மோனிரா ரகுமான்

மோனிரா ரகுமான் (Monira Rahman) என்பவர் வங்காளதேசத்தினைச் சார்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆவர். இவர் 1965ல் கிழக்கு பாக்கித்தானில் (இன்றைய வங்காளதேசம்) ஜெசோரில் பிறந்தார். இவரது இயக்கத்தால், வங்காளதேசத்தில் பெண்கள் மீதான அமிலத் தாக்குதல் மற்றும் பெட்ரோல் தாக்குதல்கள் 40 மடங்கு குறைந்துள்ளது. இவர் சட்டங்களைத் திருத்தி மாற்றியமைக்கக் காரணமாக இருந்தார். இவர் தலைநகரிலிருந்து தொலைதூர பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடனடி உதவி கிடைப்பதை உறுதி செய்ததுடன் உளவியல் தொடர்பான மற்றும் பிற பின்தொடர்தல் சேவைகளையும் உருவாக்கியுள்ளார்.[1] ரகுமானின் தைரியமான செயல்பாட்டிற்காக 2006ஆம் ஆண்டு பன்னாட்டு மன்னிப்பு அவையின் மனித உரிமை பாதுகாவலர் விருதைப் பெற்றார். இவர் அமிலப் பாதிப்பிலிருந்து உயிர்பிழைத்தோர் அமைப்பினை நிறுவினார். இதற்காக மருத்துவர் ஜான் மோரிசனுடன் பணிபுரிந்தார். இந்த அவையில் 2002 முதல் 2013 வரை நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். ரகுமானுக்கு 2011-ல் உலக குழந்தைகள் பரிசு வழங்கப்பட்டது. வங்காளதேசத்தில் அமில மற்றும் பெட்ரோல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் துணிச்சலான போராட்டத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது.[2] ரகுமான் 2012இல் பொதுநலவாயத் தொழில்முறை அமைப்பின் உறுப்பினராகவும், 2013இல் அசோகா உறுப்பினராகவும் ஆனார்.[3]

மோனிரா ரகுமான்
ரகுமான் 2013இல்
பிறப்புஜெசோர், வங்காளதேசம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வங்காளதேசத்தில் குறைந்த அமிலத் தாக்குதல்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ரகுமான் குடும்பத்தில் இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இவர்களில் இளையவர் ரகுமான் ஆவார். வங்காளதேச விடுதலைப் போரின் போது (1971), இவருடைய குடும்பம் தப்பி ஓட வேண்டியிருந்தது. இவருடைய தந்தை இறந்துவிட்ட நிலையில், இவருடைய அம்மா ஆறு குழந்தைகளை வளர்க்க வேண்டிய நிலை வந்தது. இந்த பரிதாபகரமான நிலை ரகுமானின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே ரகுமான் மிகவும் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்.[1] குழந்தைப் பருவத்திலிருந்தே ரகுமான் விவாதம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது இவருக்குத் தலைமைத்துவத்தை வளர்க்க வழிவகுத்தது மற்றும் கேள்வி கேட்கக் கற்றுக்கொடுத்தது. வங்காளதேசத்தின் தாக்கா பல்கலைக்கழகத்தின் சம்சுன்னஹார் கூடத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டப்படிப்புக்குப் பிறகு இவரது குடும்பம் இவரை அரசாங்க வேலைக்குச் செல்ல கட்டாயப்படுத்தியது. ஆனால் அதற்குப் பதிலாக இவர் சமூக ஆர்வலராக உலகளாவிய அக்கறை அமைப்பில் சேர்ந்தார்.[1]

கல்வி தொகு

ரகுமான் 1981இல் குமருன்னெசா பெண்கள் பள்ளியில் எஸ். எஸ். சி. கல்வியினையும், 1983இல் ஈடன் பெண்கள் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளிக் கல்வியினையும் முடித்தார். பின்னர், இவர் தாக்கா பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை (ஆனர்ஸ்) மற்றும் முதுகலை படிப்பினை தத்துவவியலில் முறையே 1987 மற்றும் 1988 ஆண்டுகளில் முடித்தார்.

