மான்டேகு இல்லம், இலண்டன்

(மான்டேகு இல்லம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மான்டேகு இல்லம் (Montagu House) இலண்டன் மாநகரின் புளூம்சுபரிப் பகுதியிலுள்ள கிரேட் ரசல் சாலையில் அமைந்திருந்த 17 ஆம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்த ஒரு மாளிகை ஆகும். இதிலேயே பிரித்தானிய அருங்காட்சியகம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. இக்கட்டிடம் இரண்டு முறை கட்டப்பட்டது. இரண்டு முறையும் மான்டேகுவின் முதல் டியூக்கான ரால்ஃப் மான்டேகு என்பவருக்காகவே அமைக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மாண்டேகு ஒரு நிலத்தை வாங்கினார். இது இன்று இலண்டனின் மத்தியில் இருந்தாலும், அக்காலத்தில் இந்நிலத்தின் பின்பகுதி திறந்த வெளியாகவே இருந்தது. இந் நிலத்தில் மான்டேகுவிற்கான முதல் மாளிகையை ஆங்கில அறிவியலாளரும் கட்டிடக்கலைஞருமான ராபர்ட் ஊக் (Robert Hooke) என்பவர் வடிவமைத்தார். இவரது கட்டிடக்கலைப் பாணி பிரான்சு நாட்டுத் திட்டமிடலினதும், டச்சு நுணுக்க வேலைப்பாடுகளினதும் செல்வாக்கைக் கொண்டிருந்தது. இம் மாளிகை 1675 ஆம் ஆண்டுக்கும் 1679 ஆம் ஆண்டுக்கும் இடையில் கட்டப்பட்டது. சமகாலத்தவரால் பெரிதும் பாராட்டப்பட்ட இக் கட்டிடம் 1686 ஆம் ஆண்டில் தீயில் எரிந்து போயிற்று.

மாண்டேகு இல்லத்தின் முன்பக்கம்.
மாண்டேகு இல்லத்தின் தளப்படம்.

இதன் பின்னர், அதிகம் அறியப்படாத போகே (Pouget) என்னும் பிரான்சியர் ஒருவரின் வடிவமைப்பின்படி இந்த இல்லம் மீண்டும் கட்டப்பட்டது. இந்த மான்டேகு இல்லம் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி இரண்டு பத்தாண்டுகளில் கட்டப்பட்ட மிகப்பெரிய தனியார் வதிவிடம் எனக் கருதப்படுகிறது. நிலத்தளம், மேல்தளம் என இரண்டு முக்கிய தளங்களைக் கொண்ட இந்த இல்லம் ஒரு நிலக்கீழ்த் தளத்தையும் கொண்டிருந்தது. இதன் கூரையில் கட்டிடத்தின் நடுவே ஒரு குவிமாடமும் அமைக்கப்பட்டிருந்தது.

18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உயர்குடியினர் பகுதி என்னும் நிலையில் இருந்து புளூம்சுபரி இறங்கத் தொடங்கியது. இது ஒரு மத்தியதர வகுப்பினருக்கான பகுதியாக மாறியது. மான்டேகுவின் இரண்டாம் டியூக் தனது தந்தையாரின் இந்த இல்லத்தைக் கைவிட்டு வைட்டால் (Whitehall) பகுதிக்கு இடம்பெயர்ந்தார்.

புளூம்சுபரியில் இருந்த மான்டேகு இல்லத்தை 1749 ஆம் ஆண்டில், பிரித்தானிய அருங்காட்சியகத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை விலைக்கு வாங்கியது. 1840 ஆம் ஆண்டில் இதனை இடித்துவிட்டு, அவ்விடத்தில் பெரிய வசதியான கட்டிடமொன்றை அமைத்தனர்.

இவற்றையும் பார்க்கவும்தொகு