பயிரிடும்வகை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பயிரிடும்வகை என்ற தலைப்பை மாற்றுக தொகு

இம்முறைமையின் கீழ் வரும் பயிர்கள் இயற்கையானவை அல்ல. பெரும்பாலானவை விரும்பத்தகுந்த இயல்புகளை, மரபணுமுறையில் செயற்கையாக ஒரு தாவரத்திற்குள் செலுத்தப்படுகிறது. எனவே, இப்பயிர்களை நாம் பயிராக்கும் வகை என அழைக்கலாம். ஏற்கனவே உள்ளதை, இயற்கையாக அப்படியே பயிராக இடுவதையே, பயிரிடும் வகை எனலாம். விக்சனரியில் த.இ.க.கழகம் தந்த மொழிபெயர்ப்பு தவறு ஆகும். எனவே, பயிராக்கும் வகை என்ற தலைப்புமாற்றம் குறித்து மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.ஏனெனில், இது தாவரவியல் துறைச்சொல் என்பதால் பல கட்டுரைகளில் பயன்பட உள்ளது--உழவன் (உரை) 02:10, 30 மார்ச் 2017 (UTC)

  • //இம்முறைமையின் கீழ் வரும் பயிர்கள் இயற்கையானவை அல்ல. பெரும்பாலானவை விரும்பத்தகுந்த இயல்புகளை, மரபணுமுறையில் செயற்கையாக ஒரு தாவரத்திற்குள் செலுத்தப்படுகிறது.// இந்தக் கருத்து இந்தக் கட்டுரை குறித்தாயின், தவறானது என நினைக்கிறேன். காரணம் இவை இயற்கையான முறையில் வளரும் தாவரங்களில், நமக்கு விரும்பத்தக்க இயல்புகளைக் கொண்டிருக்கும் தாவரங்களை தெரிந்தெடுத்து (selection) பயிரிடுவதன் மூலமும் பெறப்படும். அதாவது மரபணு மாற்றுப் பயிர் அல்ல. நாம் விரும்பும் இயல்புள்ள தாவரத்தை, தெரிவுசெய்து, அதனை பதி வைத்தல், ஒட்டுதல், அரும்பொட்டல் போன்ற செயல்களின் மூலம், பயிருடும் வகையை உருவாக்குகிறோம்தானே. இது ஒருபுறமிருக்க, கட்டுரையில் பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகை என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் பயிராக்கும் வகைக்கும் வேறுபாடு சரியாகப் புரியவில்லையே. Cultivar என்பதை நான் Cultivated variety என்று புரிந்துகொள்கிறேன். ஆங்கில விக்கியில் "The origin of the term "cultivar" arises from the need to distinguish between wild plants and those with characteristics that have arisen in cultivation" என்று உள்ளது. இது பயிரிடும் வகையை காட்டு வகைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.--கலை (பேச்சு) 18:37, 30 மார்ச் 2017 (UTC)
  • இதையும் பாருங்கள். மேலும், பயிராக்கும் வகை என்பதன் மூலம், மரபணு மாற்றுப் பயிர் போல, நாங்கள் செயற்கையாக உருவாக்கும் பயிர் என்று குறிப்பிட விரும்புகிறீர்களாயின், அது இந்த இடத்தில் பொருந்தாது என்றே தோன்றுகிறது.--கலை (பேச்சு) 20:29, 30 மார்ச் 2017 (UTC)
  • காட்டு இனங்களில் இருந்து அப்படியே பயிரிடுவதில்லை. தேவையான (வணிக) இயல்புகள், ஆய்வகங்களில் உட்புகுத்தப்படுகின்றன. அந்த உட்புகும் இயல்பு, அறுவடைப்பொருளுடன் சந்தைக்கு வரும் வரையே பெரும்பாலும் உதவுகிறது. சந்தைவரை கொண்டு வருதலே, அந்த உற்பத்தியாளரின் (cultivar) நோக்கம். அதை உண்ணும் இறுதி பயனாளருக்கு ஏற்படும் உடல்நல தாக்கங்களே மிகுந்த சிந்தனைக்கு உரியது. எடுத்துக்காட்டாக, பி.