ஈகைத் திருநாள்

இசுலாமிய சமய பண்டிகைகளில் ஒன்று
(ரம்சான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் (அரபு மொழி: عيد الفطر‎ ஈதுல் ஃபித்ர்) என்பது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது.[1] ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது பொருளாகும்.

ரமலான் நோன்பு

தொகு

இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்துக் கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களைப் பொருத்தவரையில் முக்கிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது. ரமலான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம்மாதத்தில் நோன்பிருப்பர்.

அடிப்படை நோக்கம்

தொகு

குறிப்பாக முஸ்லிமுக்கு நோன்புக் கடமையானது. ஒரு முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீகப் பயிற்சியாக இது உள்ளது. நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதுமன்று. இந்தப் பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகும் என்பதை அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

பெருநாள்

தொகு

ரமலான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், தாகித்திருந்தும், புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும், களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.

பெருநாள் தினத்தின் கடமைகள்

தொகு

இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. இரு பெருநாள் தினத்திலும் மகிழ்ச்சியுடன் களிக்க இறைவன் வழி செய்துள்ளான். அதே தினத்தை வீண் விளையாட்டிலோ, வீண் கழியாட்டத்திலோ கழிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. பெருநாள் தினத்தில் முக்கியமாகப் கீழ்க்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் தெளிவு படுத்தியுள்ளது.

  • தக்பீர் சொல்லல். பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகைவரை உள்ள நேரங்களில் ஈதுல் பித்ர் தினத்தில் சொல்வது சுன்னத்தாகும்.
  • இரு பெருநாள் இரவுகளிலும் அதிக நன்மையில் ஈடுபடுதல், உதாரணமாக அதிகமாக சுன்னத்துத் தொழுதல், அல்குர்ஆன் ஓதுதல், திக்ர், ஸலவாத்துக்கள் ஓதல், துஆக் கேட்டல் என்பன.
  • குளித்து சுத்தமாகிக் கொள்ளல் (நிய்யத்து அவசியம். ஈதுல் பித்ர் சுன்னத்தான குளியை நிறைவேற்றுகிறேன்)
  • புத்தாடை அணிதல், புத்தாடை இல்லாவிட்டால் சுத்தமான அழகிய ஆடை அணிதல்.
  • ஆண்கள் மணம் பூசிக் கொள்ளல். வெளியில் செல்லாது வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மணம் பூசுதல்.
  • இயன்றவரை அதிகமாக தர்மம் செய்தல்.
  • பெருநாள் தொழுகையிலும், குத்பாவிலும் கலந்து கொள்ளல்.

இந்த எட்டுக் காரியங்களில் ஸதகத்துல் ஃபித்ர் கட்டாயக் கடமையானது. ஏனையவை அனைத்தும் சுன்னத்தானது.

கடமையான ஃபித்ரா

தொகு

தாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன்[2] கூறுகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன், பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.[3]

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.

மேற்கோள்கள்

தொகு

மேலதிக வாசிப்புக்கு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈகைத்_திருநாள்&oldid=4000622" இலிருந்து மீள்விக்கப்பட்டது