லயன் காமிக்ஸ்

லயன் காமிக்ஸ் பிரகாஷ் பதிப்பகத்தாரால் பதிப்பித்து தமிழில் வெளிவரும் ஒரு சித்திரகதை இதழ். முத்து காமிக்ஸ், திகில் காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ஜூனியர் லயன் ஆகியவை தொடர்புடைய சித்திரகதை இதழ்கள் எனக் கூறப்படக் காரணம் அனைத்துப் புத்தகங்களையும் பிரகாஷ் பதிப்பகத்தாரே பதிப்பித்து வெளியிடுகின்றனர்.

வரலாறு தொகு

 
விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் லயன் காமிக்ஸ்

முத்து காமிக்ஸ் முதலில் 1971-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முத்து காமிக்சை வெளியிட்ட சௌந்தரபாண்டியனின் மகனான விஜயன் லயன் காமிக்ஸ் சித்திரகதைகளை 1984 ல் வெளியிட்டார். முத்து காமிக்ஸ் ன் முதலாவது புத்தகம் இரும்புக்கை மாயாவியை மையமாக கொண்டிருந்ததுடன் 128 பக்கங்களையும் இந்திய ரூபா 0.90 ற்கும் விற்கப்பட்டது. லயன் காமிக்ஸ் ன் முதல் இதழ் மாடஸ்டி பிளைசி கதாநயகியை கொண்டு கத்தி முனையில் மாடஸ்டி பிளைசி எனும் தலைப்பில் இரண்டு ரூபாய் விலையில் வந்தது.

லயன் காமிக்சின் பிரதம ஆசிரியராக விஜயன் தனது 17வது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

1984 காலப்பகுதியில் லயன் காமிக்ஸூக்கு போட்டியாக ராணி காமிக்ஸ் சந்தையில் அறிமுகம் ஆகியது. இந்த ராணி காமிக்ஸை தினத்தந்தி நிறுவனத்தார் பதிப்பித்தனர். ஆயினும் 2005ஆம் ஆண்டளவில் நலிவடைந்து ராணி காமிக்ஸ் வெளியீடு நிறுத்தப்பட்டது. எனினும் லயன் காமிக்ஸ் இற்றை வரைக்கும் தொடர்ந்தும் பதிப்பிக்கப்பட்டு வருகின்றது.

2008 அளவில் லயன் நிறுவனம் தமது இணைய வலைத்தளத்தை கைவிட்டனர். இணையத்தில் தமது பிரசன்னத்தை காட்டுவதில் பதிப்பகத்தார் அவ்வளவாக முனைப்புக் காட்டவில்லை. இணையத்தளம் கைவிடப்பட்டபோதும் தொடர்ந்தும் லயன் புத்தகங்கள் கால இடைவெளிகளுடன் வெளிவந்தது. பின்பு 2011ஆம் ஆண்டு முதல் உயர் தர காகிதத்தில் பெரிய அளவு புத்தகமாக வெளியிட்டு வருகின்றனர். இதனால் படக்கதைகளுக்கு தமிழில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

கதைத் தேர்வு தொகு

பெரும்பாலான இதழ்கள் அமெரிக்க, ஐரோப்பிய வரைகதைளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. இரும்புக்கை மாயாவி, மாயாவி, ஆர்ச்சி போன்ற பாத்திரங்கள் புகழ்பெற்றவை. 1970 களிலும் 80களிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் வரைகதை வாசிப்பு உயர்ந்து இருந்தது. பின்னர் தொலைக்காட்சி, கேபிள் தொலைக்காட்சி போன்றவற்றின் வருகையால் இது நலிந்தது. ஏனைய தமிழ் வரைகதைகள் பதிப்பிப்போர் நிறுத்திவிட்டாலும் லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் தொடர்ந்தும் தமது புத்தகங்களைப் பதிப்பித்து வருகின்றனர். ஆயினும் புத்தகங்கள் முறையாக வருவது கிடையாது.

இதேவேளை லயன் நிறுவனத்தினர் பிரபலமான XIII கதையின் 18 பாகங்களையும் ஒன்றாகத் தொகுத்து சேகரிப்போருக்கான வெளியீடு ஒன்றை வெளியிடவுள்ளது. சுமார் 800 பக்கங்களுடன் விலை இந்திய ரூபாய் 200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகம் 2009 இல் வெளியிட இருந்தாலும் கால தாமதமாகி 2010 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதே கதை வண்ணத்தில் தரமான காகிதத்தில் 2019 ல் 2650 ரூபாய் விலையில் மறுவெளியீடாக முன்பதிவு தொடங்கி குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிட்டனர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=லயன்_காமிக்ஸ்&oldid=2965163" இலிருந்து மீள்விக்கப்பட்டது