யாக்கோபு நற்செய்தி

யாக்கோபு நற்செய்தி[2] என்பது கன்னி மரியாள் அற்புதமான கருத்தரிப்பால் பிறந்ததையும், அவரது வளர்ப்பு மற்றும் யோசேப்புடன் திருமணம், பெத்லகேமுக்கு பயணம், இயேசுவின் பிறப்பு ஆகிய நிகழ்வுகளைக் கூறும் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குழந்தைப் பருவ நற்செய்தியாகும். [3] [4]

இது மரியாளின் நிலையான கன்னித்தன்மையை உறுதிப்படுத்துகின்றது.[5] எனினும் கி.பி. 405இல் போப் இன்னசென்ட் I இந்த நற்செய்தியை கண்டனம் செய்தார், பின்பு 500களில் கெலாசியன் ஆணையால் இந்த நற்செய்தி நிராகரிக்கப்பட்டது, எனினும் மரியாளியல் குறித்த செல்வாக்கு மிக்க ஆதாரமாக இந்நூல் விளங்குகிறது. [6]

இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர் யாக்கோபு (யோசேப்பின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்) இந்த நற்செய்தியை எழுதிய ஆசிரியராவார். திருத்தூதர் பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் இவரை திருத்தூதர் யாக்கோபு, இறைவனின் சகோதரர் (the Lord's brother) என்று குறிப்பிட்டுள்ளார் (கலாத்தியர் 1:19).

கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கம் தொகு

நற்செய்தியின் உரை மூன்று தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளது:

  1. அத்தியாயங்கள் 1–17: மரியாளின் வாழ்க்கை வரலாறு - அவரது அற்புதமான பிறப்பு, புனிதமான குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம், யோசேப்புடனான அவரது மண ஒப்பந்தம் மற்றும் இயேசுவின் கன்னிக் கருத்தரிப்பு;
  2. அத்தியாயங்கள் 18-20: இயேசுவின் பிறப்பு, பிறப்புக்குப் பிறகும் மரியாள் கன்னியாகவே இருந்தார் என்பதற்கான சான்று உட்பட;
  3. அத்தியாயங்கள் 22-24: திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியாவின் மரணம். [7]

மரியா கருத்தரித்த தருணத்திலிருந்து பெரும் திட்டத்திற்காக விதிக்கப்பட்ட ஒரு அசாதாரண குழந்தையாகக் காட்டப்படுகிறார். [8] அவளது பெற்றோர், செல்வந்தரான யோவாக்கிம் மற்றும் அவரது மனைவி அன்னா (அல்லது அன்னே), தங்களுக்கு குழந்தைகள் இல்லை என்ற வருத்தத்தில் இருந்தனர், யோவாக்கிம் தனியாக வனாந்தரத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தார். அன்னா தனது குழந்தை இல்லாத நிலையைக் குறித்து புலம்பினார்.[9] அன்னாவின் வேண்டுதலை கடவுள் ஏற்றார். வானதூதர்கள் அன்னாவின் முன்பு தோன்றி அவருக்குப் பிறக்கவுள்ள குழந்தையை முன்னறிவிக்கிறார்கள். அன்னா தனக்குப் பிறக்கும் குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணித்து, அவள் கோயிலில் வளர்க்கப்பட வேண்டும் என்று நேர்ந்து கொண்டார். [9]அவர் தாம் கருத்தரித்த ஏழாவது மாதத்தில் (மேரியின் எதிர்கால வாழ்க்கையின் விதிவிலக்கான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். [10] [9] யோவாக்கிம் மற்றும் அன்னா தங்கள் குழந்தைக்கு "மரியா" என்று பெயரிட்டனர், மேலும் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும் போது அவளை கோவிலுக்கு அனுப்புகிறார்கள், [9]அங்கு ஒவ்வொரு நாளும் ஒரு தேவதை அவளுக்கு உணவளித்தார். [7]

