மிதிவெடி அபாயக் கல்வி

(மிதிவெடி தீவாய்ப்புக் கல்வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மிதிவெடி அபாயக் கல்வி என்பது கல்விசார் நடவடிக்கைகள் ஊடாக மிதிவெடிகள், யுத்த மீதிகளின் ஆபத்தில் இருந்து குறைக்கும் வண்ணம் அவை பற்றிய ஆபத்தை விளக்குவதுடன் நடத்தைகளின் மாற்றத்தை மேம்படுத்துவதாகும். இந்நடவடிக்கைகளின் போது தரவுகளைத்திரட்டுதல், தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், பயிற்சியுடனான கல்வி, சமுகத்தொடர்பாடல்கள் அங்கம் வகிக்கின்றது.[1]

இவ்வகை நடவடிக்கைகளை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இன் நிதியுதவி, தொழில்நுட்ப உதவியுடன் நடைபெறுகிறது. மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் ஆபத்துக்களுக்கு உள்ளாவோர் யார், இது குறித்து எந்த வயதுக் குழுவினருக்கு எவ்வாறான கல்வியினை வழங்குதல் வேண்டும் போன்ற முக்கியமான விடயங்களை அலசி ஆராய்ந்து, அதை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஊடாக செவ்வனே வழங்கி வருகின்றனர். மிதிவெடிகள் அகற்றுவதற்கு காலம் எடுப்பதாலும், மிதிவெடிகள் இருக்கும் இடத்திற்கு அருகில் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறி இருப்பதால் மிதிவெடி அபாயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டிய மிதிவெடி அபாயக் கல்வி காலத்தின் கட்டாயம் ஆகும்.

மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களாற் பாதிக்கபட்ட பொதுமக்களைப் பற்றி ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் திரப்பட்ட தகவல்களின் படி 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் பெரும்பாலும் உழைக்கின்ற ஆண்களே மிதிவெடி அபாயத்திற்கு உள்ளாகின்றனர். வெடிபொருட்களைக் கையாளுதல், இரும்பு சேகரித்தல், வாழ்வாதாரத் தேவைகள், குப்பைகூழங்களை எரித்தல், மாடு மேய்த்தல் போன்ற நடவடிக்கைகளின் போது இவர்கள் காயமடைந்துள்ளனர். வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் வெடித்ததில் பெரும்பாலும் பதின்ம வயதில் உள்ள பாடசாலை ஆண் சிறார்களே பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் விந்தையான பொருட்கள் போன்று தோன்றும் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை ஆராய்வதில் ஈடுபடுகையில் அவை வெடிக்க நேர்வதே இதற்குக் காரணமாகும்.

ஆசிய வாழ்க்கைமுறையில் வீட்டுக்கு வெளியே பெரும்பாலும் ஆண்களே உழைப்பதால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் பெரும்பாலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதைவிட்டு கூலிவேலை மற்றும் சிறுவேலைகளில் ஈடுபட்டு தமது பாடசாலைப் படிப்பை இடைநிறுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. மிதிவெடியால் பாதிக்கப்பட்டவர் சிறுவர் என்றால் அவர் வளர்ந்து வருவதால் காலத்திற்குக் காலம் செயற்கைக் கால்களை மாற்றும் தேவையும் உள்ளது. வளர்ந்தவர்களுக்கு இவ்வாறு அடிக்கடி மாற்றத் தேவையில்லை.

