லியாகத் அலி கான்

லியாகத் அலி கான் (Liaquat Ali Khan, உருது: لیاقت علی خان, அக்டோபர் 2, 1896 - அக்டோபர் 16, 1951) பாகிஸ்தானின் அரசியல்வாதியும், விடுதலையடைந்த பாகிஸ்தானின் முதலாவது பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் ஆவார். முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினராக இருந்து அரசியலுக்கு வந்தவர். இந்தியப் பிரிவினைக்கும், பாகிஸ்தானின் தோற்றத்திற்கும் இவரின் பங்களிப்பு முக்கியமானது. 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பிரதமராகத் தெரிவான இவர் அக்டோபர் 1951 இல் படுகொலை செய்யப்படும் வரையில் அப்பதவியில் இருந்தார். பாகிஸ்தானின் தந்தை எனப் போற்றப்படும் முகமது அலி ஜின்னாவின் வலதுகரமாகத் திகழ்ந்தவர் லியாகத் அலி கான்.

லியாகத் அலி கான்
Liaquat Ali Khan
பாகிஸ்தானின் முதலாவது பிரதமர்
பதவியில்
ஆகஸ்ட் 14, 1947 – அக்டோபர் 16, 1951
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்டது
பின்னவர்கவாஜா நசிமுத்தீன்
பிரித்தானிய இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சர்
பதவியில்
ஆகஸ்ட் 17, 1946 – ஆகஸ்ட் 14, 1947
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1896-10-02)அக்டோபர் 2, 1896
கர்னல், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 அக்டோபர் 1951(1951-10-16) (அகவை 55)
ராவல்பிண்டி,  பாக்கித்தான்
அரசியல் கட்சிமுஸ்லிம் லீக்

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியான லியாகத் 1930களில் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தார். ஜின்னாவை இந்தியாவுக்குத் திருப்பி வரவழைத்ததில் இவர் பெரும் பங்காற்றியிருந்தார். இந்திய முஸ்லிம்களுக்கு தனிநாடு கோரும் ஜின்னாவின் இயக்கத்திற்கு பெரும் ஆதாரவளித்தார். 1947 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா தற்போதைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது.

பாகிஸ்தானின் ஆரம்ப காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பிரதமர் பதவியிலிருந்த லியாகத் பெரும் பங்காற்றினார். பிரிவினைக்குப் பின்னர் காஷ்மீர் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினை ஆரம்பமானது. இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இப்பிரச்சினையை ஐக்கிய நாடுகள் வரை எடுத்துச் சென்றார். இவரது பதவிக்காலத்தில் ஐக்கிய இராச்சியத்துடனும், ஐக்கிய அமெரிக்காவுடனும் சுமுகமான உறவுகளைப் பேணினார். பாகிஸ்தானின் விடுதலையை அடுத்து உள்நாட்டில் பல அரசியல் குழப்பநிலை நிலவியது. இவரது அரசுக்கெதிராக மேற்கொள்லப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.

படுகொலை

தொகு

1951, அக்டோபர் 16 ஆம் நாளன்று, ராவல்பிண்டியில் முஸ்லிம் லீக் கட்சியின் கூட்டத்தில் முக்கிய கொள்கை உரையொன்றை ஆற்றுவதற்கு லியாகத் வருகை தந்திருந்தார். அப்போது 15 யார் தூரத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒருவன் லியாகத்தை நோக்கி இரு முறை சுட்டுப் படுகாயப்படுத்தினான். காவற்துறையினர் கொலையாளியை உடனேயே சுட்டுக் கொன்றனர். லியாகத் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் இறந்தார். கொலையாளி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பஷ்தூன் இனத்தவனான "சாட் அக்பர்" என அடையாளம் காணப்பட்டான். கொலைக்கான முழுமையான காரணம் என்றுமே வெளிவரவில்லை. பஷ்தூன் பகுதியைப் பாகிஸ்தானுடன் இணைக்க லியாகத் பெரிதும் பாடுபட்டார். இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை இக்கூட்டத்தில் வெளியிடவிருப்பதாக வதந்திகள் உலாவின. இதனாலேயே சாட் அக்பர் இவரைக் கொலை செய்ய முனைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. பாகிஸ்தான் பிரதமரின் படுகொலை - (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியாகத்_அலி_கான்&oldid=3227460" இலிருந்து மீள்விக்கப்பட்டது