முழுதளாவிய வடிவமைப்பு

முழுதளாவிய வடிவமைப்பு (Universal design) என்பது, பொதுவான உடற்தகுதி கொண்டோர், வயதானவர்கள், ஊனமுற்றோர் உட்பட எல்லோராலும் இயல்பாகவே அணுகத்தக்க வகையிலான கட்டிடங்கள், உற்பத்திப் பொருட்கள், சூழல்கள் ஆகியவற்றின் வடிவமைப்பைக் குறிக்கும். "கூடிய அளவுக்கு மாற்றங்களோ சிறப்பு வடிவமைப்புக்களோ தேவைப்படாத வகையில் எல்லா மக்களாலும் பயன்படுத்தத் தகுந்த உற்பத்திகள், சூழல்கள்,நிரல்கள், சேவைகள் போன்றவற்றின் வடிவமைப்பே முழுதளாவிய வடிவமைப்பு" என ஐக்கிய நாடுகள் சபையின் ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் வரைவிலக்கணம் தருகிறது.[1]

அனைத்து உற்பத்திகளையும் கட்டிடச் சூழல்களையும் அழகானவையாகவும், கூடிய அளவுக்கு வயது, திறன், தகுதி போன்ற பாகுபாடுகள் இன்றி அனைவரும் பயன்படுத்தத் தக்க வகையில் வடிவமைத்தல் என்னும் கருத்துருவுக்கு "முழுதளாவிய வடிவமைப்பு" என்பதற்கு நிகரான "universal design" என்னும் ஆங்கிலச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ரொனால்ட் எல். மேசு என்னும் கட்டிடக்கலைஞர் ஆவார்.[2] ஆனாலும், இயலாமை கொண்டோரையும் உட்படுத்திய கருத்துருவுக்கு முன்னோடியாக இருந்தவர், 1963ல் இயலாதோருக்கான வடிவமைப்பு (Designing for the Disabled) என்னும் நூலை எழுதிய செல்வின் கோல்ட்சிமித் என்பவரே.

முழுதளாவிய வடிவமைப்பு, இதற்குச் சற்று முன்னர் தோன்றிய தடைகள் இன்மை கருத்துருக்கள், பரந்த அணுகுதகைமை இயக்கம், உதவித் தொழில்நுட்பம் போன்றவற்றில் இருந்து உருவானது. அத்துடன் இந்த முக்கியமான விடயங்களுடன் அழகியலையும் சேர்த்து இது கவனத்தில் கொள்கிறது. மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்து வருவதாலும், நவீன மருத்துவ வசதிகளினால் குறிப்பிடத்தக்க காயங்கள், நோய்கள், பிறப்புக் குறைபாடுகள் போன்றவற்றில் ஊனங்களோடு தப்பிப் பிழைப்பது கூடி வருவதாலும், முழுதளாவிய வடிவமைப்புக் குறித்த அக்கறை வளர்ந்து வருகிறது.

குறிப்புக்கள்தொகு