இக்கல்வி நடைமுறைகளில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை குறிப்பிடப்பட்ட ஒளிப்படங்களுடன் பயிற்றுவித்து ஆபத்தான இடங்களை இனம் கண்டு அப்பகுதியினைத் தவிர்ப்பது குறித்து சொல்லித் தரப்படுகிறது. இதைச் செவ்வனே செய்வதற்கு இதற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நிதியுதவி, தொழில்நுட்ப உதவியுடன் மேற்பார்வையும் செய்துவருகின்றனர். பிராந்திய மிதிவெடி நடவடிக்கைக் காரியாலத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அலுவலர்கள் அவ்வப்போது இந்நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு அந்நிகழ்ச்சிகள் குறித்த தமதுகருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். எனினும் மிதிவெடி நடவடிக்கைச் செயற்பாட்டாளருக்கு சான்றிதழ் ஏதும் வழங்கப்படுவதில்லை. மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஒவ்வொரு கிழமையும் நடைபெறும் மிதிவெடி நடவடிக்கைக் கூட்டத்திற் கலந்துகொண்டு தமது நடவடிக்கைகள் பற்றியும் அங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் விபரிப்பர். பெரும்பாலான பிரச்சினைகள் அக்கூட்டத்திலேயே முடிவுசெய்யப்படும். பெரும்பாலும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மிதிவெடி அபாயக் கல்விபற்றி தொழில்நுடப்பக் கலந்துரையாடல்கள் அமைச்சின் உயரதிகாரிகளுடன் இடம்பெறும்.

மிதிவெடி அபாயக் கல்வி நடத்தும் முறைகள்

தொகு

பொதுத்தகவல்கள்

தொகு

சுவர் ஓவியங்கள்

தொகு

இம்முறை அநேகமான பாடசாலைகளின் சுவர்களினல் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் அபாயம் பற்றி தூரிகை கொண்டு ஓவியம் வரையப்படும்.

  • நன்மைகள்: பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்க இலகுவானது.
  • சிக்கல்கள்: பாடசாலை ஓவியர்களுக்கு மிதிவெடி அபாயக் கல்வி பற்றித் தெளிவான விளக்கம் இருக்கவேண்டும்.

கண்காட்சிகள்

தொகு

இம்முறை அநேகமாகத் திருவிழாக்கள், பெருவிழாக்களில் பயன்படுத்தபடுகிறது. பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தயாரித்த மிதிவெடி அபாயக் கல்வி சம்பந்தமான திரைப்படமும், மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய ஒளிப்படங்களுடன் சிலசமயம் பல்லூடகங்களும் இதில் பயன்படுத்தப்படும்.

  • நன்மைகள்: இதில் உள்ள நன்மை என்னவென்றால் அதிகமான மக்களை குறைந்த நேரத்தில் அணுக இயலும். இம்முறை பெரும்பாலும் திருவிழாக்கள், பெருவிழாக்களில் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தயாரித்த திரைப்படத்துடன் மிதிவெடிகள் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் ஒளிப்படங்களுடன் சில சமயம் மிதிவெடித் தோட்டம் ஊடாகவும் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பலசமயங்களில் வில்லுப் பாட்டு, நாடகங்கள் காத்தவராயன் கூத்து போன்றவற்றின் ஊடாகவும் மக்களை இப்பிரச்சாரங்கள் சென்றடைகின்றது.
  • சிக்கலகள்: இம்முறை மூலம் யார் யாருக்கு விளங்கியிருக்கிறது என்பதை உய்தறிவது கடினமானது. தவிர சீரான மின்சார இணைப்பைப் பெறுவதும் கடினமானது.
துண்டுப்பிரசுரங்கள்
தொகு

இம்முறை பெரும்பாலும் திருவிழாக்கள், பெருவிழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தால் பரிசீலிக்கப்பட்டு அனுமதியளித்த துண்டுப்பிரசுரங்களே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

  • நன்மைகள்: இலகுவானது.
  • சிக்கல்கள்: மிதிவெடி அகற்றும் அமைப்புக்களது தொலைபேசிகள் அடிக்கடி மாற்றமடைவதுடன் அநேகமான அமைப்புக்கள் இலங்கையை விட்டு நீங்கும் நிலையும் காணப்படுகிறது. ஒரு காலத்தின் பின்னர் தொலைபேசி இலக்கங்கள் பயனற்றதாகிவிடலாம்.