டி. கத்தரிக்காய், en:Cavendish banana(பெங்களூரு வாழை) நீங்கள் கூறிய ஆங்கில அகரமுதலி பின்வருமாறு கூறுகிறது. // strain originating and persistent under cultivation// இந்த //strain originating// என்பதையே, நான் செயற்கை முறை என புரிந்து கொள்கிறேன். அதனையே en:Cavendish banana கட்டுரை உறுதி செய்கிறது. //Because cultivated bananas are propagated by conventional vegetative reproduction rather than through sexual reproduction, each of the Cavendish clones are genetically identical and evolve disease resistance more slowly.// எனவே, தற்போதுள்ள பெயர், பயிரை காட்டு இனங்களில் இருந்து, வேளாண் நிலத்தில் அப்படியே, இயற்கையாக இடுதலைக்(பயிரிடும் வகை) குறிக்கிறது. உண்மையில் உணவு, உடல்நலம் என்பதை கருத்திற்கொண்டு, செயற்கை முறையில் உருவாக்கும் பயிர் வகைகளை எங்ஙனம் அழைப்பது? உங்கள் பரிந்துரையை எதிர்நோக்குகிறேன். பயிராக்கும் வகை என்பதில் ஆக்கும் என்பது அச்செயற்கை ஆய்வக உட்புகுத்தும் முறைகளை மறைமுகமாக உணர்த்துவதை விட நேரடியாக உணர்த்த என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.--உழவன் (உரை) 02:49, 1 ஏப்ரல் 2017 (UTC)
  • //காட்டு இனங்களில் இருந்து அப்படியே பயிரிடுவதில்லை. தேவையான (வணிக) இயல்புகள், ஆய்வகங்களில் உட்புகுத்தப்படுகின்றன. அந்த உட்புகும் இயல்பு, அறுவடைப்பொருளுடன் சந்தைக்கு வரும் வரையே பெரும்பாலும் உதவுகிறது. // இந்தக் கட்டுரைபற்றிய, உங்களுடைய இந்தக் கருத்தில்தான் எனது குழப்பம். ஆய்வகங்களில் ஆய்வுகள் எதுவும் இல்லாமலே, முற்காலத்தில் மனிதர்கள் காட்டு இனங்களில் இருந்து, விரும்பிய இயல்புள்ள தாவரங்களைத் தேர்ந்தெடுத்து நடுகை செய்து உருவாக்கிய வகைகளும், மேலும் அப்படித் தெரிந்தெடுத்த வகைகளை கலவியற்ற இனப்பெருக்க முறைகளின் மூலம் அல்லது சிறந்த இயல்புகளைக் கொண்ட தனியன்களில் இருந்து பெறப்பட்ட விதைகளின் மூலம் பேணிப் பாதுகாத்து உருவாக்கிய வகைகளும் இந்த பயிரிடும் அல்லது பயிரிடப்படும் வகைகளில் அடங்கும் என்பதே எனது கருத்து. அவ்வாறாயின், புதிதாக ஒன்றை உருவாக்கம் செய்யாமல், ஏற்கனவே இருந்த ஒரு வகையிலிருந்து தொடர்தெரிவு மூலம், அதற்கென தனியான இயல்புகள் பல சந்ததியூடாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு உருவாகிய வகைகளும் இங்கே அடங்குகின்றனவல்லவா?
மேலும், செயற்கை முறைகள் மூலம் உருவாக்கப்பட்ட இனங்களாயினும், அவை பயிரிடப்படும் வகைகளாக இருப்பின், அவற்றை காட்டு வகைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, அவற்றைப் பயிரிடும் அல்லது பயிரிடப்படும் வகைகள் (Cultivated varieties = Cultivar) எனக் கூறுவதில் பிரச்சனை இல்லையென்றே நினைக்கிறேன். //செயற்கை முறையில் உருவாக்கும் பயிர் வகைகளை எங்ஙனம் அழைப்பது? உங்கள் பரிந்துரையை எதிர்நோக்குகிறேன். பயிராக்கும் வகை என்பதில் ஆக்கும் என்பது அச்செயற்கை ஆய்வக உட்புகுத்தும் முறைகளை மறைமுகமாக உணர்த்துவதை விட நேரடியாக உணர்த்த என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை// நீங்கள் கூறும் பயிராக்கும் வகை என்பதில் 'ஆக்கும்' என்பது ஏன் என்று இப்போது புரிகின்றது. இந்த கட்டுரையின் உள்ளேயே நீங்கள் குறிப்பிடும் செயற்கையான வகைகளையும் சேர்த்து, அவற்றைப் பயிராக்கும் வகைகளாகக் குறிப்பிட்டு, அவற்றின் நன்மை தீமைகளையும் அங்கேயே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். Cultivar ஆங்கிலக் கட்டுரையில், அவ்வாறு genetically modified cultivars பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுபோல, இந்தக் கட்டுரையின் பெயரை மாற்றாமல், இந்தக் கட்டுரையின் உள்ளேயும் செயற்கையான பயிராக்கும் முறைகளை விபரித்து, அதன்மூலம் உருவாகும் பயிரிடும் வகைகளைக் குறிப்பிட்டு விரிவாக்கம் செய்யலாம் என்பது எனது கருத்து. --கலை (பேச்சு) 08:58, 1 ஏப்ரல் 2017 (UTC)

