மைத்திரீ விரைவுவண்டி
மைத்திரீ விரைவுவண்டி (Maitree Express), மொய்த்ரீ விரைவுவண்டி அல்லது டாக்கா–கொல்கத்தா விரைவுவண்டி என்றும் அழைக்கப்படுகிறது. சர்வதேச அளவிலான தொடருந்து சேவையினைப் புரியும் இந்த மைத்திரீ விரைவுவண்டி வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவினை, இந்தியாவின் மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவுடன் இணைக்கிறது. இரு நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு இடைப்பட்ட ஒரே தொடருந்து வழி இணைப்பும் இதுவே. இந்த வழித்தடத்தினை 43 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புதுப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
பெயர்க்காரணம்
தொகு”மைத்திரீ விரைவுவண்டி” என்பதன் பொருள் நட்புறவின் விரைவுவண்டி ஆகும். வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடைப்பட்ட நட்புறவினை பறைசாற்றும் வகையில் இந்தத் தொடருந்து சேவை செயல்படுவதால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.[2] மைத்திரீ விரைவுவண்டியின் தொடக்க விழா, வங்காள மொழியின் வருடப்பிறப்பான ஏப்ரல் 14, 2008 அன்று நடைபெற்றது.[3]
பின்னணி
தொகுஇந்தியா விடுதலை பெற்ற ஆண்டான 1947 இல், வங்காளமானது இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியாக பிரித்தானிய அரசால் பிரிக்கப்பட்டதால் அப்பகுதியின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரித்தானிய அரசின் ஆட்சிக்காலத்தில், பிரிக்கப்படாமல் இருந்த பல பகுதிகளை இணைக்கும் வண்ணம் ஒரே இரவில் செல்லும் தொடருந்து சேவைகளாக கொல்கத்தா, கோலண்டா, டாக்கா மற்றும் நாராயணகஞ்ச் போன்ற பகுதிகள் தொடருந்து சேவைகளால் இணைக்கப்பட்டிருந்தன. 1965 ஆம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினைகளின் காரணமாக ரயில் தொடர்புகள் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டன. அத்துடன், 1971 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்காகப் போராடி வங்காளதேசம் என்ற தனிநாடானது.
புதுப்பிப்பு
தொகு2001 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் பேச்சுவார்த்தை சுமுகமான முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாட்டு அரசுகளும் தொடருந்து சேவையினைத் தொடர ஒத்துக் கொண்டன. இந்தியாவின் பிரதமர் வங்காளதேசம் சென்றதன் மூலமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி 2007 ஆம் ஆண்டின், பிப்ரவரியில் டாக்கா சென்று வந்ததன் மூலமும் இந்தத் தொடருந்து சேவை மேலும் வலுபெற்றது. அதே 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி கொல்கத்தா முதல் டாக்கா வரையிலான தொடருந்து சேவையின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனை ஓட்டத்தில் இந்திய அரசின் அலுவலர்கள் பயணம் செய்து அங்குள்ள வங்காளதேச அரசின் அலுவலர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் மூலம் தொடருந்து சேவைத் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டதுடன் மட்டுமல்லாமல், தொடருந்து சேவைக்கான கால அட்டவணையும் உறுதி செய்யப்பட்டது.[4]
வரலாற்று சிறப்புமிக்க இந்தியா–வங்காளதேசம் தொடருந்து தொடர்பு
தொகுஇந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளுக்கு இடைப்பட்ட முழுமையான தொடருந்து தொடர்பு விவரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
மேற்கு எல்லை
தொகு- தர்சனா (வங்காளதேசம்) – கேடே (இந்தியா) – மைத்திரீ மற்றும் சரக்குத் தொடருந்துகள்
- பேனாபோல் (வங்காளதேசம்) – பெட்ராபோல் (இந்தியா) – சரக்கு ரயில்கள் மட்டும்
- ரோஹன்பூர் (வங்காளதேசம்) – சிங்காபாத் (இந்தியா) – சரக்குத் தொடருந்துகள்
- பிரோல் (வங்காளதேசம்) – ராதிகாபூர் (இந்தியா) – இதற்கு முன்பு சரக்கு தொடருந்துகள் செயல்பட்ட இப்பாதை தற்போது துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்தியா அகலப்பாதையாக இருந்த இப்பாதையினை குறுகிய பாதையாக மாற்றியதே இத்துண்டிப்பிற்குக் காரணம்.
வடக்கு எல்லை
தொகு- சிலஹட்டி (வங்காளதேசம்) – ஹால்ட்பாரி (இந்தியா) – வங்காளதேசம் பகுதியில் இருந்த தொடருந்துத் தடங்கள் நீக்கப்பட்டுவிட்டன.
