வங்காள இரட்டையாட்சி

வங்காள இரட்டையாட்சி வங்காள நவாபுக்குத் தம் நாட்டைப் பாதுகாத்தல், குற்றவாளிகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல் ஆகிய உரிமைகளை (நிஸாமத்) மொகலாயப் பேரரசர் வழங்கியிருந்தார். 1765-ல் இராபர்ட் கிளைவ் பிரபு இரண்டாம் முறையாக வங்காள கவர்னராக நியமிக்கப்பெற்று இந்தியாவுக்கு வந்தார். அப்பொழுது நாட்டின் நிலைமை சீர்கெட்டிருந்தது. அவர் அயோத்தி நவாபை மீண்டும் பதவியிலிருத்தினார். அவருடைய இராஜ்ஜியதிலிருந்து ஒரு பகுதியை மொகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலத்திற்குக் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சியுற்ற ஷா ஆலம் ஆங்கிலேயருக்கு வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாகாணங்களில் "திவாணி" என்னும் உரிமையை வழங்கினார். இதன்படி, கிழக்கிந்தியக் கம்பெனியார் மாகாணங்களில் வரி வசூலிப்பதற்கும் செலவுகள் செய்வதற்கும், சிவில்நீதி வழங்குவதற்கும் உரிமை பெற்றனர். இவ்வாறு 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காளத்தில் இரட்டையாட்சி தொடங்கியது.

1765-ல் வங்காள நவாபு மீர்ஜாபர் இறக்கவே, ஆங்கிலேயர் அவருடைய மகனாரான நாஜம்-உத்-தெளலாவை நவாபு பதவியிலிருத்தினர். ஆயினும் இராணுவத் துறையையும் நிர்வாகத்துறையையும் தாமே செயல் முறையில் ஏற்றுக்கொண்டனர். திவானி, நிஸாமத் ஆகிய இரு பொறுப்புக்களும் ஆங்கிலேயரிடம் வந்து சேர்ந்தன. இவற்றைத் தாமே நிர்வகிக்கத் திறனற்ற ஆங்கிலேயர் தயங்கினர். பிறகு வங்காளம், பீகார் மாகாணங்களுக்கு உதவி நவாபுகள் அமர்த்தப் பெற்றனர். நவாபு இவர்களை ஆங்கிலேயர் சம்மதம் பெற்றுத்தான் நியமிக்கவோ நீக்கவோ வேண்டுமென்று ஆங்கிலேயர் விதித்தனர். வரிவகுல் அதிகாரத்தையும் சிவில் நீதி முறையையும் இந்திய அலுவலர்களிடமே ஒப்படைத்தனர். இவர்களை மேற்பார்வையிட 1769-ல் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.

மூர்ஷிதாபாத்திலிருந்த பிரிட்டிஷ் ரெஸிடென்டும் பாட்னாவிலிருந்த தலைமை ஏஜென்டும் உதவி நவாபுகளின் அலுவல்களை மேற்பார்வையிட அமர்த்தப்பட்டனர். இந்த ஏற்பாடுகளால் நல்ல பயன் எதுவும் ஏற்படவில்லை. கம்பெனியாரின் வருமானம் குறைந்துகொண்டே வந்தது. ஜமீன்தாரர்கள் குடியானவர்களைத் துன்புறுத்திச் செல்வந்தராயினர். இவ்வாறு கம்பெனியாரும், நவாபின் பணியாளருமாக நடத்தி வந்த இருதலைப்பட்ட அரசியலில் மக்கள் அவதியுற்றனர். ஆங்கிலேயர் முழுப் பொறுப்பையும் ஏற்காமல், நிதி திரட்டுவதிலும், தமது நிலைமையை வலிமைப்படுத்திக் கொள்வதிலுமே கண்ணுங் கருத்துமாயிருந்தனர் மக்கள் நலத்தைப் பேணவில்லை என்று குறைகூறுவோரும் உள்ளனர்.

ஆனால் அக்காலச் சூழ்நிலையில் வாணிகம் செய்ய வந்த கம்பெனியாரின் நிலைமையைச் சீர்தூக்கின் உண்மை புலனாகும். ஆங்கிலேயர், உடனேயே முழுப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தால் இந்தியாவிலிருந்த மற்ற ஐரோப்பியர் பொறாமைகொண்டு போர்தொடுத்திருப்பர். தவிர, வாணிகத்திற்காக மட்டுமே வந்தவர்களிடம் ஆட்சிமுறை அறிவை எதிர்பார்த்தலும் தவறு. சிறிது காலத்திற்குள் இரட்டை ஆட்சிமுறையின் தீய பலன்கள் வெளித்தோன்றலாயின.

