மகாபாரத காலத்தில் வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

இந்தியத் தொன்மவியலில் இதிகாசங்கள் அவற்றுக்கும் முந்தைய வேதங்கள், அவற்றின் விளக்கங்களான உபநிடதங்கள் போன்றவற்றில் இருக்கின்ற சில செய்திகளும் கருத்துக்களும், இன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்படுகின்ற சுற்றுச் சூழல் சமநிலை பற்றிய பிரக்ஞை அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது என்று கோடிகாட்டுகின்றன.


ஐந்து முக்கிய வேள்விகள் தொகு

உபநிடதங்களில் விளக்கப்படுகின்ற ஐந்து முக்கிய வேள்விகளில் (பஞ்ச மஹா யக்ஞம்), பூத யக்ஞம் ஒன்று.

1. தேவ யக்ஞம்: தொகு

பூஜை முதலானவை. இறைவனிடம் பெற்றதை இதன் மூலம் அவனுக்கே திருப்பிக் கொடுப்பது.

2.ரிஷி யக்ஞம்: தொகு

சாத்திரங்களைப் படித்தல், படித்ததைக் கற்பித்தல். குருவிடம் பெற்ற அறிவைச் சரியான வழியில் செலவிட்டு அதன் மூலம் திருப்பிக் கொடுத்தல்.

3. பித்ரு யக்ஞம்: தொகு

பெற்றோருக்கான கடமைகளைச் செய்தல் முன்னோர் பெருமையை நிலை நாட்டும் வண்ணம் வாழ்தல். இதன் மூலம் பெற்றோரும் முன்னோரும் நமக்கு அளித்த சிறப்புகளைத் திருப்பிக் கொடுத்தல்

4.நர யக்ஞம்: தொகு

சக மனிதர்களுக்கு உதவுதல். சமுதாயத்திடம் இருந்து நாம் பெற்றதை நம்முடைய நற்செயல்கள் பிரதிஉபகாரங்கள் மூலம் திருப்பிக் கொடுத்தல்.

5. பூதயக்ஞம்: தொகு

பிற உயிரினங்களுக்கும் (பஞ்ச பூதங்களுக்கும்) இயற்கைக்கும் உதவுதல்.

இந்த ஐந்து வேள்விகளின் மூலம் நாம் பிற உயிர்களுடன், பிற மனிதர்களுடன், பெற்றோருடன், பெரியவர்களுடன், இயற்கை சக்திகளுடன் இயைந்து வாழ வேண்டிய ஒழுக்க முறை விளக்கப்பட்டுள்ளது.

மகாபாரதம் தரும் செய்தி தொகு

துவைத வனத்தில் பாண்டவர்களின் வனவாசம் தொகு

பாண்டவர்களின் வனவாசத்தின் போது, அவர்கள் துன்பத்தில் இருப்பதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டான் துரியோதனன். அவர்கள் தங்கி இருக்கும் துவைத வனப் பகுதியில் இருக்கும் இடையர் சேரிகளில் உள்ள கால்நடைகளைக் கணக்கெடுத்து கண்காணித்து விட்டு வருவது என்கிற அரசப்பணியைக் காரணமாக்கி அங்கே சென்று வர திருதராஷ்டிரனிடம் அனுமதி வேண்டினான். இதற்கு திருதராஷ்டிரனின் அனுமதியும் ஆசியும் கிடைக்க, துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி உள்ளிட்ட குழுவினர் தம் சிறுபடை பட்டாளம், பரிவாரங்களுடன் அங்கே சென்று முதலில் இடையர் சேரி கால்நடைக் கணக்கெடுப்பு வேலைகளை முடித்தார்கள். பாண்டவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருந்த பொய்கை ஒன்றின் கரையில் அடுத்த கூடாரம் அமைத்துத் தங்கத் திட்டமிட்டார்கள்.

சித்திரசேனனுடன் யுத்தம் தொகு

அதே இடத்தில் கந்தர்வர்களின் தலைவன் சித்திரசேனனும் தன் படைகளுடன் தங்கி இருந்தான். துரியோதனன் குழுவினர் அங்கே வருவதற்கு அவன் ஆட்சேபம் தெரிவித்தான்.

கோபம் கொண்ட துரியோதனன், சித்திரசேனன் படைப்பிரிவினருடன் போர் தொடங்கினான். கந்தர்வர் படை அந்த நேரத்தில் பெரிதாக இருந்தது. அதோடு சித்திரசேனன் பல மாய அஸ்திரங்கள் வைத்திருந்தான். கர்ணன் உள்ளிட்ட எல்லோரையும் துரத்தி விட்டு, துரியோதனனைக் கயிற்றில் கட்டித் தன் தேர்த் தட்டில் போட்டு விட்டான் சித்திரசேனன்.

துரியோதனன் துன்பத்தில் இருப்பதை அறிந்த தர்மன், தன் சகோதரர்களின் மறுதலிப்புகளையும் மீறி, அவனுக்கு உதவ சிதறி ஓடியிருந்த கௌரவர் படைகளை ஒன்று திரட்டி சித்திரசேனனுடன் போருக்குக் கிளம்பினான்.

தர்மனைப் பார்த்ததும் மனம் மாறிய சித்திரசேனன் துரியோதனனை மன்னித்து அவிழ்த்து விட்டான்.

தர்மன் கண்ட கனவு தொகு

தொடர்ந்து பாண்டவர்கள் அந்த வனப்பகுதியிலேயே வேட்டையாடிக் காலம் கழித்து வந்தனர். இது நிகழ்ந்து சில நாட்கள் கழித்து ஒருநாள் தர்மன் ஒரு கனவு கண்டான். அதில்,வனவிலங்குகள் ஒன்று சேர்ந்து வந்து, "நீங்கள் இங்கே தங்கி இருந்து வேட்டையாடியதாலும் உங்களை முன்னிட்டு நடந்த போர்ச் சேதங்களாலும் எங்கள் இனம் ஒட்டு மொத்தமாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இனவிருத்தி செய்து கொள்ளத் தேவையான எண்ணிக்கையினரே மிச்சமிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் இங்கே தொடர்ந்து இருந்தீர்கள் என்றால் எங்கள் இனவிருத்தி சாத்தியமில்லாமல் போவதோடு நாங்களும் ஒட்டு மொத்தமாக அழிந்து போவோம். அது உங்களுக்குச் சம்மதம் தானா?" என்று கேட்டுக் கதறின.

இந்தக் கதறலில் திடுக்கிட்டுக் கண்விழித்த தர்மன் சிந்திக்க ஆரம்பித்தான். சகோதரர்களிடம் சொல்லி உடனடியாக துவைத வனத்தினை விட்டு இடம் பெயர்ந்தான்.

ஆதாரம் தொகு

இராஜாஜி எழுதிய "மகாபாரதம்"