மேகநாத சாஃகா

(மேக்நாத் சாஹா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மேகநாத சாஃகா (Megh Nad Saha, மேக்நாத் சாஹா, வங்காளம்:মেঘনাদ সাহা, தேவநாகரி: मेघनाद साहा, அக்டோபர் 6, 1893பெப்ரவரி 16, 1956) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர் இவரே. இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது.

மேகநாத சாஃகா
மேகநாத சாஃகா, 1921 பெர்லினில்
பிறப்பு(1893-10-06)6 அக்டோபர் 1893
சியோரடலி, டாக்கா (இன்றைய வங்கதேசம்)
இறப்பு16 பெப்ரவரி 1956(1956-02-16) (அகவை 62)
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்அலகாபாது பல்கலைக்கழகம்
கொல்கத்தா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்தாக்கா கல்லூரி
பிரசிடென்சி கல்லூரி, கொல்கத்தா
அறியப்படுவதுசாஃகா அயனியாக்க சமன்பாடு

இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இவர் அமைத்த அடித்தளம் முக்கியமானது.[1][2]

பிறப்பு, பள்ளிப்பருவம்

தொகு

மேகநாத சாஃகா அக்டோபர் 6, 1893 ஆம் ஆண்டு இன்றைய வங்கதேசத்திலுள்ள சியோரடலி எனும் ஊரில் சகன்னாத் சாஃகா என்ற சிறு மளிகை வியாபாரியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். வறுமை காரணமாக சாஃகாவை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்ப நினைத்தார் அவர் தந்தை. சாஃகாவின் பள்ளி ஆசிரியர்கள் அவரைத் தடுத்து சாஃகாவை பள்ளியில் தொடரச் செய்தனர்.

விளையும் பயிர் முளையிலே

தொகு

புகழ்பெற்ற இயற்பியலாளராக அறியப்பட்டாலும் சாஃகா தீவிர சமுதாய நல நோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறு வயது முதல் இருந்துள்ளார்.

1905 ஆம் ஆண்டு வங்கத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது ஆங்கில அரசு. மக்கள் வெகுண்டெழுந்தனர். சாகாவுக்கு வயது பன்னிரண்டு. தன்னால் போராட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லையே என்று வருந்தினார் சாஃகா. வங்கத்தின் கவர்னர் பள்ளிக்கு வந்த அன்று தன் நண்பர்களை அழைத்துப்பேசி, வகுப்புகளைப் புறக்கணித்தார் சாகா. பள்ளி நிருவாகம் இச்செயலை வன்மையாக கண்டித்தது. சாகாவுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

வேறு வழியின்றி சிறிய பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்டார் சாகா. இருப்பினும் மனந்தளராத சாகா, பள்ளி இறுதித்தேர்வில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். உதவித்தொகையை மீண்டும் பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.

கல்லூரியில்

தொகு

பிரசிடென்சி கல்லூரியில் சாஃகா வுடன் சத்தியேந்திர நாத் போசு மற்றும் மகலனோபிசு ஆகியோர் இணைந்தனர்; இவர்களும் பின்னாளில் முக்கியமான இயற்பியலாளர்களாக வளர்ந்தெழுந்தனர். கல்லூரியில் பிரபுல்ல சந்திர ரே, சகதீசு சந்திர போசு ஆகிய மகத்தான இயற்பியலாளர்கள் சாஃகாவின் ஆசிரியர்களாக இருந்தனர்.

இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பில் பல்கலையிலேயே இரண்டாவதாக வந்த சாஃகா (முதலிடம் சத்தியேந்திர நாத் போசுக்கு!) இந்திய நிதிப்பணியில் சேர்ந்து வறுமையிலிருக்கும் தன் குடும்பத்தைக் கரையேற்ற நினைத்தார். ஆனால் அவர் பள்ளியில் செய்த வகுப்புப் புறக்கணிப்பு, சுபாசு சந்திர போசு, இராசேந்திர பிரசாத் ஆகிய விடுதலை வீரர்களுடனான தொடர்பு ஆகிய காரணங்களால் அவருக்கு I.F.S. வேலை நிராகரிக்கப்பட்டது. அதுவே இயற்பியலுக்கு நன்மை ஆகிப்போனது -- அவரது முதல் காதலான இயற்பியலின் பக்கம் சாஃகாவின் நாட்டம் சென்றது.