- புரிமாரி (வங்காளதேசம்) – சங்கரபாந்தா (இந்தியா) – இதுவும் துண்டிக்கப்பட்டதுதான்.
கிழக்கு எல்லை
தொகு- ஷாஹ்பஸ்பூர் (வங்காளதேசம்) – மஹிஷாசன் (இந்தியா) – ஒரு குறுகிய தொடருந்துத் தடம் இன்றும் இருக்கிறது, என்றாலும் தொடருந்துசேவை துண்டிக்கப்பட்டுவிட்டது.
- ஆகுரா (வங்காளதேசம்) – அகர்டாலா (இந்தியா) – IRCON இன் உதவியால் இப்பாதை வளர்ந்து வருகிறது.
வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்:
தொகுஎண் | நிலையத்தின்
பெயர் (குறியீடு) |
வரும்
நேரம் |
புறப்படும்
நேரம் |
நிற்கும்
நேரம் (நிமிடங்கள்) |
கடந்த
தொலைவு (கி.மீ) |
நாள் | பாதை |
---|---|---|---|---|---|---|---|
1 | கொல்கத்தா
(KOAA) |
தொடக்கம் | 07:10 | 0 | 0 | 1 | 1 |
2 | டாக்கா
(DAKA) |
18:00 | முடிவு | 0 | 375 | 1 | 1 |
வழிப்பாதை
தொகுகொல்கத்தா மற்றும் டாக்கா நகரங்களுக்கு இடையே செயல்படும் ஒரேயொரு தொடருந்து மைத்திரீ விரைவுவண்டி ஆகும். இது இருபுறங்களில் இருந்தும் வாரத்தின் ஐந்து நாட்களில் செயல்படுகிறது. டாக்கா – கொல்கத்தா நகரங்களுக்கிடையே சுமார் 375 கிலோ மீட்டர்கள் தூரத்தினை மைத்திரி விரைவுவண்டி கடக்கிறது. நுழைவு சோதனைக்காக இந்தியாவின் கேடே நகரம், வங்காளதேசம் தர்ஷானா நகரம் ஆகிய இரு இடங்களில் மட்டும் நிறுத்தப்படுகிறது.[5]
மைத்திரீ விரைவுவண்டி மொத்த தூரத்தினை கடக்க 10–11 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். ஏனெனில் வங்காளதேசம் நாட்டிற்குள் சென்றவுடன் தொடருந்தானது மின்சாரத்தினால் செயல்படாது. எனவே, டீசல் இஞ்சின் உதவிகொண்டுதான் இயக்கப்படும். இதனால்தான் இந்த கால தாமதம் ஏற்படுகிறது. வங்காளதேசத்தின் தர்ஷானாவில் பயணிகள் மாறுவதும், இஞ்சின் மாற்றமும் நிகழும். கங்கைக்கு மீதுள்ள ஹர்டிங்கே பாலம் மற்றும் யமுனா ஆற்றின் மேலுள்ள யமுனா பல்பயன்பாட்டு பாலம் ஆகியவை இந்தத் தொடருந்து கடக்கும் முக்கிய ஆற்றுப்பாலங்கள் ஆகும். இந்தியாவின் தொடருந்தில் இந்தியாவின் இஞ்சின் மற்றும் ரயில்பெட்டிகள் இருக்கும். வங்காளதேசத் தொடருந்தில் இந்தோனேசியாவில் தயாரான பெட்டிகள் மற்றும் இந்தியாவில் தயாரான இஞ்சின் இருக்கும்.
குறிப்புகள்
தொகு- ↑ "Kolkata-Dhaka Moitree Express flagged off". The Times of India (Times Internet Limited). 14 April 2008 இம் மூலத்தில் இருந்து 2012-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020100744/http://articles.timesofindia.indiatimes.com/2008-04-14/india/27746168_1_kolkata-and-dhaka-passenger-train-services-kolkata-dhaka-moitree-express. பார்த்த நாள்: 2008-04-17.
- ↑ "Dhaka-Calcutta train link resumes". BBC News (BBC). 14 April 2008. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7345724.stm. பார்த்த நாள்: 2008-04-17.
- ↑ "A Report from Dhaka to Kolkata on the first operation day". BBC News, watching available by Windows Media Player. http://news.bbc.co.uk/media/avdb/news/world/video/166000/bb/166080_16x9_bb.asx?ad=1&ct=50. பார்த்த நாள்: 2008-04-20.
- ↑ Sudworth, John (8 July 2007). "First India-Bangladesh train link". BBC News (BBC). http://news.bbc.co.uk/2/hi/south_asia/6281710.stm. பார்த்த நாள்: 2008-04-17.
- ↑ "Maitree Express". Cleartrip. 25 May 2015. Archived from the original on 27 மே 2015.