மிட்சுகூகன் சண்டை

(மிட்சுகோகென் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)


மிட்சுகூகன் சண்டை (Battle of Midtskogen) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வேவில் நிகழ்ந்த ஒரு மோதல். நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நார்வே நாட்டு அரசர் ஏழாம் ஹாக்கோனையும் அவரது அமைச்சரவையையும் நாசி ஜெர்மனியின் படைகள் கைதுசெய்ய முயன்று தோற்றன.

மிட்சுகூகன் சண்டை
நார்வே போர்த்தொடரின் பகுதி
இச்சண்டையின் நினைவு கல்
இச்சண்டையின் நினைவு கல்
நாள் ஏப்ரல் 10, 1940
இடம் எல்வெரும், ஊஸ்டெர்டாலென், நார்வே
நார்வீஜிய வெற்றி
பிரிவினர்
 நோர்வே  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
கேப்டன் ஆலிவர் மூய்ஸ்டட் கேப்டர் எபெர்ஹார்ட் சுபில்லர்  
பலம்
100+ பேர் 100 வான்குடை வீரர்கள்
இழப்புகள்
3 பேர் காயம் 2 பேர் கொல்லப்பட்டனர்

ஏப்ரல் 9, 1940ல் நாசி ஜெர்மனி நார்வே மீது படையெடுத்தது. படையெடுப்பின் துவக்கத்திலேயே நார்வே அரசரையும் அமைச்சர்களையும் கைப்பற்றினால் நார்வீஜிய எதிர்ப்பை முடக்கி விடலாம் என ஜெர்மானிய உத்தியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வைத்து அரசரையும் அமைச்சர்களையும் கைது செய்ய அவர்கள் செய்த முதல் முயற்சி டுரூபாக் கடற்கால்வாய் சண்டையில் ஜெர்மானியக் கடற்படைக்கு ஏற்பட்ட தோல்வியால் நிறைவேறவில்லை. ஏழாம் ஹாக்கோனும், நார்வே அரசும் ஓஸ்லோவைக் காலி செய்து விட்டு பத்திரமாக வெளியேறினர். அவர்களை வான்வழியாகத் தரையிறங்கிய வான்குடை வீரர்களைக் கொண்டு கைது செய்ய அடுத்த முயற்சி ஏப்ரல் 10ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. மிட்சுகூகன் என்ற இடத்தில் அரசரும் அமைச்சரவையும் தஞ்சம் புகுந்திருப்பதை அறிந்த ஜெர்மானிய வான்குடை வீரர்கள் அவ்விடத்துக்கு விரைந்தனர். அரசரது பாதுகாவலர்களும், அப்பகுதியிலிருந்த பொதுமக்களும் மிட்சுகூகனுக்கு வரும் சாலையில் ஒரு சாலைத்தடையை ஏற்படுத்தி ஜெர்மானிய வான்குடைப் பிரிவினைத் தடுத்து நிறுத்தினர். அப்போது நிகழ்ந்த சண்டை சில மணிநேரம் நீடித்தது. இதை பயன்படுத்திக் கொண்டு அரசரும் நார்வே அமைச்சரவையும் தப்பி விட்டனர். தங்கள் முயற்சி தோல்வியடைந்ததை உணர்ந்த ஜெர்மானியர்கள் பின்வாங்கினர்.

நார்வே போர்த்தொடரில் இது ஒரு சிறு மோதலாக இருந்தாலும், இதன் விளைவாக நார்வே அரசு ஜெர்மானியர் பிடியிலிருந்து தப்பியதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் ஜெர்மானியப் படையெடுப்பால் நிலைகுலைந்து போயிருந்த நார்வே மக்களின் மன உறுதிக்கு இவ்வெற்றி ஊக்கமளித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்சுகூகன்_சண்டை&oldid=1360045" இலிருந்து மீள்விக்கப்பட்டது