சுவரொட்டிகள்

தொகு

இதில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் ஒளிப்படங்கள் உள்ள சுவரொட்டி மிதிவெடி அபாயக் கல்வியை நடத்தும் அமைப்பின் தொலைபேசி இலக்கத்துடன் ஒட்டப்படும்.

  • நன்மைகள்: இந்தச் சுவரொட்டிகள் எந்நேரமும் அங்கே இருக்கும் என்பதால் பிரயோசனமானது.
  • சிக்கல்கள்: தொலைபேசி இலக்கங்கள் இருந்தாலும் அநேகமாக யுத்தம் நடந்த இடங்களில் இன்னமும் மின்சார வசதிகிடையாது ஆகவே தொலைபேசியே நகர்பேசி வசதியோ கிடையாது.

வானொலி

தொகு

இம்முறையில் பலரை இலகுவாகச் சென்றடையலாம்.

  • நன்மைகள்:தொலைக்காட்சிகள் போலன்றி வானொலியில் வேலைசெய்தவாறே கேட்கலாம் என்பதால் கூடுதானவர்கள் வானொலியை விரும்புகின்றனர்.
  • சிக்கல்கள்: எவ்வளவு பேர் இதைப் புலன் செலுத்தி அவதானமாகக் கேட்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது ஓர் பொழுதுபோக்கு ஊடகமாகவே வகைபிரிக்கப்படுகிறது. பல ஊடகத்தினர் தமிழை சரியாக உச்சரிக்காமல் ஒய்யாரம் (ஸ்டைல்) ஆக உச்சரிப்பதால் பலசமயங்களில் தமிழ் சரிவர விளங்குவதில்லை.

கல்வியும் பயிற்சியும்

தொகு

சமூக வரைபடமாக்கல்

தொகு

இந்த அணுகுமுறை பன்னெடுங்காலமாக அரசு அல்லாத அமைப்பினரால் செய்யப்படுகிறது.

  • நன்மைகள்: சமுக்கத்தில் உள்ள வளங்களை அடையாளம் காண்பதற்கு இலகுவானது.
  • சிக்கல்கள்: செய்மதிப்படங்கள் வந்த நிலையில் பழைய முறை நேர விரயத்தை உண்டுபண்ணலாம். பிராந்திய மிதிவெடி அலுவலகம் உறுதிப்படுத்தப்பட்ட ஆபத்தான பிரதேசங்களை மென்பொருள் முறையில் பகிர்வதில்லையாதலினால் இரட்டிப்பு வேலையாகும் தவிர துல்லியத்தன்மையும் இல்லாமற் போகலாம்.

விளையாட்டுகள்

தொகு

குளம் கரை விளையாட்டுக்கள் போன்ற விளையாட்டுக்கள் மூலம் மிதிவெடி அபாயக் கல்வி வழங்கப்படுகிறது. பாடசாலை மாணவர்களுக்கு இது பசுமரத்தாணி போல் பதிந்துவிடுவதால் இது பெரிதும் விரும்பப்படுகிறது.

  • நன்மைகள்:சிறார்கள் இதைப் பெரிதும் விருபுகின்றனர்.
  • சிக்கல்கள்: பாடசாலைகளில் மிதிவெடி அபாயக் கல்வியை நடத்துவதற்கு பிராந்தியக் கல்வி அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அனுமதி பெற்றபின்னரே பாடசாலையில் இந்நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தல்

