மலேசிய இந்தியர்

மலேசிய இந்தியர்கள் (மலாய்: Orang India Malaysia; ஆங்கிலம்: Malaysian Indians; மலையாளம்: മലേഷ്യ ഇന്ത്യൻ വംശജർ; இந்தி: भारतीय मलेशियन; தெலுங்கு:మలేషియన్ భారతీయులు); என்பவர்கள் இந்திய மரபுவழி மலேசியர்கள்.

மலேசிய இந்தியர்கள்
தம்புசாமி பிள்ளை ஜான் திவி வீ. தி. சம்பந்தன்
ஜானகி ஆதி நாகப்பன் இராசம்மா பூபாலன் அம்பிகா சீனிவாசன்
டி.ஆர்.சீனிவாசகம் கே. ஆர். சோமசுந்தரம் எஸ்.ஓ.கே. உபைதுல்லா
ஐரீன் பெர்னாண்டஸ் சந்திரமலர் ஆனந்தவேல் மகாலெட்சுமி அர்ஜூனன்
ரவிச்சந்திரன் எஸ். ஏ. கணபதி ஆர். ஆறுமுகம்
ராஜாமணி மயில்வாகனம் ராஜ ராஜேஸ்வரி சீதாராமன் ஜாக்லின் விக்டர்
மொத்த மக்கள்தொகை
(2,019,600 - 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மலேசியத் தீபகற்பம்
மொழி(கள்)
(பெரும்பான்மை/ஆதிக்கம்): தமிழ்
மேலும்: ஆங்கிலம் · மலாய் · மலையாளம் · தெலுங்கு ·
பஞ்சாபி · வங்காளம் · குசராத்தி · இந்தி · மங்லீஷ் (கிரியோல்)
சமயங்கள்
இந்து சமயம் · கிறித்தவம் · சீக்கிய சமயம் · பகாய் சமயம் · இசுலாம் · சமணம்

இவர்களில் பெரும்பாலோர் மலாயாவின் பிரித்தானியர்களின் குடிமைப் படுத்தலின் போது இந்தியாவில் இருந்து குடியேறிவர்களின் சந்ததியினர் ஆவர்.

இதற்கு முன்பு 6-ஆம் நூற்றாண்டில் இருந்தே தமிழர்கள் இங்கு குடியேறி உள்ளனர். தற்கால மலேசியாவில், மலாய்; மலேசிய சீனர் இனங்களுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது பெரும் இனக் குழுவாக உள்ளனர்.

2020-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, மலேசிய மக்கள்தொகையில் 6.8% விழுக்காட்டினர்.[1] இருப்பினும் மலேசியாவின் தொழில்முறைப் பணியாளர்களில் இவர்களின் விழுக்காடு மிகக் கூடுதலாக உள்ளது.

மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையானவர் மலேசியத் தமிழர்கள் ஆகும். மலேசிய மலையாளிகள், மலேசியத் தெலுங்கர்கள், சீக்கியர்கள் மற்றும் பிற இனக் குழுக்களும் உள்ளனர்.

வெளிநாடு வாழ் உலக இந்தியர்களில் மலேசிய இந்தியர்கள் ஐந்தாவது பெரிய சமூகமாக உள்ளனர்.

வரலாறு

தொகு

முதல் அலை: காலனித்துவத்திற்கு முந்தைய காலம

தொகு

வர்த்தகம், சமயப் பணிகள், போர்கள் மற்றும் பிற வகையான தொடர்புகள் மூலமாகப் பண்டைய இந்தியா, தென்கிழக்கு ஆசியாவில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தி வந்தது.

பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில், மலாயா நாடு (இப்போது மலேசியா); ஸ்ரீ விஜயப் பேரரசு, கடாரம் மற்றும் மஜபாகித் போன்ற இந்திய மயமாக்கப்பட்ட பேரரசுகளின் ஒரு பகுதியாக இருந்தது. (இந்தியப் பண்பாட்டுக் கோளம்) இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இது கிரேட்டர் இந்தியா (Greater India) என்று அழைக்கப்படும் கலாசாரப் பகுதியின் ஒரு தொகுதியாகவும் இருந்தது.

