மேனகா காந்தி

இந்திய அரசியல்வாதி

மேனகா காந்தி (பிறப்பு: ஆகஸ்டு 26, 1956 மேனகா ஆன்ந்த்) ஒரு இந்திய அரசியல்வாதி, விலங்குகள் உரிமை ஆதரவாளர் மற்றும் முன்னாள் பத்திரிக்கையாளர் ஆவார். முன்பு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்தார். இந்தியப் பெயர்கள் மற்றும் விலங்குகள் நலன் பற்றிய நூல்களும் வெளியிட்டுள்ளார். இவர் நேரு-காந்தி குடும்பத்தின் விலகிய உறுப்பினர்.

மேனகா காந்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 ஆகத்து 1956 (1956-08-26) (அகவை 67)
புது தில்லி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சஞ்சய் காந்தி (உயிருடன் இல்லை)
பிள்ளைகள்வருண் காந்தி
வாழிடம்புது தில்லி
As of சூன் 18, 2006
மூலம்: இந்திய அரசு

இளமைப் பருவம் தொகு

புது தில்லியில் பிறந்த மேனகா அங்குள்ள லாரன்சு பள்ளி மற்றும் மங்கை ஸ்ரீராம் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தியும் இவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். முன்னாள் விளம்பர நடிகை[1] மற்றும் சூர்யா இந்தியா இதழின் தொகுப்பாளரான இவர் 1982-ல் சஞ்சய் காந்தி ஒரு விமான நேர்ச்சியில் இறந்தபின் அரசியலில் இறங்கினார். இதனால் இந்திரா காந்திக்கும் இவருக்கும் வெளிப்படையான மோதல்கள் ஏற்பட்டன.[2]

அரசியல் வாழ்வு தொகு

1979-ல் இந்தியக் குடிமக்களின் நகருதலுக்கான அடிப்படை உரிமை தொடர்பில் "மேனகா காந்தி எதிர் இந்திய ஒன்றியம்" என்ற வழக்கில் இவர் ஒரு தொடுப்பாளர்.[3] அவ்வழக்கு மேனகாவிற்கு இந்திய அரசு பயண உரிமம் வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்டது.[4] இவ்வழக்கின் தீர்ப்பில் இந்திய உச்சநீதிமன்றம் "ஏ. கே. கோபாலன் எதிர் மெட்ராஸ் மாநிலம்" என்ற வழக்கில் எடுத்திருந்த தனது நிலைப்பாட்டிலிருந்து விலகி வாழ்வு மற்றும் விடுதலை உரிமைகளின் வீச்சை விரிவுபடுத்தி "வரம்பற்ற சரியான முறை" என்ற கருத்தை இந்தியச் சட்டத்தில் சேர்த்தது.[4] அத்தீர்ப்பில் "மக்களாட்சி என்பது விடுதலைச் சூழலில் அமையும் கட்டற்ற உரையாடல் மற்றும் கருத்தாடலை அடிப்படையாகக் கொண்டது, ஏனெனில் அவற்றின்வழியே ஒரு அரசின் செயல்பாடுகளைத் திருத்த முடியும்." என்று குறிப்பிட்டது.[5][6]

இவர் 1983-ல் "சஞ்சய் விசார் மஞ்ச்" (சஞ்சய் கருத்து மேடை) என்ற அமைப்பு ஒன்றைத் துவக்கினார். பின்னர் 1988-ல் ஜனதா தளத்தில் இணைந்தார். 1988 முதல் 1989 வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தார். 1989-ல் தனது முதல் தேர்தல் வெற்றியைக் கண்ட இவர் வி. பி. சிங் அரசில் 1989 முதல் 1991 வரை சுற்றுச்சூழல்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1996-இலும் 1999-இலும் உத்திரப் பிரதேசத்திலுள்ள பிலிபிட் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பாஜக அரசில் சமுதாய நலத்துறை துணை அமைச்சராகவும் பண்பாட்டுத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தார். விலங்குகள் நலத்துறையை உருவாக்கி அதன் அமைச்சுப் பொறுப்பிலும் இருந்தார். சமுதாய நலத்துறையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

2004 பொதுத்தேர்தலில் பாஜக உறுப்பினராக பிலிபிட் தொகுதியிலிருந்து இவர் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் அத்தொகுதியில் வெவ்வேறு கட்சி சார்பிலும் தனியாகக் கட்சி சாராமலும் நின்று தான் போட்டியிட்டதில் ஒருமுறை தவிர ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். இது இவர் தொகுதி நலனில் காட்டும் அக்கறை மற்றும் சீக்கிய சமயத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர் என்ற காரணங்களால் இவருக்குள்ள ஆதரவைக் காட்டுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[7][8] இவரது மகன் வருண் காந்தியும் ஒரு பாஜக அரசியல்வாதி.