தொகு
  • நன்மைகள்: மிதிவெடி அபாயத்தில் உள்ள மக்களை தனித்தனியே சந்திப்பதால் அவர்களுடைய பிரச்சினைகளை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டு அவர்களின் நடத்தை குணாதியங்களுக்கு ஏற்ப மிதிவெடி அபாயக் கல்வியை வழங்க இயலும்.
  • சிக்கல்கள்: பெரும்பாலும் ஆண்கள் உழைக்கபோய்விடுவதால் பெண்களே வீட்டில் உள்ளதால் பெண் மிதிவெடி அபாயக் கல்விப் பயிற்றுவிப்பாளர்களையே இதற்கு அனுப்புவது சிறந்தது. மிதிவெடி வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் பெரிதும் ஆண்களே பாதிப்புக்குள்ளாகிறார்கள். மிதிவெடி அபாயக் கல்வியின்போது வீட்டில் உள்ள பெண்களிற்கு துண்டுப்பிரசுரம் போன்றவற்றை வழங்கி உங்கள் வீட்டுக்காரருக்குச் சொல்லுங்கள் என்று கூறினாலும் கூட இது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம் என்பது ஆய்ந்தறியப்படவேண்டும். இம்முறையில் கூடுதலான மக்களைச் சந்திப்பது கடினமானது.

மிதிவெடி அபாயக் கல்விப் பயிற்றுனருக்கான பயிற்சிகள்

தொகு

இதுபெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்களுக்கு வழங்கப்படுகிறது.

  • நன்மைகள்: பயிற்றுவிப்பாளர் நன்கு பயிற்சியைப் பெறுவதால் செவ்வனே பணியினை மேற்கொள்ளவியலும். நேருக்கு நேர் மிதிவெடி அபாயக் கல்விப் பயிற்றுவிப்பாளர்களுடன் உரையாடுவதால் அவர்களின் பணியில் உள்ள சிக்கல்களையும் தீர்பதற்கு ஓர் வாய்ப்பாக அமையும்.
  • சிக்கல்கள்: இவ்வாறு பயிற்சி எடுத்தவர்களுக்கு எந்தவொரு சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை. எனவே சான்றிதழ் பெற்றவர்களுக்கும் சான்றிதழ் பெறாதவர்களுகளையும் வேறுபடுத்தி இனம் காண்பது கடினமானது.

சமுகத் தொடர்பாடல்கள்

தொகு

மிதிவெடி அகற்றும் அமைப்புக்களும் மக்களுக்கு இடையே தொடர்பாடல்களை வலுப்படுத்துவதே சமூகத் தொட்ர்பாடல் ஆகும். மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை மக்கள் இனம் கண்டால் மிதிவெடி அபாயக் கல்வி அமைப்புக்கள் மிதிவெடி அகற்றும் அமைப்புக்களுக்கு அறித்து அவற்றை அகற்றுவதற்கு ஆவன செய்தல் வேண்டும். இதற்கு உரிய மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய விண்ணபத்தை நிரப்பி உரிய அமைப்புக்களுக்கு அனுப்பி வைப்பர் இதில் தகவல்தந்தவரின் பெயர், முகவரி, தொலைபேசி இருப்பின் தொலைபேசி இலக்கம் ஆகிய தகவலுடன் அண்ணளவான வரைபடம் ஒன்றும் மிதிவெடி அல்லது வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருளின் வரைபடம் அல்லது ஒளிப்படமும் இணைக்கப்படும். குறிப்பிட்ட இடத்தில் மிதிவெடி அகற்றும் அமைப்பு இல்லாதவிடத்து இலங்கை இராணுவத்தின் மனிதாபிமானக் மிதிவெடி அகற்றும் பிரிவிற்கு அறிவிக்கப்படும். மிதிவெடியோ வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருளோ அடையாளம் காணப்பட்டால் அது அகற்றப்படும்வரை மிதிவெடி அபாயக் கல்வியில் ஈடுபடுவர்கள் மக்களை விளிப்புடன் இருக்குமாறு கூறுவதுடன் அது அகற்றும் வரை மிதிவெடி அகற்றும் அமைப்புடன் தொடர்பில் இருப்பர். மிதிவெடி அபாயக் கல்வியில் ஈடுபடுவர்கள் இடைக்கிடையில் அப்பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் அமைப்புக்களின் அணித்தலைவர்களுடன் கலந்துரையாடு மிதிவெடி அகற்றுவதற்கு வேண்டிய ஒத்தாசைகளைப் புரிவர்.

மிதிவெடி அகற்றும் அமைப்பினருக்கு உள்ள பிரச்சினைகளும் மக்களுக்குத் தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, மிதிவெடிகளை அடையாளம் காணும் முள்ளுக்கம்பிகளை அகற்றுதல் போன்றவற்றை அகற்றவேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்படுவர். மிதிவெடி அகற்றுபவர்களுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்கப்படுவர், எடுத்துக்காட்டக அவை புதைக்கப்பட்ட இடங்கள் தெரிந்தால் மிதிவெடி அகற்றுபவர்களுக்கு அறியத்தருமாறு கோரப்படுவர்.

தரவு சேகரித்தல்

தொகு

பொதுவாக மிதிவெடி அபாயக் கல்வியை வழங்க முன்னரும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் பின்னரும் அறிவு நடத்தை சம்பந்தமான வினாக் கொத்தொன்றை மக்களிற்குச் செய்து மக்களை பற்றிய ஓரளவு விபரங்களைப் பெற்றுகொள்வர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சிலருடன் கலந்துரைடிச் செய்யப்பட்ட வினாக் கொத்தைக் கொண்டு அக்கிராம மக்களின் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்வர். நாட்டுக்கு நாடு வேறுபடும் இவ்வினாக் கொத்தானாது நாட்டு மக்களின் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் பிரச்சினை, மக்களின் அறிவு, நடத்தை போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படும். எனினும் இவ்வினாக் கொத்தானது பிரதேச ரீதியாக மாறுபடுவதில்லை. ஒரு நாட்டிற்கு ஒரு வினாக் கொத்தே பயன்படுத்தப்படும். இவ்வினாக் கொத்தானது காலத்திற்குக் காலம் மீள்பரிசீலனை செய்யப்படும். இவ்வினாக் கொத்தின் விடையைப் பொறுத்து குறிப்பிட்ட இடத்தில் மிதிவெடி அபாயக் கல்வியை நடத்துவதா இல்லையா என்பது முன்னர் தீர்மானிக்கப்பட்டாலும், இப்போது வருடாந்தம் தயாரிக்கப்படும் மிதிவெடி நடவடிக்கைத் திட்டத்தின் ஓர் பகுதியாகவே மிதிவெடி அபாயக் கல்வி நடத்தப்படுகின்றது.

கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும்

தொகு

மிதிவெடி அபாயக் கல்வியைப் பெரும்பாலும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஊடாகக் கண்காணிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் மிதிவெடி திட்டத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அதிகாரிகளும் இப்பணியைச் செய்து அறிக்கை ஒன்றை வழங்குவர்.

மிதிவெடி அபாயக் கல்வி பொதுவாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டே வழங்கப்படுகிறது.

மிதிவெடிகளும் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களும்

தொகு

மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய பிரதான கட்டுரையைப் பார்க்க.

ஆபத்தான, பாதுகாப்பான பிரதேசங்களை இனம் காணல்

தொகு

ஆபத்தான பிரதேசங்கள்

தொகு

அதிகாரப்பூர்வமாக அடையாளம் இடப்பட்டவை

தொகு
  • மண்டை ஓட்டு அடையாளம் இடப்பட்ட பகுதிகள்.
  • மிதிவெடி என தமிழ், ஆங்கிலம், சிங்களத்தில் எழுதப்பட்ட மஞ்சட் பட்டி கட்டப்பட்டு இருக்கும் பகுதிகள்.

மிதிவெடிகள் இருக்ககூடிய சந்தேகமான பகுதிகள்

தொகு
  • மை எனத் தமிழில் தகரத்துண்டில் எழுதப்பட்டிருக்கும் பகுதி. (பெரும்பாலும் மஞ்சட் நிறப் பூச்சுப் பூசப்பட்டிருக்கும்)
  • முன்னாள் யுத்தப்பிரதேசத்தில் நொண்டிக்கொண்டிருக்கும் (ஒருகால் சேதமான) பசு அல்லது பசுக்கள் உள்ள இடம் (பெரும்பாலும் பசுக்கள் நீண்டதூரம் செல்வதில்லை, ஆகவே அருகில் உள்ள இடம் ஆபத்தானதாக இருக்கலாம்).
  • முன்னாள் யுத்தப்பிரதேசத்தில் உள்ள பதுங்கு குழிகளுக்கு முன்னுக்கோ பின்னுக்கோ அருகில் உள்ள பகுதிகள்.
  • முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள முட்கம்பிச் சுருள்கள் காணப்படும் பகுதிகள்.
  • முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் வீதியின் அருகே ஒருவர் தெரியாதவாறு ஒளிந்திருந்து துப்பாக்கியால் சுடக்கூடிய பாரிய மரத்தின் அடிப்பகுதி.
  • முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் பாழடைந்த வீட்டின் வாசற்படிப் பகுதியில் (கதவுப் பகுதியில் சில சமயங்களில் சூழ்ச்சிப் பொறி இருக்கலாம்).
  • முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு அரண்கள் (குளக்கட்டுக் அணைகளும் பலசமயம் யுத்ததிற் பாதுகாப்பு அரணாக இருந்ததால் அப்பகுதிகளிலும் அவதானமாக இருக்கவேண்டும்.
  • முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள ஆற்றங்கரைப் பகுதிகள்.

குறிப்பு: சர்வதேச மிதிவெடி நடவடிக்கையின் தற்போதைய நியமங்களுக்கு ஏற்ப மிதிவெடி ஆபத்தான பிரதேசம் என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்ட ஆபத்தான பிரதேசம் என குறிக்கப்படும். இவ்வாறு வகைக்குறிப்பதற்கு பார்க்ககூடிய வகையில் மிதிவெடியோ அல்லது மிதிவெடி விபத்து இடம்பெற்றிருந்தாலோ அவை அவ்வாறு வகைப்படுத்தப்படும். இது அக்குறிப்பிட்ட பிரதேசத்தில் மண்டை ஓட்டுக் குறிகொண்டும் மிதிவெடி நடவடிக்கைக்கான தரவு முகாமைத்துவ மென்பொருளிலும் அவ்வாறு குறிக்கப்பட்டு சேமிக்கப்படும்.

பாதுகாப்பான பிரதேசங்கள்

தொகு
  • நன்கு பாவனையில் உள்ள இடம்.
  • அரச அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட இடம்.
  • மிதிவெடி அகற்றுபவர்களால் உறுதிபடுத்தபட்ட இடம்.

வெடிக்காத வெடிநிலையில் உள்ள பொருட்களைக் கண்டால் செய்யவேண்டியவை

தொகு
  • தயவு செய்து கையாளவேண்டாம் அதை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்களுக்குத் தெரியப்படுத்தவும்.
    • மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்கள் மண்டை ஓட்டு அடையாளம் இட்டு, மிதிவெடி என மும்மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) அச்சிடப்பட்ட மஞ்சட் பட்டியை கட்டி அப்பகுதியை ஏனையவர்கள் அணுகாவண்ணம் அடையாளப்படுத்தி அறிக்கை ஒன்றை மிதிவெடி அகற்றும் அமைப்புக்கு வழங்குவர். அதை அகற்றும் வரை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் மிதிவெடி அகற்றும் அமைப்புடன் தொடர்பில் இருப்பர். அகற்றப்பட்டதும் பிராந்திய மிதிவெடிக் காரியாலத்திற்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பர்.
  • மிதிவெடிகள் போல் குறிப்பிடத்தக்க இடத்தில் அல்லாமல் யுத்தம் நடந்த பிரதேசத்தில் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் இருக்கலாம். மிதிவெடி அகற்றப்பட்ட பிரதேசத்திற்கு அண்மையாகக் கூட அவை இருக்ககூடும். எனவே முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் மீள்குடியமர்ந்தவர்கள் குப்பைகளைக் கூட்டி எரிப்பதை இயன்றவரை குறைத்து அவற்றை சேதனப் பசளையாக்கிப் பயன்பெறவேண்டும். குப்பைகளை கூட்டி எரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அயலவர்களிற்கு அறிவித்துவிட்டு நெருப்புவைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு தூர நிற்கவும்.

