மின்னியக்கு விசை
மின்னியக்கு விசை (Electromotive force, EMF) என்பது ஒரு மின்கலத்தினாலோ ஃபாரடேயின் விதியின்படியான காந்த விசையினாலோ உருவாக்கப்படும் மின்னழுத்தத்தைக் குறிக்கிறது. காலத்தில் மாறுபடும் ஒரு காந்தப் பாயம் மின்னோட்டத்தைத் தூண்டும் என்பது ஃபாரடேயின் விதி.[1]
மின்னியக்கு விசை என்பது நியூட்டனில் அளக்கப்படும் ஒரு விசை அன்று. இது ஓர் அலகு மின்மம் கொண்டிருக்கும் ஆற்றலை அல்லது மின்னழுத்தத்தைக் குறிக்கும். இதன் அலகு வோல்ட்டு ஆகும்.
மின்காந்தத் தூண்டலில், மூடிய சுற்றில் ஒரு சுற்றுச் செல்லும் ஓர் அலகு மின்மத்திற்கு மாற்றப்படும் மின்காந்த ஆற்றலே மின்னியக்கு விசை என்று கொள்ளலாம். அதே சமயம் அந்த மின்மம் சுற்றுகையில் மின் தடையின் காரணமாகத் தன் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றிச் சிறிது இழக்கவும் நேரிடலாம்.
மின்கலம் அல்லது மின்னாக்கி போன்ற இரு-முனைக் கலங்களில், அவ்விரு (திறந்த சுற்றுகை) முனைகளின் இடையே இருக்கும் மின்னழுத்தத்தை மின்னியக்கு விசை என்று அளக்கலாம். அங்கே உருவாக்கப்பட்ட மின்னழுத்தத்தைக் கொண்டு அந்தச் சுற்றில் ஒரு மின் சுற்றுகையை இணைக்கும் போது மின்னோட்டத்தை முடுக்கலாம். அவ்வாறு மின்னோட்டம் உண்டாகும்போது இரு முனைகளின் இடையே இருக்கும் மின்னழுத்தம் நிலையாக அதே அளவில் இருப்பதில்லை. இடையே ஏற்படும் மின் தடையின் காரணமாக உள்ளாற்றலை இழப்பதால் இந்த மின்னழுத்தம் சற்றே குறையும்.
ஓர் அலகு மின்மத்தின் மின்னழுத்தத்தை அதிகரிக்கத் தேவையான வேலையை மின்னியக்கு விசை என்று வகைப்படுத்தலாம். [2][3]
வேதியியலின்படி, நேர்மின்மத்தையும் எதிர்மின்மத்தையும் பிரித்து வைக்கும்போது, ஒரு மின்புலத்தை உருவாக்கி அங்கே மின்னழுத்தத்தைக் காணலாம்[4][5]
மின்னியக்கு விசை உருவாக்கும் கருவிகளில் சிலவற்றைக் கீழே காணலாம்:
- மின்வேதியியற் கலம்
- வெப்ப மின் கருவிகள்
- கதிரொளி ஆற்றற் கருவிகள்
- மின்னாக்கிகள்
- Van de Graaff generators.[2][6]
இயற்கையில், ஒரு பரப்பில் எங்கெல்லாம் காந்தப் புல மாற்றம் ஏற்கடுகின்றதோ, அங்கே மின்னியக்கு விசை உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Irving Langmuir (1916). "The Relation Between Contact Potentials and Electrochemical Action". Transactions of the American Electrochemical Society (The Society) 29: 125–182. http://books.google.com/?id=OW0SAAAAYAAJ&pg=PA172&dq=%22electromotive+force+is+that%22&q=%22electromotive%20force%20is%20that%22.
- ↑ 2.0 2.1 Lawrence M Lerner (1997). Physics for scientists and engineers. Jones & Bartlett Publishers. pp. 724–727. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7637-0460-1.
- ↑ David M. Cook (2003). The Theory of the Electromagnetic Field. Courier Dover. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-42567-2.
- ↑ Robert L. Lehrman (1998). Physics the easy way. Barron's Educational Series. p. 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7641-0236-3.
- ↑ Alvin M. Halpern, Erich Erlbach (1998). Schaum's outline of theory and problems of beginning physics II. McGraw-Hill Professional. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-025707-8.
- ↑ Paul A. Tipler and Gene Mosca (2007). Physics for Scientists and Engineers (6 ed.). Macmillan. p. 850. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4292-0124-X.