மொழிமுதல் எழுத்துக்கள்

மொழியின் முதலில் வரும் எழுத்துகள் மொழிமுதல் எழுத்துகள் ஆகும்.[1]

தொல்காப்பியம் மொழிமரபு நிரல் நச்சினார்க்கினியர் உரை பதிப்பு 1937

முதலெழுத்து என்பது உயிரும் மெய்யும். இதில் உள்ள முதல் என்னும் சொல் "முதலை வைத்துப் பொருளீட்டு" என்னும் சொற்றொடரில் உள்ள முதல் போன்றது. ஆதி பகவன் முதற்றே உலகு[2] என்பதில் உள்ள முதல் என்பதும் இதே பொருளைக் கொண்டது. இது கால முதன்மை கொண்ட மூலதனம்.

மொழிமுதல் எழுத்து என்பதில் உள்ள முதல் இட முதன்மையைக் காட்டும். முதலில் நிற்கிறான். அகர முதல எழுத்தெல்லாம்[2] என்பனவற்றிலுள்ள முதல் போன்றது. இது இட முதன்மை.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மொழிமரபு என்னும் இரண்டாவது இயலில் கூறப்படும் செய்திகளில் மொழிமுதல் எழுத்துகள் பற்றிய செய்தியும் ஒன்று.

பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக் கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவது சொல்லாகிறது. தமிழ் சொற்களில் முதலில் வரும் எழுத்துகள் மொழி முதல் எழுத்துகள் எனப்படுகின்றன. அவை என்பது இங்குக் கூறப்படுகிறது. இவற்றின் மூலம் புணர்ச்சியில் எந்த எழுத்து வரும்போது என்ன நிகழும் என்று காணமுடியும்.

மொழி முதல் எழுத்துகள் 22 தொகு

 
மொழிமுதலெழுத்துக்களின் தெரிவுப்படம்

தமிழ் எழுத்துகள் 33. மொழிமுதல் எழுத்துகள் 22, மொழியிறுதி எழுத்துகள் 24 (புணரியல் நூற்பா 1)

பழந்தமிழ்ச் சொற்கள் தெரியவரும் என்பதால் எடுத்துக்காட்டுகள் இளம்பூரணரைத் தழுவித் தரப்படுகின்றன:

12 உயிரெழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1. அடை [3], 2. ஆடை, 3. இடை, 4. ஈயம், 5. உரல், 6. ஊர்தி, 7. எழு [4], 8. ஏணி, 9. ஐவனம் [5], 10. ஒளி, 11. ஓளி [6] 12. ஔவிம் [7]
மெய்யெழுத்து மொழிமுதலில் வராது. உயிர்மெய் எழுத்தாகத்தான் வரும்.

க வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1.கலை [8], 2.காளி [9], 3.கிளி, 4.கீரி, 5.குடி, 6.கூடு, 7.கெண்டை, 8.கேழல், 9.கைதை [10], 10.கொண்டல் [11], 11.கோடை [12], 12.கௌவை [13]

த வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1.தந்தை, 2.தாடி, 3.திற்றி [14], 4.தீமை, 5.துணி, 6.தூணி [15], 7.தெற்றி [16], 8.தேவர், 9.தையல் [17], 10.தொண்டை [18], 11.தோடு [19], 12.தௌவை [20]

ந வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1.நடம், 2.நாரை, 3.நிலம், 4.நீர், 5.நுழை, 6.நூல், 7.நெய்தல், 8.நேயம், 9.நைகை, 10.நொய்யன, 11.நோக்கம், 12.நௌவி [21]

ப வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1.படை, 2.பாடி [22], 3.பிடி, 4.பீடம் [23], 5.புகழ், 6.பூமி [24], 7.பெடை, 8.பேடி, 9.பைதல் [25], 10.பொன், 11.போதகம் [26], 12.பௌவம் [27]

ம வரிசை 12 எழுத்தும் மொழிக்கு முதலில் வரும் தொகு

1.மடம், 2.மாடம், 3.மிடறு,[28] 4.மீனம் [29], 5.முகம், 6.மூதூர், 7.மெலிந்தது, 8.மேனி, 9.மையல், 10.மொழி, 11.மோதகம் [30], 12.மௌவல் [31]