மிதிவெடிப் பிரதேசத்தில் அகப்பட்டால் செய்யவேண்டியது

தொகு
  • அவ்விடத்திலேயே நிற்கவும்.
  • மிதிவெடி அகற்றுபவர்களுக்கு அறியத்தரவும் (கூக்குரல் இடுவதாலோ, தொலைபேசியூடாகவோ தொடர்பு கொள்ளவும்).
  • காலை இழந்து வாழ்நாள் முழுவதும் கஸ்டப் படுவதை விட மிதிவெடி அகற்றுபவர்கள் வரும் வரை காத்திருப்பது நல்லது. பொறுத்தார் பூமி ஆள்வார்.
  • மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்கள் பிராந்திய மிதிவெடி காரியாலத்திற்கு இதுபற்றி அறிவிப்பார்கள். பொதுவாக தனியாக மிதிவெடிகள் புதைக்கப்படுவதில்லையாதலினால் மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்கள் விசேட சந்தர்பங்கள் தவிரப் பொதுவாக மிதிவெடிப் பிரதேசத்தை ஆபத்து அடையாளம் இடமாட்டார்கள். மிதிவெடிகளை அகற்றுபவர்களே மிதிவெடி ஆபத்து அடையாளத்தை இடுவர்.

குறிப்பு: எப்பொழுதுமே எப்போதும் வீட்டைவிட்டுப் போகும் போது எங்கே செல்கிறோம் எப்போது வருவோம் எனப் பெரியவர்களுகுத் தெரியப்படுத்திவிட்டு செல்லுமாறு சிறுவர்களை வளர்க்கவேண்டும். இளமையிற் கல் சிலையில் எழுத்து என்பதுபோல் சிறுவயதுப் பழக்கம் தொடர்ந்து வரக்கூடியது. இது மிதிவெடி அபாயத்திற்கு மாத்திரம் அல்ல வேறு பிரச்சினைகளிற் சிறுவர்கள் சிக்குப் பட்டாலும் இப்பழக்கவழக்கங்கள் காப்பாற்றிக் கொள்ளும்.

வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களைக் கண்டால் செய்யவேண்டியது

தொகு
  • மிதிவெடி அபாயக் கல்வி நடத்தும் அமைப்பினருக்கு அறியத்தரவும் (தொலைபேசி வசதியிருப்பின் தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ளவும்).
  • வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும், பாடசாலை ஆசிரியர்களுக்கும் அறியத்தரவும்.

மிதிவெடி அல்லது வெடிக்காத வெடிநிலையில் உள்ளவெடிபொருளை ஒருவர் வைத்திருந்தால் எவ்வாறு காப்பாறுவது

தொகு
  • மெதுவாகக் கீழே வைக்குமாறு கூறுதல்.
  • மிதிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கு அறிவித்து அதை அகற்ற வழிவகை செய்தல்.

மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த நிகழ்வுகள்

தொகு

வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது போல் ஏற்கனவே யுத்த அனர்த்தத்தால் ஊர் ஊராக இடம்பெயர்ந்து மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்து திரும்பியவர்கள் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் ஆபத்துக்களைச் சமாளித்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்குறோம்.

மேலதிக வாசிப்பு

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. What is Mine Risk Education, SLNMAS 12.02nd Edition
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிவெடி_அபாயக்_கல்வி&oldid=2753090" இலிருந்து மீள்விக்கப்பட்டது