வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/9

சிறப்புக் கட்டுரை



தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர் தென்காசி நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆவர். பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து, தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (படம்) முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்துப் பாண்டியரும் தென்காசியையேத் தலைநகராகக் கொண்டு தென்காசி பெரியகோயிலில் உள்ள சிவந்தபாதவூரருடைய ஆதீன மடத்தில் முடி சூட்டிக் கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன.