வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/11

சிறப்புக் கட்டுரை



பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்துக்கும் பெயர் பெற்றிருந்தன. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். இடையே களப்பிரர் ஆட்சியில் வீழ்ச்சியைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு அவர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சான்று. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்தன. குலசேகர பாண்டியனின் ஆட்சியில் பாண்டி நாடு உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்துள்ளார்.