கலை! சரி கட்டுரையை விரிவாக்குகிறேன். இருப்பினும், இது பொதுவான தமிழ்ச்சொல்லாகவே எண்ணுகிறேன். எல்லா பயிர்களும் திலத்தில் இடப்படுவது தானே. எனவே, இப்பயிர்களின் வேறுபாடுகளை உணர்த்த; வேண்டியதை விளைவிக்கும் பயிர் என்பதால் விளைபயிர் வகை எனலாமா? @செல்வா: வணக்கம். Cultivar என்ற தாவரவியல் துறைச் சொல்லுக்கு, பொருத்தமான தமிழாக்கம் படைக்கக் கோருகிறேன். --உழவன் (உரை) 02:41, 2 ஏப்ரல் 2017 (UTC)

பயிர் என்றாலே cultivar என்பதுதான். பயிர்த்தொழில் என்பது தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பயிர்களை வளர்த்தெடுத்து அறுவடை செய்து பயன்கொள்வது. அதாவது காட்டுவின செடிகொடிகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது பயிர். ஆனால் இச்சொல் மரங்கள் போன்றவற்றுக்குப் பயன்படுவதன்று. cultivar என்பதன் விளக்கம் a plant variety that has been produced in cultivation by selective breeding. இச்சொல் 1923 முதல்தான் வழக்கில் உள்ளது. cultivated variety என்பதன் கூட்டுச்சொல். நாம் பயிரினவகை எனலாம். தேர்ந்து பயிரடப்பட்டு வளர்க்கும் ஒரு வகை என விளக்கலாம். மரவகைகளுக்கு செய்வகையினம் எனலாம். --செல்வா (பேச்சு) 23:05, 3 ஏப்ரல் 2017 (UTC)
  • Cultivar என்ற சொல்லின் உருவாக்கத்தையும், உயிரியல் வகைப்பாட்டியலில் அதன் இடத்தையும் கருத்தில் கொள்ளும்போது, அதனை பயிர் (Crop) என்ற பொதுவான சொல்லைக்கொண்டு விளக்குவதும் சரியாகப்படவில்லை. உண்மையில் குறிப்பிட்ட ஒரு இனத்தின் (species) உள்ளேயே வரக்கூடிய வேறுபட்ட வகை (variety) என்றுதான் cultivar என்பதனை நோக்க வேண்டும் என நினைக்கிறேன். இதே காரணத்தால், 'இனம்' என்பதையும் தவிர்த்தல் நன்று எனத் தோன்றுகிறது.--கலை (பேச்சு) 16:44, 4 ஏப்ரல் 2017 (UTC)
குறிப்பிட்ட பொருளானது பயன்பாட்டால் நேர்வது. அது சொல்லால் மட்டும் உருவாக்கபடுவதன்று. பயிர் என்பது பொதுவாக 'crop என ஆங்கிலத்திலே சொல்வதற்கு ஒப்பானது என்று அறிந்தும், பயிர் என்பதே cultivar என்பதை உரைத்தேன். செய்பயிர் அல்லது தெரிவுப்பயிர் தேர்பயிர், வளர்தெரிவுப்பயிர் எனப் பலவாறு விளக்கலாம். பெரும்பாலான நேரங்களில் ஒரு சொல்லின் துல்லியப்பொருள் என்பது பலவாறு புழங்கும்பொழுதே உறுதிப்படும். சொல் என்பது ஒரு குறிப்பே. வெறும் பயிர் என்னும் சொல்லுக்கே இருபொருள் கொள்ளுவதாகக் கொள்ளலாம். பயிர் என்பதற்குப் பொதுவாக crop என்பது போன்ற பொருளும், சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரித்து வளர்த்தெடுக்கப்பட்ட மாறுபட்ட வளரினமான பயிர் என்றும் கொள்ளலாம். 'இனம்' என்பதும் நேரடியாக ஆங்கிலத்தோடு தொடர்புபடுத்திப் பொருள்கொள்வது சிக்கலுண்டாக்கும். --செல்வா (பேச்சு) 18:09, 4 ஏப்ரல் 2017 (UTC)
cultivar என்பதை வகைப்பயிர் எனக்கூறலாம்.--செல்வா (பேச்சு) 18:24, 4 ஏப்ரல் 2017 (UTC)