ச வரிசையில் 12 எழுத்து மொழிக்கு முதலில் வரும். தொகு

1.சாலை, 2.சிலை, 3.சீறுக, 4.சுரும்பு [32], 5.சூழ்க, 6.செய்கை, 7.சேவடி, 8. சொறிக [33], 9.சோறு 10.சௌ 11.ச 12.சை

வ வரிசையில் 8 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (வு, வூ, வொ, வோ வராது) தொகு

1.வளை [34], 2.வாளி [35], 3.விளரி [36], 4.வீடு, 5.வெள்ளி, 6.வேர், 7.வையம் [37], 8.வௌவு [38]

ஞ வரிசையில் 3 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (ஞா, ஞெ, ஞொ) தொகு

1.ஞாலம், 2.ஞெகிழி [39], 3.ஞொள்கிற்று [40]

ய வரிசையில் 1 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (யா) தொகு

1.யான்

குற்றியலுகரம் 1 தொகு

1.நுந்தை (இது முறைப்பெயர். உன் தந்தை எனபது இதன் பொருள். இச் சொல்லின் முதலெழுத்தை இதழ் குவியாமல் ஒலித்தால் அப்போது அச்சொல் குற்றியலுகரம். இச்சொல்லையே இதழ் குவிய ஒலித்தால் அப்போது அச்சொல்லின் முதலெழுத்து முற்றியலுகரம்.

(இடைச்சொல் ஙகரம்) உரையாசிரியர்கள் இதனைக் கணக்கில் கொள்வதில்லை தொகு

'ங' எழுத்து மொழிக்கு முதலில் வராது. எனினும் தனிப்பொருள் தரும் துணைப்பெயராக வருவதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[41] தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் இதற்கு வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம், அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் என்னும் எடுத்துக்காட்டுகளைத் தந்துள்ளார்.
  • நன்னூல் 'ங' எழுத்தை மொழிமுதாகும் எழுத்தோடு இணைத்துள்ளது.

தொல்காப்பிய முறைமை காட்டும் பட்டியல் தொகு

தொல்காப்பியத்தின்படி மொழிமுதல் எழுத்துகள் [42]

எழுத்து வரிசை எண்ணிக்கை எடுத்துக்காட்டு
உயிர் வரிசை 12 அடை, ஆடை, இலை, ஈயம், உரல், ஊர்தி, எலி, ஏணி, ஐவனம், ஒளி, ஓக்கம், ஔவியம்
க வரிசை 12 கலை, காலை, கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேயல், கைதை, கொண்டல், கோடை, கௌவை
ச வரிசை 9 அ, ஐ, ஔ நீங்கலாக சாலை, சிலை, சீற்றம், சுரும்பு, சூழ்க, செய்க, சேண், சொல், சோறு
ஞ வரிசை 3 ஆ, எ, ஒ மூன்றில் மட்டும் ஞாலம், ஞெகிழி [39], ஞொள்கிற்று [43]
த வரிசை 12 தத்தை, தாடி, திற்றி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேவர், தையல், தொண்டை, தோடு, தௌவை
ந வரிசை 12 நண்டு, நாரை, நிலம், நீர், நுங்கு, நூல், நெய், நேயம், நைகை [44], நெடி, நோக்கம், நௌவி [45]
ப வரிசை 12 படை, பாடி, பிடி, பீர்க்கு, புகழ், பூண்டு, பெண், பேய், பைதல், பொன், போர், பௌவம் [46]
ம வரிசை 12 மடல், மாடு, மிடல் [47], மீன், முள், மூடி, மெய், மேனி, மையல், மொழி, மோதகம் [48], மௌவல் [49]
ய வரிசை 1 (யா மட்டும்) யான், யாண்டு, யாறு
வ வரிசை 8 உ, ஊ, ஒ, ஓ நீங்கலாக வலை, வானம், விலை, வீடு, வெள்ளி, வேம்பு, வையம், வௌவுதல்
குற்றியலுகரம் 1 நுந்தை [50]
- ஆக மொத்தம் 94 -

நன்னூல் நெறி தொகு

நன்னூல் காலத்தில் சில மாற்றங்கள் தோன்றின.[51] தொல்காப்பியம் விலக்கிய எழுத்துகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

  • ச வரிசையில் (சட்டி, சையம், சௌரி) என 3
  • ய வரிசையில் (யவனர், யுகம், யூபம், யோகம், யௌவனம்) என 5
  • ஞ வரிசையில் (ஞமலி) என 1
  • ங வரிசையில் (அ + ஙனம் = அங்ஙனம்) 1

ஆக 10 எழுத்துகள் கூடின.