மரியா தனது பன்னிரண்டாவது வயதை நெருங்கிய போது, அவரது மாதவிடாய் காரணமாக திருக்கோவில் அசுத்தமாகிவிடக்கூடாது என்பதால் இனியும் அவர் கோயிலில் தங்க அனுமதிக்க முடியாது என்று ஆசாரியர்கள் முடிவு செய்தனர். மாற்றுவழிக்காக தலைமைக்குரு கடவுளிடம் வேண்டினர். பிறகு கடவுளின் அடையாளம் வெளிப்பட்டு ஒரு ஆண் விதவையான யோசேப்பு, மரியாவின் பாதுகாவலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்: [9] யோசேப்பு வயதானவராகவும், ஏற்கனவே மகன்களைக் கொண்டும் இருந்தார்; எனவே மரியாவுடன் இல்லற வாழ்வில் இணைய அவர் விரும்பவில்லை.[11] யோசேப்பு வீடு கட்டும் வேலைக்காக வெளியூர் புறப்படுகிறார். இந்நிலையில் ஒருநாள் ஆலயத் திரையை நெய்வதற்கு உதவியாக மரியா கோவிலுக்கு அழைக்கப்பட்டார். அங்கு ஒருநாள் வானத்தூதர் தோன்றி, மீட்பராகிய இயேசுவைக் கருத்தரிக்க மரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் மற்ற பெண்களைப் போல அவர் பெற்றெடுக்க மாட்டார் எனவும் கூறினார். [12] யோசேப்பு திரும்பி வந்தபோது, மரியா ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டு, குருக்கள் தான் குற்றவாளி என்று கருதிவிடுவார்கள் என்று பயந்து மரியாவைக் கண்டிக்கிறார். [13] இருவரும் விசாரணைக்காக தலைமைக்குரு முன்பு நிறுத்தப்பட்டனர். பிறகு இருவரின் கற்பும் " கசப்பான நீரின் சோதனை" மூலம் நிரூபிக்கப்பட்டது. [14]

உரோமானிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக யோசேப்பு-மரியா இருவரும் பெத்லகேமுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் அவர்கள் கிராமத்தை அடையும் முன்பு மரியாவுக்கு பேறுகாலம் ஏற்படுகிறது.[15] எனவே யோசேப்பு மரியாவை ஒரு குகையில் குடியமர்த்துகிறார், அங்கு தனது மகன்களை காவலுக்கு நிறுத்திவிட்டு அவர் ஒரு மருத்துவச்சியைத் தேடிச் சென்றார், அப்போது திடீரென அனைத்து படைப்புகளும் அசையாமல் நிற்கின்றன. [13] யோசேப்பு ஒரு மருத்துவச்சியுடன் திரும்புகிறார், அவர்கள் குகையின் வாயில் நிற்கும்போது ஒரு மேகம் குகையை மறைத்தது, ஒரு பேரொளி குகையை நிரப்பியது, திடீரென்று மரியாயின் மார்பில் ஒரு குழந்தை தென்பட்டது. [13] யோசேப்பும் மருத்துவச்சியும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தனர், ஆனால் சலோமி என்ற இரண்டாவது மருத்துவச்சி மரியாவின் கன்னித்தன்மையை நம்பாமல் பரிசோதித்தார், இதனால் அவர் கைவிரல்கள் எரிந்தன; சலோமி கடவுளிடம் மன்னிப்பு வேண்டினார், ஒரு வானத்தூதர் தோன்றி, குழந்தை இயேசுவை தொடச் சொல்கிறார். அவ்வாறு தொட்டவுடன் சலோமியின் கைவிரல்கள் குணமாகின. [16]

மூன்று ஞானிகளின் வருகை, பெத்லகேமில் மாசில்லா குழந்தைகள் படுகொலை, தலைமைக்குரு செக்கரியாவின் உயிர்த்தியாகம் மற்றும் அவருக்கு அடுத்த தலைமைக்குருவாக சிமியோன் தேர்ந்தெடுக்கப்படுதல், [15] மற்றும் ஒரு முடிவுரை ஆகியவற்றுடன் இந்த நற்செய்தி முடிவடைகிறது. [7]

மேற்கோள்கள் தொகு

  1. Ehrman 2003, ப. 70.
  2. The original title was "The Birth of Mary"; it has many names, including the "Infancy Gospel of James", the "Story of the Birth of Saint Mary, Mother of God", and "The Birth of Mary, The Revelation of James".[1]
  3. Gambero 1999, ப. 35 ff..
  4. Betsworth 2015, ப. 166 ff..
  5. Burkett 2019, ப. 242.
  6. Hunter 1993, ப. 63.
  7. 7.0 7.1 7.2 Ehrman & Plese 2011, ப. unpaginated.
  8. Gambero 1999, ப. 35.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 Betsworth 2015, ப. 166.
  10. Gambero 1999, ப. 36.
  11. Hurtado 2005, ப. 448.
  12. Vuong 2019, ப. 7.
  13. 13.0 13.1 13.2 Betsworth 2015, ப. 167.
  14. Gambero 1999, ப. 35-40.
  15. 15.0 15.1 Gambero 1999, ப. 40.
  16. Booton 2004, ப. 55.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கோபு_நற்செய்தி&oldid=3387787" இலிருந்து மீள்விக்கப்பட்டது