  • நன்றி செல்வா! எனக்கு பொதுவாகவே தமிழ்ச் சொற்களைக் கண்டு பிடிப்பதில் சிக்கலுண்டு :). நாம் ஏற்கனவே அறிந்திருப்பவற்றையும், முக்கியமாகப் பாடநூல்களில் இருப்பவற்றையும் குழப்பிக்கொள்ள வேண்டாமே என்று எண்ணியே அவ்வாறு சொன்னேன். ஆங்கிலத்தோடு தொடர்புபடுத்தியதை விட, பயிர், இனம் போன்ற சொற்களை எவ்வாறு இதுநாள்வரை விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும், எவ்வாறு தமிழ்விக்கியில் பயன்படுத்தி இருக்கிறோம் என்பதையும் கருத்தில் கொண்டே அவ்வாறு சொன்னேன். அவ்வாறான சொற்களிலிருந்து, இதனை வேறுபடித்திக் கூறினால் இலகுவாக இருக்கும் என நினைத்தே கூறினேன். ஏற்கனவே எழுதப்பட்டிருப்பவையோடு குழப்பிக் கொள்ளாமல், அதே நேரம், சரியான பொருளையும் தரும்படியான சொல்லையே தேடினேன். மேலும், ஒரு குறிப்பிட்ட இனத்திலேயே, வெவ்வேறு cultivars இருக்கும் என்பதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன். Cultivars தெரிவின் மூலமும், கலவியற்ற இனப்பெருக்க முறைகள் மூலமும் பெறப்படுவன என்றே நான் எண்ணியிருந்தேன். ஆனால், த.உழவன் இன் கேள்விக்குப் பின்னர்தான் தேடியபோது, முக்கியமாகத் தெரிவின் மூலம் பெறப்படுவதாக இருந்தாலும், genetically modified cultivars உம் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். எனவேதான், அவற்றையும், கட்டுரைக்குள் சேர்க்கலாம் என எண்ணினேன்.--கலை (பேச்சு) 21:36, 4 ஏப்ரல் 2017 (UTC)
நன்றி கலை.   விருப்பம்
  • உரையாடலில் தொடர்ந்து, கலைச்சொல் உருவாக்கத்திற்கு உதவிய செல்வா, கலை ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.
    • கலை! இப்புதிய ( வகைப்பயிர் )தாவரவியல் துறைச்சொல்லிற்கு இப்பக்கத்தினை நகர்த்தி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--உழவன் (உரை) 01:30, 6 ஏப்ரல் 2017 (UTC)
வணக்கம் த.உழவன்! செல்வா கொடுத்துள்ள விளக்கங்களில் இருந்து, பயிரிடும்வகை என்பது cultivar என்பதற்குப் பொருந்தாத சொல் என்ற கருத்து வரவில்லை என்றே தோன்றுகிறது. மேலும் அவர் கூறியதன்படி (//"பெரும்பாலான நேரங்களில் ஒரு சொல்லின் துல்லியப்பொருள் என்பது பலவாறு புழங்கும்பொழுதே உறுதிப்படும். சொல் என்பது ஒரு குறிப்பே."//) பல்வேறு சொற்களையும் கட்டுரையின் உள்ளேயே அறிமுகப்படுத்தலாம். நீங்கள் கூறியதன்படி மரபணுமாற்றுப் பயிர்களும், இந்த வகைக்குள் அடங்கும் என்பதால், தெரிவால் ஏற்படும் வகை மட்டுமல்ல என்பதனால் தெரிவுப்பயிர், தேர்பயிர், வளர்தெரிவுப்பயிர் என்பவற்றைத் தவிர்க்கலாம். பயிரிடும்வகை என்ற சொல்லும் cultivar என்பதற்குப் பொருத்தமானதே என்றதனாலும், த.இ.க.கழகம் தந்த மொழிபெயர்ப்பாகவும், புழக்கத்திலும் இருப்பதனால் கட்டுரைத் தலைப்பை மாற்றுதல் அவசியமில்லைத்தானே?--கலை (பேச்சு) 11:28, 9 ஏப்ரல் 2017 (UTC)
பயிரிடும்வகை என்பதற்கு பயனர்:செல்வா கொடுத்த விளக்கமும், வகைப்பயிர் என்ற சொல்லாக்கமும் மிகப்பொருத்தமானதாகவே ஆகும். தொடக்கத்தில் பயிரிடும் வகை என்ற படித்த போது, பயிரிடா வகை என்று ஒன்று உண்டா என மனதில் தோன்றியது, அதனால் செல்வாவிடம் ஆலோசனைக் கேட்டேன். ஆனால், அவர் செவ்வனே கூறியும் தொடர்ந்து அதே சொல் இருப்பது எனக்குப் பொருத்தமாகப் படவில்லை.--உழவன் (உரை) 13:05, 13 மே 2017 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பயிரிடும்வகை&oldid=2914957" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பயிரிடும்வகை" page.