தொகு

அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என 5 நிலைகளில் ங மொழிமுதல் ஆகும்.
சகரம் 12 உயிரோடும் மொழிமுதல் ஆகும்.
சனி, சாரல், சிலை, சீலை, சுளை, சூளை, செறி, சேறி, சையம், சொரி, சோரி, சௌரி - இவை மயிலைநாதர் தரும் எடுத்துக்காட்டு.

ச மொழிமுதல் பற்றி மயிலைநாதர் விளக்கம் தொகு

மயிலைநாதர் தரும் சொற்களைத் தேவநேயப் பாவாணர் வழிமொழிந்து தொல்காப்பிய நூற்பாவுக்கே வேறு வகையில் பாடம் கொள்கிறார்.

மயிலைநாதர் தரும் வெண்பா (பொருள்நோக்குச் சொற்பிரிப்பு)
சரி, சமழ்ப்புச், சட்டி, சருகு, சவடி
சளி, சகடு, சட்டை, சவளி - சவி, சரடு
சந்து, சதங்கை, சழக்கு ஆதி ஈரிடத்தும்
வந்தனவால் சம்முதலும் வை.

கண்ணோட்டம் தொகு

சொல் பொருள் இப்பொருளைக் குறிக்கும் தொல்காப்பியர் காலச் சொல்
சரி சரியா, இல்லையா ஏற்பு
சமழ்ப்பு சப்பைக்கட்டுக் கட்டிச் சாமர்த்தியமாகப் பேசல் "கடிசொல் இல்லை காலத்துப் படினே"
சட்டி மட்பாண்டம் கலம்
சருகு உதிர்ந்து காய்ந்த இலைகள் ஊழிலை
சவடி சாவி நெல் பதடி (மக்கட் பதடி எனல் - திருக்குறள்)
சளி தடுமநோய் -
சகடு வண்டி ஆழி
சட்டை மேல்சட்டை மெய்ப்பை
சவளி சப்பளாக்கட்டை -
சவி தன்னைத்தானே சபித்துக்கொள் அவி (ஐந்து அவித்தான் - திருக்குறள்)
சரடு கயிறு ஞாண்
சந்து "சந்து நீவி" (மலைபடுகடாம்) புழை
சதங்கை காலணி வகை சிலம்பு
சழக்கு பிணக்கு புலத்தல், ஊடுதல், துனித்தல்

புத்தாக்கம் தொகு

"கடிசொல் இல்லை காலத்துப் படினே" என்று தொல்காப்பியர் சொல்லதிகாரப் புறனடையில் புத்தாக்கச் சொற்களை வரவேற்றுள்ளார்.

இடைக்கால மரபு தொகு

தற்கால பிறமொழிகளின் தாக்கம், வாணிபத் தொடர்புகள் என்பவற்றால் பிறமொழிச் சொற்கள் தமிழில் எழுதப்படும்போது அச்சொற்களின் முன்னே மொழிமுதல் எழுத்துகள் சேர்ப்பது இலக்கணம் வழக்கம். பலநேரங்களில் முறையான ஏற்போ ஏரணமோ இன்றி தவிர்த்தும் எழுதப்படுகின்றன. கீழே சில எடுத்துக்காட்டுகள்:

ராகவன் - "இராகவனே தாலேலோ" - பெரியாழ்வார்.
ராமன் - "இராமன்" - கம்பன்
லட்சுமணன் - "இலக்குவன்" - கம்பன்
யேசு - இயேசு
ரோம் - உரோம்
பேஸ் (face) – "பேசு"

பிழையான பாவனை தொகு

கீழே உள்ளவை தமிழிலக்கணப்படி பிழையானவை. ஊடகங்களும் சிலரும் இப்படி எழுதுவதை இங்கே காட்டப்பட்டுள்ளன.