கலிங்கத்தின் மீது அசோகரின் படையெடுப்பு

தொகு

இந்தியாவில் கலிங்கத்தின் மீது அசோகரின் படையெடுப்பு; சமுத்திரகுப்தன் தெற்கு நோக்கிய படையெடுப்பு; ஆகிய இந்த இரு படையெடுப்புகளுக்குப் பின்னர், தெற்கு ஆசியாவில் இருந்து தென்கிழக்கு ஆசியாவை நோக்கி இந்தியர்கள் இடம் பெயர்ந்து உள்ளனர். இதுவே மலேசியாவில் முதல் இந்தியர் அலை.[2]

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அரேபியா மற்றும் இந்திய நாட்டு வணிகர்கள் கடல்சார் வணிகம் செய்வதற்கு தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்குப் பயணம் செய்தனர்.[3] அப்போது இந்தோனேசியா, ஜாவா தீவின் கலிங்கப் பேரரசில் இருந்து தோன்றிய சைலேந்திர மன்னர்கள், மலாயா தீபகற்பம் மற்றும் தெற்கு சயாமின் (தாய்லாந்து) ஒரு பகுதியைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.

இந்தோனேசியா சைலேந்திரா மன்னர்கள்

தொகு
 
பூஜாங் பள்ளத்தாக்கில் புக்கிட் பத்து பகாட் ஆலயக் கட்டமைப்பு

சைலேந்திர மன்னர்கள், இந்தியாவில் இருந்து வந்த பௌத்த போதகர்களை வரவேற்றனர். தங்களின் பிரதேசங்களில் பௌத்த சமயத்தின் மகாயான போதனைகள் பரவுவதை ஏற்றுக் கொண்டனர்.

இருப்பினும், மத்திய தாய்லாந்து; வடகிழக்கு தாய்லாந்து பகுதிகளில் வாழ்ந்த மக்கள், பௌத்த சமயத்தின் ஈனயானம் போதனைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தனர். கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் அனுப்பப்பட்ட பௌத்த போதகர்களால் ஈனயான (Hinayana) போதனைகள் அங்கு அறிமுகப் படுத்தப்பட்டன.

8-ஆம் நூற்றாண்டில், பர்மாவின் கீழ்ப் பகுதிகளை, இந்தியாவின் கலிங்க நாட்டுக் கலிங்கர்கள் கைப்பற்றிய பிறகு, அவர்களின் செல்வாக்கு மலாயா தீபகற்பத்தில் படிப்படியாகப் பரவத் தொடங்கியது.

இந்தோனேசியாவின் கலிங்கா அரசு

தொகு

மலாயா தீபகற்பத்திற்கு இந்தியர்கள் வந்த பின்னர்தான், அங்கு பௌத்த மதத்தின் தாக்கங்கள் ஏற்பட்டன. அதற்கு இந்தியாவின் கலிங்க நாட்டுக் கலிங்கர்கள் பர்மாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்ததும் ஒரு காரணமாகும்.

பண்டைய இந்தியாவின் கலிங்க நாடு என்பது; இப்போதைய இந்தியாவின் ஒரிசா, வடக்கு ஆந்திரப் பிரதேசப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்த ஓர் அரசாகும்.[4]

7-ஆம் நூற்றாண்டில், இந்தோனேசியாவில் உருவான கலிங்க அரசு என்பது அதற்கு முன்னர் இந்தியாவில் இருந்த கலிங்க அரசின் நினைவாக பெயரிடப்பட்ட அரசாகும். இந்தியாவின் கலிங்க அரசில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான் இந்தோனேசியாவிலும் கலிங்க அரசையும் உருவாக்கியவர்கள் ஆகும்.

இந்திய மயமாக்கத்தில் மாபெரும் இந்தியா

தொகு

ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கங்கா நகரம், பழைய கெடா (Old Kedah), கடாரம், கோத்தா கெலாங்கி, ஸ்ரீ விஜயப் பேரரசு போன்றவை இந்திய மயமாக்கப்பட்ட ஆளுமைகளுக்குள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இந்திய மயமாக்கம் எனும் வரலாற்றுத் தன்மையை இந்தியப் பண்பாட்டுக் கோளம் அல்லது மாபெரும் இந்தியா (Greater India) என்றும் அழைப்பதும் உண்டு.[5]

பல்லவர்கள் சோழர்கள் ஆட்சி காலத்தில்

தொகு

கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி செய்தார்கள். கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை சோழர்கள் ஆட்சி செய்தார்கள்.

இவர்களின் ஆட்சியின் போது தமிழகத்திற்கும் மலாயா தீபகற்பத்திற்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்து உள்ளன.

மலாயா துறைமுகங்களுடன் தமிழக வணிகர்கள் கொண்டு இருந்த வர்த்தக உறவுகள், கடாரம் மற்றும் இலங்காசுகம் போன்ற இந்திய மயமாக்கப்பட்ட அரசுகள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.[6]

அந்தக் காலக் கட்டத்தில், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில், சக்திவாய்ந்த வணிகக் கடல் படையையும் மற்றும் போர் கடல் படையையும் சோழர்கள் கொண்டு இருந்தனர்.

