மா. மணி

இந்தியத் தமிழ் எழுத்தாளர்
(முகம் மாமணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முகம் மாமணி என அறியப்படும் மா. மணி (1931 - 24 பெப்ரவரி 2022) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் ஆவார்.

பிறப்பும், தொழிலும்

தொகு

தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், குருவன்கோட்டையை[1] பூர்வீகமாக கொண்டவர் மா. மணி 1931 இல் பிறந்தார். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்றார். குடும்ப வறுமையால் மேற்கொண்டு பள்ளிக்குச் செல்ல இயலாமல் எட்டு வயது முதலே பீடி சுற்றுதல், சுருட்டு செய்தல், தையல் வேலை, கருமான், மளிகைக்கடை, எண்ணெய்க் கிடங்கில் பாரம் சுமத்தல் போன்ற பணிகளைச் செய்தார். வேலைக்கு போனதுமல்லாமல் மாலை நேரங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு, பியூசி, பி.காம், பிஜிஎல் என படிப்படியாக படித்து பட்டங்கள் பெற்றார். 1953இல் பெரியாரிடம் விடுதலை நாளிதழில் அச்சுக்கோக்கும் தொழிலாளியாக பணியாற்றினார். பின்னர் 1956 முதல் 1991 வரை 36 ஆண்டுகள் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இலக்கியப் பணிகள்

தொகு

1982இல் சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் இலக்கிய வட்டம் என்ற பெயரிலான ஒரு இலக்கி அமைப்பைத் துவக்கினார். அந்த அமைப்பின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிறுகளில் அறிஞர் பெருமக்களை கொண்டு இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்தி வந்தார். 1983ஆம் ஆண்டு முதல் முகம் என்னும் இலக்கிய மாத இதழைத் தொடங்கி 40 ஆண்டுகள் நடத்தி வந்தார்.[2] இவரது தமிழ்ப் பணிக்காக பல விருதுகளையும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மாமணி தன் 17 வயதில் இருந்தே மேடைகளில் பேசத் துவங்கினார். மேலும் சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, நாடகம், வரலாறு என பலவற்றை இதழ்களில் எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் 18 நூல்களாக வெளிவந்துள்ளன. இவரைப்பற்றி இவரது மணிவிழாவில் அறிஞர்கள் ஆற்றிய உரைகள் தொகுக்கபட்டு நூலாக வெளிவந்துள்ளது.[3]

குடும்பம்

தொகு

மாமணி 1956ஆண்டு இராதா என்பவரை தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உண்டு. முகம் மாமணி சென்னையில் 2022, பெப்ரவரி, 24 அன்று மூப்பின் காரணமாக தன் 91வது வயதில் இறந்தார்.

குறிப்புகள்

தொகு
  1. "காலமானாா் பத்திரிகையாளா் முகம் மாமணி". Dinamani. Retrieved 2022-03-01.
  2. "மூத்த பத்திரிகையாளர் முகம் மாமணி காலமானார்". Hindu Tamil Thisai. Retrieved 2022-03-01.
  3. எழுத்தாளர் ‘முகம்’ மாமணி காலமானார், செய்தி, தீக்கதிர், பிப்ரவரி 24, 2022
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._மணி&oldid=3498707" இலிருந்து மீள்விக்கப்பட்டது