வாங்கரி மாத்தாய்

அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற கென்னிய பெண்

வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.[1]

வாங்கரி மாத்தாய்
Wangari Maathai
பிறப்புவாங்கரி முத்தா
(1940-04-01)1 ஏப்ரல் 1940
செட்டு, கென்யா
இறப்பு25 செப்டம்பர் 2011(2011-09-25) (அகவை 71)
இனம்கிக்கூயு
குடியுரிமைகென்யா
கல்விஉயிரியல்
கால்நடை உடற்கூறு
படித்த கல்வி நிறுவனங்கள்பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம்,
நைரோபி பல்கலைக்கழகம்
பணிசுற்றுச்சூழல் ஆர்வலர், அரசியல்வாதி
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது, அமைதிக்கான நோபல் பரிசு

பிறப்பும் கல்வியும்

தொகு

கென்யாவில் நையேரி மாவட்டத்தில் உள்ள இகிதி என்னும் சிற்றூரில் பிறந்தார்.[2] ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.

சுற்றுச்சூழல் பணி

தொகு

1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது.

பெண்கள் வளர்ச்சி

தொகு

மாற்றத்திற்கான பெண்கள் என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கினார்.பெண்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.அவர்களுக்காகச் சட்டங்களை உருவாக்கினார்.பெண் கல்வியைப் பரவச் செய்தார். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட உழைத்தார்.

அரசியல் பணி

தொகு

2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நாடாளு மன்றத்துக்கு மாத்தாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2003 ஆம் ஆண்டில் அமைந்த கூட்டணி ஆட்சியில் இணை அமைச்சராக ஆனார். இவருக்குப் பிடித்தமான சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் பாதுகாப்புத் துறையைக் கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார்.

நோபல் பரிசு

தொகு

இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.

மேற்கோள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்கரி_மாத்தாய்&oldid=2713001" இலிருந்து மீள்விக்கப்பட்டது