முதன்மை பட்டியைத் திறக்கவும்

மரபணு திடீர்மாற்றம் (ஆங்கிலம்: Genetic mutation) என்பது மரபணுத்தொடரில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும். இது மரபணு விகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் அம்மரபணுத் தொடர் புரதமாக வெளிப்படுத்தப்படுதலைப் பாதிக்கும். இம்மாற்றங்களை ஏற்படச் செய்யும் காரணிகளை திடீர்மாற்றநச்சுகள் என அழைக்கலாம். புற ஊதாக் கதிர்கள், பலவித நச்சு வாயுக்கள் மற்றும் பலவித நச்சு வேதிகள் காரணிகளாகச் செயல்படுகின்றன. ஆயினும், திடீர்மாற்றங்கள் இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது. இந்த திடீர்மாற்றங்களை செயற்கையாகத் தூண்டுவதன் மூலம், ஒரு நுண்ணுயிரியில் வேண்டிய நொதிகள் மட்டும் மிகுதியாக சுரக்குமாறு செய்ய இயலும். இதன் மூலம் அந்த நொதிகளின் உற்பத்தியை மிகுதிப்படுத்த இயலும். தொழிலங்களில் இம்முறை மிக வேண்டத்தக்கதாகும்.

புற்று நோய், பரிணாமம், நோயெதிர்ப்புத் தொகுதியின் வளர்ச்சி போன்றவற்றில் மரபணு விகாரம் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. மரபணு விகாரங்கள் பொதுவாக விகாரத்துக்குட்பட்ட உயிரினத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. சில வேளைகளில் உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கலாம். உதாரணமாக புகையிலையில் காணப்படும் நிக்கோட்டின், பென்ஸோ(a)பைரீன் உள்ளடங்கலான விகாரலாக்கிகள் நுரையீரலின் மேற்றோற்கலங்களில் விகாரங்களைத் தூண்டி புற்று நோயை உருவாக்கும். விகாரங்களுக்குட்பட்ட மரபணுக்களால் உருவாக்கப்படும் புரதங்களின் செயற்பாடு பொதுவாக உயிரினத்துக்குப் பாதகமாகவே அமையும். இப்புரதங்கள் வினைத்திறனற்ற அல்லது பாதகமான விளைவுகளைப் பல வேளைகளில் தோற்றுவிக்கும். எனவே கலங்களில் மரபணு விகாரங்களைத் திருத்தும் முறைகள் கூர்ப்படைந்துள்ளன. எனினும் சில வேளைகளில் மாத்திரம் மரபணு விகாரங்கள் உயிரினத்துக்கு சிறிதளவு அனுகூலமாகலாம். மரபணு மாற்றம் இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டு அனுகூலமானவை தேர்ந்தெடுக்கப்படும்.

மரபணு திடீர்மாற்றத்தினால் பெரிய ஆபத்துக்கள் ஏது ஏற்படுவதில்லை என மார்ச்சு 3, 2016 அன்று சயன்சு இதழில் அறிஞர்கள் அறிக்கையைத் தெரிவித்துள்ளனர்.[1]

புகையிலைப் புகையிலிருந்து வெளியேறும் புற்றுநோயைத் தூண்டும் பென்ஸோ(a)பைரீன் இரசாயனம் டி.என்.ஏயில் விகாரங்களை உருவாக்குகின்றது.

காரணங்கள்தொகு

நாங்கு முறைகளில் மரபணு விகாரங்கள் நடைபெறலாம். சுயமான மரபணு மாற்றம், டி.என்.ஏயில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள், டி.என்.ஏயைத் திருத்தும் போது ஏற்படும் வழுக்கள், விகாரத்தூண்டிகளால் தூண்டப்படும் மரபணு விகாரங்கள்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபணு_திடீர்மாற்றம்&oldid=2743839" இருந்து மீள்விக்கப்பட்டது