விலங்குகள் நல போராளி தொகு

மேனகா காந்தி விலங்குகள் நல போராளி ஆவார். இவர் போராட்டம் காரணமாக இந்தியாவில் விலங்குரிமை பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலருக்கு ஏற்பட்டது. 1995 ஆம் ஆண்டு CPCSEA எனப்படும் ஆய்வுக்கு உட்படும் விலங்குகளை மேற்பார்வையிடும் அமைப்புக்கு தலைவரனார். இவரின் வழிகாட்டுதலில் இவ்வமைப்பு அறிவிக்கப்படாத சோதனைகளை விலங்குகளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தும் ஆய்வங்களில் மேற்கொண்டது. இதன் காரணமாக அவ்வாய்வகங்களில் விலங்குகள் மோசமான நிலையில் கொடுமை படுத்தப்படுவது ஆவணபடுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது. CPCSEA பல கட்டுப்பாடுகளை விதித்ததின் காரணமாக ஆய்வக விலங்குகள் மீதான கொடுமை சிறிது குறைந்தது. 1992 ஆம் ஆண்டு விலங்குகளுக்கான மனிதர்கள் (People for Animals) என்ற அமைப்பை தொடங்கினார். விலங்குகள் உரிமை மற்றும் நலங்களுக்காக போராடும் அமைப்பில் இந்தியாவில் இதுவே பெரியதாகும். இந்தியா முழுவதும் இதற்கு காப்பகங்கள் உள்ளன. இவர் சைவ உணவு உட்கொள்பவர், அசைவம் தவிர்க்க சொல்லி அனைவரும் சைவம் உட்கொள்ளும் வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று நன்னெறி & உடல் நலத்தை காரணம் காட்டி வழியுறுத்தினார். ஹெட்ஸ் அண்ட் டெயில்ஸ் (Heads and Tails) என்ற வாரமொரு முறை நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நடத்தினார். இதில் விலங்குகள் படும் துன்பத்தை விளக்கினார், குறிப்பாக வணிக முறையில் பயன்படும் விலங்குகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றன என்று விளக்கினார். இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் [9].

பத்திரிக்கையாளர் தொகு

பத்திரிக்கையாளராக மேனகா காந்தி சூர்யா இதழில் வெளியிட்ட அதிர வைக்கும் செய்திக்காக புகழடைந்தார். அப்போதய பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜகஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராமுக்கும் டெல்லி பல்கலைக்கழக மாணவி சுஷ்மா சௌதிரிக்கும் இடையேயான உடலுறவு புகைப்படக் காட்சிகளை[10] சூர்யா இதழில் வெளியிட்டார். இப்புகைப்படங்கள்[11] சுரேஷ் ராமும் சுஷ்மா சௌதிரியும் நெருக்கமான பாலுணர்வுத் தூண்டற் செய்கைகளில் ஈடுபட்டு இருந்ததை வெளிப்படுத்தின. இப்புகைப்படங்கள் பாபு ஜகஜீவன் ராமின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டதாக கருதப்படுகிறது. பாபு ஜகஜீவன் ராம் இந்திரா காந்தி அரசிலிருந்து விலகி ஜனதா கட்சி 1977-ல் பதவிக்கு வர உதவியவர். அப்போது இந்திய பிரதமர் பதவிக்கு தேர்வாக கூடியவர்களில் ஒருவராக இவர் கருதப்பட்டார்.[12]

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. பாசு, அருந்ததி (2005-08-06). "Art of commitment". த டெலகிராஃவ் இம் மூலத்தில் இருந்து 2007-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930033741/http://www.telegraphindia.com/1050806/asp/weekend/story_5061896.asp. பார்த்த நாள்: 2007-12-27. "But the lady who was born to a Sikh family and educated at Lawrence School, Sanawar, is always eager to deny that she was ever a model. Fresh out of school she had posed for a few ads for DCM towelling." 
  2. ராமசேசன், ராதிகா (2006-04-23). "In politics, family feuds rule". த டெலகிராஃவ் இம் மூலத்தில் இருந்து 2007-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930041207/http://www.telegraphindia.com/1060423/asp/nation/story_6133996.asp. பார்த்த நாள்: 2007-12-27. 
  3. "Text of the Supreme Court judgment". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2007-12-16.
  4. 4.0 4.1 Justiciability of ESC Rights—the Indian Experience
  5. Sabrang Alternate News Network article
  6. Maneka Gandhi v. Union of India, page 696.
  7. பிலிபட்டில் இவரின் வெற்றி பற்றி டெக்கான் ஹெரால்ட் கட்டுரை
  8. "இவரின் தேர்தல் வெற்றிகள் இவருக்காகவே, இவரின் குடும்ப பெயருக்காக அல்ல - டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை". Archived from the original on 2007-08-28. பார்க்கப்பட்ட நாள் 2007-12-16.
  9. மேனகா காந்தி எழுதிய புத்தகங்களின் பட்டியல், அமேசான் தளத்தில் கிடைப்பது
  10. "Maneka centrespreads sex romp". Archived from the original on 2007-12-19. பார்க்கப்பட்ட நாள் 2007-12-16.
  11. "வெளிப்படையான உடலுறவு புகைப்படங்கள்". Archived from the original on 2007-12-19. பார்க்கப்பட்ட நாள் 2007-12-16.
  12. "காமமும் அரசியலும் கலந்த கதை". Archived from the original on 2006-07-06. பார்க்கப்பட்ட நாள் 2007-12-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனகா_காந்தி&oldid=3636010" இலிருந்து மீள்விக்கப்பட்டது