பொய்கையார்

பொய்கையார் சங்ககாலப் புலவர். இவரது மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை: நற்றிணை 18, புறநானூறு 48, 49 ஆகியவை.

இவர் வறுமையில் வாடும் புலவர்களைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுபடுத்துகிறார்.

பாடல் சொல்லும் செய்தி

தொகு

தொண்டி அரசன்

தொகு
கோதை தொண்டித் துறைமுகத்தில் நீராடுவானாம். அவன் மார்பில் அணிந்த கோதை மலர்களிலிருந்தும், அவனைத் தழுவும் கோதையர் அணிந்த கோதை மலர்களிலிருந்தும், கழியில் மலர்ந்த நெய்தல் பூக்களிலிருந்தும் தேன் ஒழுகி அத்துறை மணக்குமாம்.[1]

ஓங்குவாட் கோதை

தொகு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலப்பகுதிகளும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. குறிஞ்சி நிலத்துப் புனவன் கிளி ஓட்டத் தட்டையை முழக்கினால், கழனியிலும், சேர்ப்பிலும் மேயும் பறவைகள் ஒருங்கே எழுந்து ஓடுமாம். அதனால் கோதையை குறிஞ்சிநிலத்து நாடன் என்று கூறுவதா, முல்லைநிலத்து நாடன் என்று கூறுவதா, மருதநிலத்து ஊரன் என்று கூறுவதா, நெய்தல்நிலத்துச் சேர்ப்பன் என்று கூறுவதா என்று புலவருக்கு விளங்கவில்லையாம்.[2]

பொறையன், மூவன்

தொகு
பொறையன் எனப் போற்றப்பட்ட சேரன் ஒருவன் தொண்டி நகரில் இருந்துகொண்டு அரசாண்டு வந்தான். அவன் தன் பகைவன் மூவன் என்பவனின் பல்லைப் பிடுங்கிக் கொண்டுவந்து தொண்டியிலிருந்த தன் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான்.[3]

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 48
  2. புறநானூறு 49
  3. நற்றிணை 18

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்கையார்&oldid=3411714" இலிருந்து மீள்விக்கப்பட்டது