லட்டு, லாடம், லாபம், லௌகிகம், லொள்ளு,
ரத்தம், ரப்பர், ராட்டினம், ரொக்கம், ரோடு
க்ருபை
ஃபேன், ஃபாதர்
ஜாலம்
ஸ்ரீதரன்

முறைமீறி சிலர் எழுதும் வழக்கம் தொகு

  • ரம்பம், ராணி, ரிப்பன், ரீங்காரம், ரூபாய், ரெட்டி, ரொட்டி, ரோலர்
  • லட்டு, லாபம், லீலை, லைலா.

என்றெல்லாம் எழுதுவது முறைமீறி வழக்கத்தில் உள்ளன. தமிழ்ப்பேரகராதியில் இலட்டு, இலாபம், இலீலை போன்றவை இகரத் துணையுயிர் எழுத்துகளுடன் பதிவாகியுள்ளன.

அடிக்குறிப்பு தொகு

  1. "மொழி இறுதி, முதல் எழுத்துகள்". பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 திருக்குறள் 1
  3. (இலை) (நினைவுகூர்க - அடையாறு)
  4. (எழுந்து புடைத்திருக்கும் மார்பெலும்பு)
  5. (புன்செய் நிலத்தில் விளையும் வெண்ணெல்)
  6. (யானைக்கூட்டம்.)
  7. (பொறாமைச் சொற்கள்)
  8. (ஆண்மான்)
  9. (காள் நிறம் அதாவது கருநிறம் கொண்டவள்)
  10. (தாழை)
  11. (கீழைக்காற்று)
  12. (மேலைக்காற்று)
  13. (பழி தூற்றுதல் - "கௌவையாற் கௌவிது காமம்"-திருக்குறள் 1144)
  14. (ஊன்கறி)
  15. (ஒரு கலம் தானியத்தில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது எட்டு வள்ளம் கொண்ட அளவை)
  16. (கற்களைக் கையால் தெறித்துப் பிடிக்கும் பழங்கால விளையாட்டு)
  17. (பெண்)
  18. (ஆதொண்டை என்னும் காய். ஆடி அம்மாவாசை அன்று இது நோன்புணவில் சேர்த்துக்கொள்ளப்படும்)
  19. (பனைமட்டை)
  20. (தவ்வை, மூத்த அக்கா)
  21. (நவ்வி)
  22. (ஊர்)
  23. (பீடு = மேன்மை, பீடம் = மேலிடம் - தமிழ்)
  24. (புதிது புதிதாகப் பூத்துக்கொண்டே இருக்கும் நிலம் - தமிழ்)
  25. (துன்பம்)
  26. (பூ கருக்கொள்ளும் மையம்)
  27. (பவ்வம், கடலலை)
  28. (தொண்டை உறுப்பு)
  29. (பங்குனி மாதம்)
  30. (இட்டிலி போன்ற பண்ணியம்)
  31. (மரமல்லிகைப் பூ)
  32. (வண்டு)
  33. (கொட்டுக)
  34. (சங்கு)
  35. (அம்பு)
  36. (பாலைப்பண்)
  37. (வண்டி)
  38. (கவர்ந்துகொள்)
  39. 39.0 39.1 (தீப்பந்தம்)
  40. (தளர்வுற்றது)
  41. தொல்காப்பியம் (1-1-30) (1-1-31)
  42. தொல்காப்பியம் மொழிமரபு 26 முதல் 35
  43. (நுரைத்துப்போயிற்று)
  44. (நைந்துபோதல்)
  45. (நவ்வி மான்)
  46. (அலைகடல்)
  47. (வலிமை)
  48. (குழிப்பணியாரம்)
  49. (மர மல்லிகை)
  50. (உன் தந்தை)
  51. நன்னூல் நூற்பா 102 முதல் 106

இவற்றையும் பார்க்க தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழிமுதல்_எழுத்துக்கள்&oldid=3895697" இலிருந்து மீள்விக்கப்பட்டது