ரேடியம் சல்பேட்டு

வேதிச் சேர்மம்

ரேடியம் சல்பேட்டு (Radium sulfate) என்பது RaSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் சராசரி மூலக்கூற்று நிறை 322.088 கி/மோல் ஆகும். ரேடியம் சல்பேட்டு வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. அறியப்பட்ட அனைத்து சல்பேட்டு உப்புகளிலும் மிகக் குறைவாகக் கரையக்கூடிய உப்பு என்ற பண்பைக் கொண்டுள்ளது.[1] முன்னதாக இச்சேர்மம் கதிரியக்க சிகிச்சையிலும் புகை கண்டறியும் கருவிகளிலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதைவிட குறைவான அபாயங்கள் கொண்ட மாற்று வேதிப் பொருட்கள் கிடைத்ததால் ரேடியம் சல்பேட்டு படிப்படியாக நீக்கப்பட்டது.

பண்புகள்

தொகு

பேரியம் சல்பேட்டின் அதே படிகக் கட்டமைப்பில் ரேடியம் சல்பேட்டு ஒரு திடப்பொருளாகப் படிகமாகிறது. a = 9.13 b=5.54 மற்றும் c = 7.31 Å என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் 369.7 Å3 என்ற அலகுசெல் அளவுடன் இது நேர்சாய்சதுரப் படிக அமைப்பில் படிகங்களாக உருவாகிறது.[2] ரேடியம் அயனியில் இருந்து ஆக்சிசனுக்கான தூரம் 2.96  Å ஆகவும், சல்பேட்டு அயனியில் கந்தகம் மற்றும் ஆக்சிசன் பிணைப்பின் நீளம் 1.485  Å ஆகவும் உள்ளது. ரேடியம் சல்பேட்டு சேர்மத்தில் ரேடியம் அயனியின் அயனி ஆரம் 1.66 Å ஆகும். மேலும் இது பத்து ஒருங்கிணைப்புகளைக் கொண்டுள்ளது.[3]

இசுட்ரோன்சியம் பேரியம் அல்லது ஈயத்தின் சல்பேட்டுகளுடன் ரேடியம் சல்பேட்டு வினைபுரிந்து திண்மக் கரைசலை உருவாக்கும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Kirby, H. W.; Salutsky, Murrell L. (1964). The Radiochemistry of Radium (PDF). National Academies Press. p. 12.
  2. Matyskin, Artem V.; Ylmen, Rikard; Lagerkvist, Petra; Ramebäck, Henrik; Ekberg, Christian (2017). "Crystal structure of radium sulfate: An X-ray powder diffraction and density functional theory study". Journal of Solid State Chemistry 253: 15–20. doi:10.1016/j.jssc.2017.05.024. Bibcode: 2017JSSCh.253...15M. https://www.sciencedirect.com/science/article/pii/S0022459617301925. 
  3. 3.0 3.1 Hedström, Hanna; Persson, Ingmar; Skarnemark, Gunnar; Ekberg, Christian (2013-05-22). "Characterization of Radium Sulphate". Journal of Nuclear Chemistry 2013: 1–4. doi:10.1155/2013/940701. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_சல்பேட்டு&oldid=4102141" இலிருந்து மீள்விக்கப்பட்டது