ரக்பி கால்பந்து

ரக்பி கால்பந்து (Rugby football) என்பது, ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் உருவாகி வளர்ந்த கால்பந்து விளையாட்டில் இருந்து தோன்றிப் பல்வேறு கால கட்டங்களிலும் விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்களில் ஒன்றைக் குறிக்கும். இன்று இது வெறுமனே "ரக்பி" என அழைக்கப்படுவதுண்டு.

ரக்பி விளையாட்டு
ரக்பி பந்து

வரலாறு

தொகு

பண்டைக்கால கிரேக்கத்தில் ரக்பி கால்பந்தை ஒத்த எப்பிசுக்குரோசு என்னும் ஒரு விளையாட்டு விளையாடப்பட்டு வந்தது. வேல்சிலும் மத்திய காலப்பகுதியில் விளையாடப்பட்ட இதுபோன்ற ஒரு விளையாட்டு கினாப்பன் அல்லது கிரியாப்பன் என அழைக்கப்பட்டது. ரக்பிக்கு முன்னோடியாக ஐரிய நாட்டில் விளையாடப்பட்ட விளையாட்டை அவர்கள் கையிட் என அழைத்தனர். கோர்னியர்களும் இது போன்ற ஒன்றை வெண்கலக் காலத்தில் இருந்து விளையாடி வந்தனர். கிழக்கு அங்கிலியரும், பிரான்சியரும் கூட இதை ஒத்த விளையாட்டுகளை விளையாடினர்.

 
ரக்பி காற்பந்து கண்டுபிடிக்கப்பட்ட இடமாக கருதப்படும் மைதானத்திலிருந்து இரக்பி பாடசாலை.

1750க்கும் 1859 ஆம் ஆண்டுக்கும் இடையில் ரக்பி பாடசாலையில் விளையாடப்பட்ட கால்பந்து விளையாட்டில் பந்தைக் கைகளால் தொட அனுமதிக்கப்பட்டது. ஆனால், பந்தைக் கைகளில் வைத்தபடி எதிர்த்தரப்புஇலக்கை நோக்கி ஓடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அக்காலத்தில் விளையாட்டில் பங்கு கொள்பவர்களின் எண்ணிக்கை குறித்த வரையறை எதுவும் இருக்கவில்லை. சில வேளைகளில் ஒரு விளையாட்டில் நூற்றுக் கணக்கானவர்களும் பங்குபற்றினர். பந்தைக் கையில் கொண்டு ஓடலாம் என்னும் புதிய முறை 1859க்கும், 1865 ஆம் ஆண்டுக்கும் இடையில் அறிமுகமானது. வில்லியம் வெப் எல்லிசு என்பவரே 1823 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு விளையாட்டில், முதன் முதலாக உள்ளூர் விதிகளுக்கு மாறாக கையில் பந்தைக் கொண்டு ஓடியவராகக் குறிப்பிடப்படுகிறார். இதற்குச் சில காலத்தின் பின்னர் இவ்விளையாட்டுக்கான விதிகள் எழுத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போது உள்ளூரில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மட்டுமே இருந்தன. 1870ல் முதன் முதலாக எழுத்து மூலமான விதிகளை உருவாக்கியவர்கள் ரக்பி பாடசாலையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஏறத்தாழ இக் காலப்பகுதியில், ரக்பி பாடசாலையின் தலைமை ஆசிரியரான தாமசு ஆர்னோல்ட் என்பவரின் செல்வாக்குப் பிற விடுதிப் பாடசாலைகளிலும் பரவலாயிற்று. சமநிலைக் கல்வியில் விளையாட்டும் ஒரு பகுதியாக அமையவேண்டும் என்ற அவரது கருத்து இயல்பாகவே ரக்பி விதிகள் நாட்டின் பல பகுதிகளிலும் பரவ வழிகோலியது. பின்னர் இது உலகம் முழுவதிலும் பரவியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரக்பி_கால்பந்து&oldid=2451071" இலிருந்து மீள்விக்கப்பட்டது