தொழில் தொகு

ரகுமான் 1992ஆம் ஆண்டில் உலகளாவிய அக்கறை அமைப்பில் சமூக சேவையாளராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். 1992 முதல் 1999 வரை இங்கு பணியாற்றினார். இங்கு பணியாற்றிய போது வணிக ரீதியான பாலியல் தொழிலாளர்கள், தெரு குழந்தைகள் மற்றும் வீடற்றவர்களின் உரிமைகளை நிலைநாட்ட இவர் செயல்பட்டார். குறிப்பாகத் தெருக்களில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் நாடோடிச் சட்டம் 1943இன் கீழ் அடிக்கடி கைது செய்யப்பட்டுவந்தனர். ரகுமானின் செயல்பாடு காரணமாக நடோடிச் சட்டம் மற்றும் சிறார் நீதி அமைப்பை மறுபரிசீலனை செய்ய வழிவகுத்தது. ஊர்சுற்றித்திரிபவர்களைக் கண்காணிக்கக் குழுவை உருவாக்க அமைச்சகம் முறையான உடன்பாட்டை ஏற்படுத்தியது.[1] இந்த சமயத்தில் நாடு முழுவதும் பெண்கள் மீதான அமிலத் தாக்குதலின் எண்ணிக்கை மற்றும் அதன் தீவிரத்தினை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். ரகுமான் பெண்கள் உரிமை அமைப்பான “நாரி போக்கோ”வில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் 1998ஆம் ஆண்டில் அமில தாக்குதலில் உயிர்பிழைத்தோர் அறக்கட்டளையில் சேர்ந்தார். இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக 2002 முதல் ரகுமான் உள்ளார்.[4] இவர் தற்போது மனநல முதலுதவி வங்காளதேசத்தில் நாட்டின் முன்னணி செயல்பாட்டாளராகவும், வங்காளதேச நல்வாழ்வுக்கான புதுமையின் நிர்வாக நிறுவன இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.[3]

கவுரவங்கள் மற்றும் விருதுகள் தொகு

ரகுமான், மனித உரிமைகள் பாதுகாவலர் (மார்ச் 2006) என்ற விருதினை பன்னாட்டு மன்னிப்பு சபையிடமிருந்து பெற்றுக்கொண்டார். பெண்களுக்கான ஆரோக்கியம் மற்றும் கண்ணியத்திற்கான பன்னாட்டு விருதினை (அக்டோபர் 2009) - அமெரிக்க ஐக்கிய மக்கட்தொகை நிதி-அமெரிக்கர்கள் அமைப்பிடமிருந்து பெற்றார். உலக குழந்தைகள் பரிசு கவுரவ விருதினை ஏப்ரல் 2011இல் இவருக்குச் சுவீடனில் உள்ள உலக குழந்தைகள் பரிசு அறக்கட்டளை அமைப்பு வழங்கியது. பொதுநலவாயத் தொழில்முறை அமைப்பின் உறுப்பினராக அக்டோபர் 2012 முதல் பொதுநலவாயத் உதவித்தொகை பெற்றார். மேலும் அசோகா நிதியுதவியினையும் (பிப்ரவரி 2015) பொதுமக்களுக்கான சேவைக்காகப் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Monira Rahman". Ashoka | Everyone a Changemaker (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-08.
  2. "Monira Rahman - World's Children's Prize". worldschildrensprize.org. பார்க்கப்பட்ட நாள் 2019-06-08.
  3. 3.0 3.1 "Monira Rahman". Linkedin.
  4. "Fighting acid attacks in Bangladesh – Monira Rahman and the "Acid Survivors Foundation" | Berliner Menschenwürde Forum". www.human-dignity-forum.org. Archived from the original on 2019-06-08. பார்க்கப்பட்ட நாள் 2019-06-08.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிரா_ரகுமான்&oldid=3867233" இலிருந்து மீள்விக்கப்பட்டது