வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புக் கட்டுரை/26

தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய சமற்கிருத இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியம்) கண்டிருந்தார். எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.