மலாக்கா செட்டிகள்

தொகு

மலாக்கா சுல்தானகத்தை எடுத்துக் கொண்டால், மலாக்கா செட்டிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மலாக்கா செட்டி வம்சாவளியைச் சேர்ந்த ராஜா முதலியார் என்பவர் அன்றையக் காலத்து மலாக்காவின் துறைமுகத் தலைவர் பதவியை வகித்து இருக்கிறார்.

மற்றும் ஒரு மலாக்கா செட்டி வம்சாவளியினர் துன் முத்தாகிர் என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் புகழ்பெற்ற பெண்டகாரா பதவியை வகித்து உள்ளார். பெண்டகாரா பதவி என்பது மலாக்கா சுல்தானகத்தில் முதல்வர் பதவிக்கு நிகராகும்.

தவிர மலாக்காவின் உள்ளூர் துறைமுகங்களை நிர்வாகம் செய்வதில் சிட்டி மக்கள் பெரும் பங்கு வகித்து உள்ளனர்.

இரண்டாவது அலை: காலனித்துவ காலம்

தொகு

மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்த போது அவர்களின் தலைவராக அல்பான்சோ டி அல்புகர்க் (Afonso de Albuquerque) என்பவர் இருந்தார். அவர் அப்போது ஒரு குடிநுழைவுச் சட்டத்தைக் கொண்டு வந்தார். மலாக்காவில் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு ஆதரவான சாதகமான சட்டம். 1511-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

மலாக்காவுக்கு வரும் ஆண்கள் கிறிஸ்த்துவ மதத்தைப் பின்பற்றினால் அவர்கள் அவர்களுடைய மனைவிமார்களையும் கொண்டு வரலாம். நிரந்தரமாகவே மலாக்காவில் தங்க வைத்துக் கொள்ளலாம் எனும் சட்டம். இந்தக் கட்டத்தில் தான் மலாயாவில் மேலும் ஓர் இந்தியப் புலம் பெயர்வு நடைபெற்றது.

அந்த வகையில் இந்தியாவில் இருந்து கோவா கத்தோலிக்க மக்கள் (Goan Catholics); கொங்கானி கத்தோலிக்கர்கள் (Konkani Catholics); மராத்திய கிறிஸ்த்துவர்கள் (Catholics of Marathi descent); மலபாரிகள்; தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் ஆயிரக் கணக்கில் மலாக்காவில் குடியேறினார்கள். நிரந்தரவாசிகள் ஆனார்கள்.

இனங்களின் கலப்பினத்தவர்

தொகு

இவர்களுடன் குப்பாரிஸ் (Kuparis) எனும் இந்திய இனத்தவரும் மலாக்காவில் தஞ்சம் அடைந்தனர். குப்பாரிஸ் என்பவர்கள் மூன்று இனங்களின் கலப்பினத்தவர். அதாவது கோவா இனம்; போர்த்துகீசிய இனம்; இதர இந்தியர்கள் கலப்பு கொண்ட ஓர் இனம்.

குப்பாரி என்றால் ஆண்டவரின் குழந்தை என்று பொருள். மும்பாய்க்கு வடக்கே பாசேன் (Bassein) எனும் ஓர் இடம். அங்கே இருந்து தான் இந்தக் குப்பாரிஸ் மக்கள் மலாக்காவிற்கு வந்தனர்.

அப்படி மலாக்காவில் குடியேறிய இவர்களின் பிள்ளைகள் உள்ளூர்வாசிகளைத் திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் தங்களின் அசல் வம்சாவளி அடையாளத்தையும் இழக்க நேரிட்டது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Department of Statistics Malaysia (2020). "Current population and estimates, Malaysia 2020 Group". பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
  2. Sadasivan, Balaji (2011). The Dancing Girl: A History of Early India. pp. 135–136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9814311670.
  3. Sneddon, James (2003). The Indonesian Language: Its history and role in modern society. Sydney: University of South Wales Press Ltd. p. 73.
  4. Sejarah SMA/MA Kls XI-Bahasa By H Purwanta, dkk
  5. European Journal of Social Sciences – Volume 7, Number 3 (2009)
  6. International Tamil Language Foundation (2000). The Handbook of Tamil Culture and Heritage. Chicago: International Tamil Language Foundation. p. 877.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_இந்தியர்&oldid=4065521" இலிருந்து மீள்விக்கப்பட்டது