சாஃகா அயனியாக்க சமன்பாடு

தொகு
  • ஆக்னசு எம்.கிளார்க்கு என்பவர் எழுதியிருந்த The System of the Stars என்ற புத்தகத்தில் ஒரு தீர்க்கப்படாத கணக்கு ஒன்று இருந்தது.
  • சூரிய நிறமாலையில் காணப்படும் (உட்கவர்) கரு வரிகள் பிரான்ஃகோபர் (Fraunhofer)வரிகள் எனப்படும். இவ்வரிகளின் தோற்றத்துக்கான அடிப்படை விளக்கத்தை கிர்ச்சாஃப் (Kirchhoff) அளித்தார். கிர்ச்சாஃபின் விளக்கம் சூரியனிலுள்ள தனிமங்களுக்கும் இவ்வரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அளவில் இருந்தது.
  • சாஃகா தன் கடுமையான முயற்சியால் உருவாக்கிய சமன்பாடு, இவ்வரிகளின் மூலத்தை விளக்கியது மட்டுமில்லாது சூரியன், விண்மீன்கள் இவற்றின் வெப்பநிலை, அழுத்தம் போன்ற புறநிலை இயல்புகளை அறியவும் உதவுகிறது. இதை உருவாக்கிய போது சாகாவுக்கு வயது 25.
  • இந்த அயனியாக்க சமன்பாடு சூரியனில் அதிகளவில் ஹைட்ரஜன் வாயுவே உள்ளது எனும் முக்கிய மாற்று முடிவுக்கு வழிவகுத்தது.[2]

பிற முக்கிய பங்களிப்புகள்

தொகு
  • அவர் பேராசிரியராக பணியாற்றிய அலகபாது பல்கலைக்கழகத்தில் பல புதிய ஆராய்ச்சிகளையும் தொடங்கி அப்பல்கலைக்கழகத்தை அனைத்துலக தரத்துக்கு உயர்த்தினார்.
  • இந்திய நாள்காட்டி முறையான சக ஆண்டு (saka era) முறையைப் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்தினார்.
  • 1948 இல் அவர் கொல்கத்தாவில் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் இன்று அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம் (Saha Institute of Nuclear Physics) என்று பெயர் மாற்றப்பட்டு மிகச்சிறந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையமாக விளங்குகிறது.
  • தாமோதர் பள்ளத்தாக்கு, பக்ரா-நங்கல் மற்றும் இராகுட் அணைத்திட்டங்களுக்கு சாஃகா செய்த கள ஆராய்ச்சிகள் தாம் பெரிதும் உதவின.

சாஃகா பெற்ற முக்கிய பெருமை

தொகு
  • 1927 இல் அவர் தருவித்த அயனியாக்க சமன்பாட்டை பெருமைப்படுத்தும் விதமாக இராயல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவரது பெயர் நோபல் பரிசுக்குப் (1935 - 36) பரிந்துரைக்கப்பட்டது.[3]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • Scientists of India by Dilip M.Salwi
  • Saha and his magnificent formula by G.Venkataraman

வெளி இணைப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-23. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.
  2. 2.0 2.1 RSTV, தி குவாண்டம் இந்தியன்ஸ், ஆவணப்படம்; 05.11.2014; 10.00am
  3. http://news.bbc.co.uk/dna/place-lancashire/plain/A24055607
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகநாத_சாஃகா&oldid=4038241" இலிருந்து மீள்விக்கப்பட்டது