மது பாலகிருஷ்ணன்
மது பாலகிருஷ்ணன் (Madhu Balakrishnan பிறப்பு:24 சூன் 1974) மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடும் ஓர் இந்தியத் திரைப்படப் பாடகராவார்.[1]
மது பாலகிருஷ்ணன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 24 சூன் 1974 திருப்புனித்துறை, கொச்சி, கேரளா, இந்தியா |
இசை வடிவங்கள் | திரை இசை, கருநாடக இசை, பஜன் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1999–நடப்பு |
வாழ்க்கை வரலாறு
தொகுமது பாலகிருஷ்ணன் கேரளத்தைச் சேர்ந்த கொச்சி மாமன்னரின் தலைநகராகத் திகழ்ந்த திருப்புனித்துறையில் பிறந்தவர். சென்னையில் உள்ள இந்திய இசை மற்றும் கலை அகாடமியில் இசையில் பட்டம் பெற்று அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் தரப்படுத்தப்பட்ட கலைஞராக பணியாற்றியுள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் மாதவன் என்ற மகனும் உள்ளனர். துடுப்பாட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இவரது மனைவியின் தமையனாவார்.[1]
சிறுவயதில் ஸ்ரீதேவி மற்றும் சந்திரமனா நாரயணன் நம்பூதிரியிடம் கருநாடக இசை பயிற்சியைத் துவக்கிய மது சென்னையில் டி.வி.கோபாலகிருஷ்ணன், மணி கிருஷ்ணசாமி மற்றும் வேதவல்லி ஆகியோரிடம் மேற்பயிற்சி பெற்றுள்ளார்.
இசைப்பயணம்
தொகு2002 ஆம் ஆண்டு "வால்கண்ணாடி" என்ற மலையாளத் திரைப்படத்தில் இவரது "அம்மே அம்மே" என்ற பாடலுக்கு கேரள அரசு மாநில விருது கிடைத்தப்பிறகு புகழ் பெறத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து 90 மலையாளம், 65 கன்னடம், 45 தெலுங்கு மற்றும் 65 தமிழ்த் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். சமய வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் பிற திரையிசை தவிர்த்த பாடல்கள் கூடுதல் எண்ணிக்கையில் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கன சில :
- "கொஞ்சநேரம் கொஞ்சும் நேரம்" - ஆஷா போன்சலேயுடன் (சந்திரமுகி)
- "கனாக் கண்டேனடி" (பார்த்திபன் கனவு)
- "குட்டநாடன் காயலிலே" (காழ்ச்ச- மலையாளம்)
- "கனாக் கண்டேனடி சாரதே" (ஆப்தமித்ரா - கன்னடம்)
2010 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் நான் கடவுள் திரைப்படத்திற்காக இவர் பாடிய "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" என்ற பாட்டு மிர்ச்சி இசை விருது பெற்றுள்ளது. இளையராஜாவின் "திருவாசகம்" இசைக்கோப்பிலும் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "© 2015 www.madhubalakrishnan.com - About Madhu". www.madhubalakrishnan.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.