1770-ல் வங்கத்தில் பெரும் பஞ்சம் உண்டாயிற்று, மக்களிற் பலர் மடிந்தனர். இறந்தோர்களில் பெரும்பான்மையோர் குடிமக்களே. 1772-ல் ஹேஸ்ட்டிங்ஸ் வங்காள கவர்னரானர். இரட்டையாட்சி நாட்டிற்கு நன்மை பயவாது என்பதை அறிந்த இவர் அதை ஒழிக்கத் திட்டமிட்டார். முதலில் இரண்டு உதவி நவாபுகளையும் வேலையிலிருந்து நீக்கி, அவர்கள்மீது குற்ற விசாரணை நடத்தினர். ஜமீந்தாரர்களுக்கிருந்த அதிகாரங்களைக் குறைத்தார். நாட்டை மாவட்டங்களாகப் பிரித்து, அதிகாரிகளை நியமித்தார். சிவில் குற்ற நீதிமன்றங்களை நிறுவினார். இவ்வாறு ஆங்கிலேயர் வங்காள அரசியலில் முழுப் பொறுப்பேற்றுக்கொண்டதும் இரட்டையாட்சி முறை ஒழிந்தது.

வங்காள நிலவரித் தீர்மானம் தொகு

வங்காளத்தில் நிலவரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றதும், ஜமீந்தாரர்களே வரி வசூலிக்க நியமித்தனர். இந்த உரிமையை ஆண்டுதோறும் ஏலத்தில்விட்டு, அதிகத் தொகை செலுத்த ஒத்துக்கொண்டவரையே பணிக்கு அமர்த்தினர். இவர்கள் சில ஆண்டு காலத்தில் ராஜாக்கள் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு தம் மாவட்டத்தில் எதேச்சாதிகாரம் செலுத்தத் தொடங்கினர், வரித் தொகையையும் சரியாகச் செலுத்தவில்லை. ஆங்கிலேயரின் வருமானம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. குடிமக்களைத் துன்புறுத்தி வரி வசூலித்த ஜமீந்தாரர்கள் செல்வராயினர். 1770ல் ஏற்பட்ட கொடிய பஞ்சம் மேலும் நிலைமையைக் கேடுறச் செய்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் என்னும் வங்க கவர்னர் வரிசம்பந்தமாக முதலில் ஓர் ஐந்தாண்டு முறையையும், பிறகு ஆண்டுத்திட்டம் ஒன்றையும் செயல் முறையில் கொண்டுவந்தார். ஆயினும் நற்பலன் ஒன்றும் கிட்டவில்லை.

கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குநர்கள் இதை ஆராய்ந்து, சரியான திட்டமொன்றை அமலுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தனர். கார்ன்வாலிஸ் பிரபு இந்த நோக்கத்துடன் இந்தியாவுக்கு அனுப்பப் பெற்றார், அவருக்கு உதவ ஷோர், கிரான்ட் என்னும் இரு அனுபவமுள்ள உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நாட்டின் நிலைமையைத் தீர விசாரித்தறிந்து தங்களுடைய அறிக்கைகளை வெளியிட்டனர். அவர்களிருவரும் வரித்திட்டம் நிலையாக அமைவதை விரும்பவில்லை. ஆயினும் கார்ன்வாலிஸ் பிரபு 1793-ல் வங்காளம், பீகார் மாகாணங்களில் நிலையான நிலவரித் திட்டத்தை ஏற்படுத்தினார். இதன்படி வரித்தொகை, 1765-66-ல் இருந்ததைவிட இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. ஜமீந்தாரர்கள் நிலையாக நியமிக்கப்பட்டதால் புறம்போக்கு நிலங்களையும் விவசாயத்திற்குப் பயன்படுத்த அவர்களுக்கு ஆர்வமுண்டாயிற்று. இதனால் அவர்களுடைய வருமானம் பெருகியது. ஆங்கிலேயருக்கும் வரித்தொகை ஒழுங்காகக் கொடுக்கப்பட்டது. வங்காளம் பொருளாதாரத்துறையில் முன்னேறியது.

சான்றுகள் தொகு

[1]

  1. http://www.tamilvu.org/library/libindex.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காள_இரட்டையாட்சி&oldid=3603071" இலிருந்து மீள்விக்கப்பட்டது