிராஃபிக்ஸ்) வடிவங்களையும் அச்சேற்ற முடியும். பெரும்பாலான நிறுவனங்களில் அச்சீட்டுப் பணிகளுக்காக இந்த அச்சுப் பொறி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[1]
நிறைகள்
தொகுபுள்ளி அமைவுரு அச்சுப் பொறியின் மூலம் அச்சுப் பதிக்கும்போது பணச் செலவு மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த அச்சுப் பொறியில் படிவுத் தாளைப் பயன்படுத்தி ஒரு தடவையில் பல பிரதிகளை அச்செடுக்க முடியும். தனித் தனித் தாள்களில் அல்லாமல் ஒரே நீண்ட தாளிலும் அச்சு பதிக்க முடிவதால் தொடர் தரவு பதிவிற்கு பெரிதும் பயன்படும். மை நாடா சட்டென்று தீராது, கொஞ்சம் கொஞ்சமாக மங்கும் தன்மை கொண்ட காரணத்தால் எந்த அச்சு வேலையும் பாதியில் நின்று போகாது.
குறைகள்
தொகுபுள்ளி அமைவுரு அச்சுப் பொறியில் அச்சுப் பதிக்கும்போது கூடுதலான ஒலி உருவாகும்.[2] அதே போல இந்த அச்சுப் பொறியில் அச்சிடுவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதாவது, இதனுடைய அச்சிடும் வேகம் குறைவாகும். இதில் குறைவான பிரிதிறன் கொண்ட வரைகலை வடிவங்களையே அச்சிட முடியும். மேலும் வண்ண அச்சுக்களின் சாத்தியம் இப்பொறியில் வெகு குறைவு. எழுத்து மட்டுமே அச்சிடும் பொறிகளில் டெய்ஸி சக்கர அச்சுப்பொறியைக் காட்டிலும் இதன் அச்சுத் தரம் குறைவு.