முழுப் பெயர்

முழுப் பெயர் (full name அல்லது personal name) தனிநபரொருவரின் அடையாளமும் பெயர்த் தொகுதியும் ஆகும். இத்தொகுதியிலுள்ள பெயர்கள் ஒன்றிணைந்து அந்நபர் குறித்த அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தும். பல பண்பாடுகளில் இச்சொல் ஒருவரது பிறப்பு அல்லது சட்டப் பெயர்களுடன் ஒத்திருக்கும். பெரும்பாலான நாடுகளில் இவை பல பெயர்களின் தொகுதியாகவும் சில நாடுகளில் ஒரே பெயராகவும் உள்ளது; பெயர்த் தொகுதியாக விளங்கும் நேரங்களில் சில பெயர்கள் தனிநபருக்கேயானதாகவும் மற்றவை அவரது மணமானநிலை, குடும்ப உறுப்பு, இனம் அல்லது சாதி குறித்தத் தகவல்களை வெளிப்படுத்துகின்றன. (காட்டாக சார்லசு பிலிப் ஆர்தர் ஜார்ஜையும் அதே பெயருள்ள மற்றவரையும்), அல்லது தொடர்பில்லாத இருவரையும் அடையாளம் காண முடிகின்றது).

யோகான் செபாஸ்தியன் பாக் பெயரை எடுத்துக்காட்டாகக் கொண்டு வரையப்பட்ட படம். தமது சூட்டப்பட்ட பெயரை ஆறு குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்திருந்தார். தனது குடும்பப் பெயரை அனைத்து குடும்ப உறுப்பினர்களுடனும் பகிர்ந்திருந்தார்.

மேற்கத்தியக் கலாசாரத்தில் கிட்டத்தட்ட அனைத்து நபர்களுக்கும் குறைந்தது ஒரு சூட்டிய பெயரும் (இது தனித்தப் பெயர் , முதல் பெயர், முன்னிற்கும் பெயர், அல்லது கிறித்தவப் பெயர் என்றெல்லாமும் அறியப்படுகின்றது), அடுத்து ஒரு குடும்பப் பெயரும் (இது மேற் பெயர், கடைசி பெயர் எனவும் அறியப்படும்) கொண்டுள்ளன; காட்டாக தாமஸ் ஜெஃவ்வர்சன் என்ற பெயரில் தாமசு என்பது சூட்டிய பெயரையும் ஜெஃவ்வர்சன் என்பது குடும்பப் பெயரையும் குறிக்கின்றன. இவை இரண்டுக்கும் இடையே ஒன்றோ பலவோ "நடுப் பெயர்கள்" (காட்டாக பிராங்க் லாய்டு ரைட், சார்லசு ஜான் ஹஃபம் டிக்கின்சு) சேர்க்கப்படுகின்றன; இவை குடும்ப மற்றும் மற்ற தொடர்புகளை இன்னமும் விரிவாக அறிவிக்கின்றன. சில பண்பாடுகளில் தந்தைவழிப் பெயர்களோ தாய்வழிப் பெயர்களோ நடுப் பெயராகவோ இறுதிப் பெயராகவோ அமைகின்றன; காட்டாக பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கியில் பியோத்தர் இலீயாவின் மகன்) என அறியலாம்.

இந்திய மாநிலங்களில் பல்வேறு முறைமைகள் பழக்கத்தில் உள்ளன; பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் சூட்டிய பெயரை அடுத்து குடும்பப் பெயர் அல்லது சாதிப் பெயர் இணைந்து முழுப்பெயர் ஆகின்றது (காட்டாக, வினோத் மேத்தா). சிலநேரங்களில் தந்தைப் பெயரை நடுப் பெயராகக் கொள்கின்றனர். காட்டாக சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதில் ரமேஷ் சச்சினின் தந்தையாகும். கேரளத்தில் கடைசிப் பெயராக வீட்டுப் பெயரோ சிற்றூர் பெயரோ வைத்துக் கொள்கின்றனர். (காட்டாக அசின் தொட்டும்கல்). தமிழ்நாட்டில் முதல் பெயராக தந்தையின் பெயரும் நடுப்பெயராக சூட்டிய பெயரும் இறுதியாக சாதிப் பெயரும் வைக்கும் பழக்கமுண்டு. அண்மைக்கால சமூக சீர்திருத்தங்களை ஒட்டி சாதிப்பெயரைப் பயன்படுத்துவது அருகி வருகின்றது. பெரும்பாலான உலக நாடுகளில் சூட்டிய பெயர் முதலில் இருக்க தமிழ்நாட்டில் மாறியிருப்பது உலகளாவிய பரிமாற்றங்களின் போது குழப்பத்தை விளைவிக்கின்றது. ஒரு பெயருள்ள இருவரை அடையாளப்படுத்த ஊர் பெயரொட்டும் பயன்படுத்தப்படுகின்றது.

இருப்பினும், நகரமாக்கப்படாத பல பகுதிகளில் பலருக்கு ஒற்றைப் பெயரே உள்ளது.


குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை ஒவ்வொரு குழந்தையும் தான் பிறக்கும்போது பெயர் வைக்கப்படும் உரிமையைக் கொண்டுள்ளதாக அறிவிக்கின்றது.[1]

மேற்சான்றுகள் தொகு

  1. Text of the Convention on the Rights of the Child, Adopted and opened for signature, ratification and accession by General Assembly resolution 44/25 of 20 November 1989 entry into force 2 September 1990, in accordance with article 49, Office of the United Nations High Commissioner for Human Rights.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழுப்_பெயர்&oldid=3790267" இலிருந்து மீள்விக்கப்பட்டது