மங்கலப் பொருட்கள்

மங்கலம் தரும் பொருட்கள் என்பவை நன்னிமித்தம் காட்டும் பொருட்கள். அதாவது நல்ல அறிகுறி காட்டும் பொருட்கள். இது ஒருசார் மக்களிடையே காணப்பட்ட நம்பிக்கை உணர்வு. பெருங்கதை என்னும் நூல் மங்கலம் தரும் பொருட்கள் 16 எனக் குறிப்பிட்டு அவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. [1] பெருங்கதை நூலைப் பதிப்பித்த உ.வே. சாமிநாதையர் இவற்றிற்கு மங்கலங்கள் பதினாறு என்று தலைப்பிட்டுக் காட்டியுள்ளார். பொருட்கள் அரசனுக்கு நன்மை பயப்பனவாக இருப்பதை உணரமுடிகிறது. இதனால் மங்கலம் என்னும் சொல் நன்மை என்பதை உணர்ந்துகொள்ளலாம். சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துக் காதை காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீதறுக [2] [3] என்று கூறும் நன்மை தரும் வாழ்த்தால் பெயர் பெற்றிருப்பதும் இதனால்தான்.

மங்கலம் தரும் பொருள் தொகு

  1. அயில்முனைவாள் (கூர்மையான வாள்)
  2. வயிரத்தோட்டி (யானையைச் செலுத்தும் வயிரம் பாய்ந்த அங்குசம்)
  3. கொற்றக்குடை (வெண்கொற்றக் குடை)
  4. பொற்பூங்குடம் (அழகிய பூ மிதக்கும் நிறைகுடம்)
  5. வலம்புரிவட்டம் (ஆலவட்ட விசிறி)
  6. இலங்கொளிச்சங்கு (வெண்சங்கு)
  7. வெண்கண்ணாடி (தன்னிறம் காட்டாத கண்ணாடி)
  8. செஞ்சுடர் விளக்கு (சிவப்பு நிறத்தில் சுடர் விட்டு எரியும் விளக்கு)
  9. கவரி (கவரி விசிறி)
  10. கயல் (மீன் தொட்டி வகை)
  11. தவிசு (அரியணை)
  12. திரு (செல்வக்குவியல்)
  13. முரசு
  14. படாகை (கொடி)
  15. அரசியலாழி (ஆட்சிச்சக்கரம்)
  16. ஒண்வினைப் பொலிந்த வோமாலிகை (மணம் வீசும் பொருள்கள்)

நிகழ்வு தொகு

அரசன் உதயணன் நீராடச் செல்லும்போது மகளிர் இந்த மங்கலப் பொருட்களை ஏந்தியவண்ணம் முன்னே அணிவகுத்துச் சென்றனராம். பாடல் இவற்றைக் கடிமாண் மங்கலம் என்று குறிப்பிடுகிறது. எண்ணிரண்டு (16) என்று அவற்றின் எட்டிக்கையையும் குறிப்பிடுகிறது. மகளிர் இவற்றை முடிமீது சுமந்து சென்றனராம். இந்த மகளிர் அணிவகுப்புக்குப் பாதுகாவலாக வேலும் வாளும் கோலும் தாங்கிய காவலர்களும் சென்றனராம். இவை அக்காலப் பழக்கவழக்கங்களைத் தெரிவிக்கின்றன.

அடிக்குறிப்பு தொகு

  1. அயின்முனை வாளும் வயிரத் தோட்டியும்
    கொற்றக் குடையும் பொற்பூங் குடமும்
    வலம்புரி வட்டமு மிலங்கொளிச் சங்கும்
    வெண்கண் ணாடியுஞ் செஞ்சுடர் விளக்கும்
    கவரியுங் கயலுந் தவிசுந் திருவும் 30
    முரசும் படாகையு மரசிய லாழியும்
    ஒண்வினைப் பொலிந்த வோமா லிகையுமென்
    றெண்ணிரண் டாகிய பண்ணமை வனப்பிற்
    கடிமாண் மங்கலங் கதிர்வளை மகளிர்
    முடிமிசை யேந்தி முன்னர் நடப்ப 35
    வேலும் வாளுங் கோலுங் கொண்ட
    காவ லிளையர் காவல் கொள்ள - பெருங்கதை 2 5 மண்ணுநீர் ஆட்டியது

  2. சிலப்பதிகாரம், மங்கலவாழ்த்துக்காதை
  3. சிலப்பதிகாரம், இந்திர விழவு ஊர் எடுத்த காதை

    மங்கல நெடுங் கொடி வான் உற எடுத்து-
    மரகதமணியொடு வயிரம் குயிற்றி,
    பவளத் திரள் கால், பைம் பொன் வேதிகை,
    நெடு நிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்,
    கிம்புரிப் பகு வாய்க் கிளர் முத்து ஒழுக்கத்து, 150

    மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
    தோரணம் நிலைஇய, தோம் அறு பசும் பொன்
    பூரண கும்பத்து, பொலிந்த பாலிகை,
    பாவை விளக்கு, பசும் பொன் படாகை,
    தூ மயிர்க் கவரி, சுந்தரச் சுண்ணத்து, 155

    மேவிய கொள்கை வீதியில் செறிந்து

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கலப்_பொருட்கள்&oldid=2930420" இலிருந்து மீள்விக்கப்பட்டது