மருமக்கதாயம்

மருமக்கதாயம் அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20ஆம் நூற்றான்டுகளில் கேரள மாநிலத்தின் நாயர் சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும். இம்முறைப்படி ஓர் ஆணின் சொத்துக்கு அவனுடைய சகோதரியின் குழந்தைகளே வாரிசுகளாகக் கருதப்பட்டனர்.

ஒரு குழந்தையின் தாய் யார் என்று உறுதியாக தெரிந்த நிலையில் தந்தை யார் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டதால் மருமக்க தாய முறை நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.[1]

நாயர் சமுதாயத்தினரிடையே வழக்கத்திலிருந்த சம்பந்தம் முறையே (Sambhandam System) இதற்குக் காரணமாக அமைந்தது.

அதாவது கேரள நம்பூதிரி பிராமண குடும்பத்தில் பிறந்த மூத்த ஆண் மட்டுமே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நம்பூதிரி பெண்களை 'வேலி' என்னும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் இரண்டாவது ஆண் முதல் மற்ற ஆண்கள் நாயர் சமுதாய பெண்களுடன் 'சம்பந்தம்' என்னும் தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்றும் இருந்த வழக்கம் இந்திய சுதந்திர காலம் வரை கேரளத்தில் நீடித்தது. ஆங்கிலேய அரசு இந்த வழக்கத்தை சட்டப்பூர்வமாக மாற்றித் திருத்தியமைத்து.

இதனால் நம்பூதிரி ஆண்கள் வருகை தந்து செல்லும் நாயர் சமுதாயப் பெண்களுடைய குழந்தைகளின் தந்தை குறித்த சந்தேகம் எழுந்த நிலை காரணமாகவும் நாயர் சமுதாயத்தில் நிலவிய 'பல கணவர் முறை' (Polyandry) காரணமாகவும் மருமக்க தாய முறையைப் பின்பற்றும் குடும்பங்கள் கேரளத்தில் உருவாகின.

இந்த குடும்பங்கள் தறவாடு (Tarawad) என்று அழைக்கப்பட்டன.

ஒரு தாயுடைய வாரிசுகள் அனைவரும் சேர்ந்து கூட்டுக் குடும்பம் (Joint family) ஆக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே சமையலறையிலேயே உணவு அருந்தினர். ஒரே வீட்டில் 30 முதல் 40 பேர் வரை சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அக்குடும்பத்தின் சொத்துக்களைக் குடும்பத்தின் மூத்த ஆண் மகன் நிர்வகித்து வந்தான்.[2] அவன் காரணவன் என அழைக்கப்பட்டான். குடும்ப சொத்து அனைவருக்கும் பொதுவாக இருந்ததால் அதை தனியாக பங்கிடவோ விற்கவோ முடியாது.[3] மருமக்க தாய முறையைக் கடைபிடித்தன் மூலம் குடும்பச் சொத்து பிரிந்து போகாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் குழந்தை மணம், விதவைக்கோலம் பூணுதல் ஆகிய பாரம்பரியக் கட்டுப்பாடுகளின்றி நாயர் சமுதாய பெண்கள் அதிக செல்வாக்குடனும் உரிமைகளுடனும் பாதுகாப்புடனும் வாழ இம்முறை உதவியது.[4].

கேரள தமிழக எல்லையில் கன்னியாகுமரியை உள்ளடக்கிய நாஞ்சில்நாட்டில் தோவாளை, அகத்தீசுவரம் ஆகிய தாலுகாக்களில் வாழ்ந்து வந்த வெள்ளாளர் சமுதாய மக்களும் நாயர்களைப் போன்றே மருமக்கதாய முறையை கடைபிடித்து வந்தனர். இவர்கள் மருமக்கள் வழி வெள்ளாளர்கள் எனப்பட்டனர்.[5]

இவற்றையும் பார்க்க

தொகு

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்

மேற்கோள்கள்

தொகு
  1. A. Sreedaramenon, A Survey of Kerala History, Page 165
  2. A. Sreedaramenon, Social and Cultural History of Kerala, Page. 88
  3. V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347
  4. V. Nagam Aiya, The Travancore State manual, Vol. II, Madras, 1989, Page 347
  5. T.K. Velu Pillai, The Travancore State manual, Vol I, Trivandrum, 1940, Page 866
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருமக்கதாயம்&oldid=4140212" இலிருந்து மீள்விக்கப்பட்டது