வத் பூர்ணிமா

திருமணமான இந்து சமயப் பெண்களால் அனுசரிக்கப்படும் ஒரு கொண்டாட்டம்

வத் பூர்ணிமா ( Vat Purnima) வத் சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படும் இது நேபாளம், வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களான மகாராட்டிரம், கோவா, உத்தராகண்டம், குசராத்து ஆகியவற்றில் திருமணமான இந்து சமயப் பெண்களால் அனுசரிக்கப்படும் ஒரு கொண்டாட்டமாகும். இந்து நாட்காட்டியின் ( கிரெகொரியின் நாட்காட்டியில் மே-ஜூன் மாதத்தில் வரும்) ஆனி மாதத்தின் மூன்று நாட்களில் இந்த பூர்ணிமாவில் (பௌர்ணமி) ஒரு திருமணமான பெண், ஒரு ஆலமரத்தில் ஒரு நூலைக் கட்டி தன் கணவனுக்குத் தன் காதலைக் குறிக்கிறாள். இந்த கொண்டாட்டம். மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள சாவித்திரி மற்றும் சத்யவானின் புராணத்தை அடிப்படையாகக் கொண்டது

புராணக்கதை தொகு

 
சத்தியவான் சாவித்திரி
 
புராணங்களில் 14 வது இடமான கந்த புராணத்தில் வத் பூர்ணிமா விரத முறை.[1]

மத்திர நாட்டு மன்னன் அசுவபதிக்கு சூரியபகவானின் அருளால் கிடைத்த மகள் என்பதால் சாவித்திரி எனப்பெயரிடப்பட்டாள். நாட்டை எதிரிகளிடம் இழந்த சால்வ நாட்டு மன்னர் துயுமத்சேனன் தன் மனைவியுடன் காடுறை வாழ்வு மேற்கொண்டிருந்தார். அவரின் மகன் சத்தியவானும் தாய்-தந்தையர்களுக்கு துணையாக இருந்தார்.[2][3]

சாவித்திரி, தான் மணமுடிக்க திறமை வாய்ந்த இளவரசனைக் கண்டறிய நாடு முழுவதும் சுற்றி இறுதியில், சத்தியவான் தங்கியிருந்த காட்டிற்கு வந்த சாவித்திரி, சத்தியவானைக் கண்டதும் தன் இதயத்தை சத்தியவானிடம் பறிகொடுத்தாள். தனது திருமணம் சத்தியவானுடன் நடக்க வேண்டும் என தந்தையிடம் கூற, அப்போது அங்கு வந்த நாரதர், 'இன்றிலிருந்து பன்னிரண்டு மாதங்களில் சத்தியவான் இறக்கப் போகிறான்' என்று கூறியும், சாவித்திரி சத்தியவானைத் தவிர வேறு எவரையும் மணக்க மாட்டேன் என உறுதிபடக் கூறினாள்.

சாவித்திரியின் மன உறுதியைக் கண்டு, அரசன் அசுவபதியும் திருமணத்திற்குச் சம்மதித்தான். சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடந்தது. சாவித்திரி தன் அரண்மனையைவிட்டுக் கணவன் சத்தியவானுடன் காட்டிற்குச் சென்று வாழ்ந்தாள்.

சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று சாவித்திரிக்குத் தெரிந்த போதிலும், அந்த இரகசியத்தை சாவித்திரி அவனிடம் சொல்லவில்லை.

சத்தியவான் இறப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அந்த மூன்று நாட்களும் உணவும் உறக்கமும் இன்றி கடும் விரதம் மேற்கொண்டாள் சாவித்திரி. இறுதிநாள் இரவு. இரவெல்லாம் உறங்காமல் கண்ணீர் மல்க கணவனின் நீண்ட வாழ்விற்காக பிரார்த்தனைகள் செய்தாள். அடுத்த நாள் விறகு வெட்டச் செல்லும் கணவன் சத்தியவானுடன் சென்றாள் சாவித்திரி.

காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சத்தியவான், சாவித்திரியின் மடிமீது தலை வைத்து உயிர் துறந்தான்.

அப்போது சத்தியவானின் உயிரை அழைத்துச் செல்ல வந்த எமதூதர்களால் சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை நெருங்கமுடியவில்லை. எனவே எமனே நேரில் வந்து சாவித்திரியைப் பார்த்து, சத்தியவானின் உயிர் பிரிந்த உடலை விட்டுவிடு; மரணம் மனிதனின் விதி என்றதும் சாவித்திரி, சத்தியவான் உடலை விட்டு விலகி நின்றாள்.[2][3]

பின்னர் சத்தியவானின் உயிரை அழைத்துக்கொண்டு சென்ற எமனின் வழியை பின் தொடர்ந்து சென்ற சாவித்திரி, ஒரு அன்புக் கணவனையும். அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கக்கூடாது எமனிடம் வேண்டினாள். சாவித்திரியின் பதிபக்தியை கண்டு பாராட்டிய எமதர்மராஜன், எதாவது ஒரு வரம் கேள் என்றார்.

அதற்கு சாவித்திரி, என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கவும், அவருடைய அரசு சத்தியவானின் மகன்களுக்கு கிடைக்க வரம் வேண்டினாள்.

இதைக் கேட்ட எமதர்மன், உன் கணவன் மீண்டும் உயிர் பெறுவான்; உன் குழந்தைகள் அரசாள்வர்; உன் அன்பு மரணத்தை வென்றுவிட்டது. உண்மையான அன்பிற்கு முன்னால் மரணதேவனான நான்கூட ஆற்றல் அற்றவன் என்பதற்கு நீ சான்று' பாராட்டினார்.[4][5][6].[7][3]

திருவிழா தொகு

 
வத் பூர்ணிமா பண்டிகையின் போது, திருமணமான பெண்கள் ஒரு ஆலமரத்தில் நூல்களைக் கட்டுகின்றர்.

ஆங்கிலத்தில் வத் பூர்ணிமா என்றால் ஆலமரத்துடன் தொடர்புடைய முழுநிலவு என்று பொருள். இது வடக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிரம், கோவா மற்றும் குசராத்து ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு இந்துப் பண்டிகையாகும்.[8] திருவிழா மூன்று நாட்கள் பொதுவாக ஆனி மாதத்தில் (மே-ஜூன்) 13, 14 மற்றும் 15 வது நாட்களில் அனுசரிக்கப்படுகிறது.[2] பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, ஆலமரத்தில் நூல்களைக் கட்டி, தங்கள் கணவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.[9]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்_பூர்ணிமா&oldid=3742546" இருந்து மீள்விக்கப்பட்டது