வாதாபிப் போர்

வாதாபிப் போர் (Battle of Vatapi) பொ.ஊ. 642 ஆம் ஆண்டில் சாளுக்கியத் தலைநகரான வாதாபியில் பல்லவருக்கும் சாளுக்கியருக்கும் இடையே நடந்த ஒரு தீர்க்கமான சமர் ஆகும். இப்போரின் முடிவில் சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து 654 ஆம் ஆண்டு வரை வாதாபி பல்லவரின் வசம் இருந்தது.

வாதாபிப் போர்
Battle of Vatapi
சாளுக்கிய-பல்லவப் போர்கள் பகுதி
நாள் 642
இடம் பாதமி
பல்லவர் வெற்றி, பாதமி கைப்பற்றப்படல்
பிரிவினர்
சாளுக்கியர் பல்லவ இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
இரண்டாம் புலிகேசி முதலாம் நரசிம்ம பல்லவன், பரஞ்சோதி, மானவர்மன்
இழப்புகள்
இரண்டாம் புலிகேசி

வரலாறு தொகு

பொ.ஊ. 617–18 ஆம் ஆண்டுகளில், இரண்டாம் புலிகேசி பல்லவ இராச்சியத்தை முற்றுகையிட்டு, முதலாம் மகேந்திர பல்லவனைத் தோற்கடித்து, தெற்கே சோழ நாட்டின் வடக்குப் போர் முனையின் காவிரி ஆறு வரை சென்றான்.[1] புலிகேசியின் இந்தப் படையெடுப்புக்கு பல்லவர்கள் பழிவாங்க நீண்டகாலமாகத் திட்டமிட்டு வந்திருந்தனர். அடுத்த சில ஆண்டுகளில், பல்லவர் தங்கள் படைகளை பலப்படுத்தி, எதிர்த் தாக்குதலுக்குத் தயார்ப்படுத்தினர்.[1]

630 இல், முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின்னர் அவனது மகன் முதலாம் நரசிம்மன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவனது காலத்தில், பல்லவ இராச்சியம் ஒரு ஆற்றல் வாய்ந்த பேரரசாக விளங்கியது. இது இரண்டாம் புலிகேசிக்கு பல்லவ நாட்டின் மீது இரண்டாவது போர் நடவடிக்கையை ஆரம்பிக்கத் தூண்டியது.[2] க. அ. நீலகண்ட சாத்திரியின் கூற்றுப்படி, இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டிற்குள் நுழையும் முன்னர், முதலில் பல்லவர்களின் கீழ் அவர்களிடம் இணக்காய் இருந்த குறுநில மன்னர்களாக இருந்த பாணர்களை தோற்கடித்தான்.[2] முதலாம் நரசிம்மன் சாளுக்கியரை பல்லவத் தலைநகர் காஞ்சிக்குக் கிட்டவாக மூன்று முனைகளில் சந்தித்து அவர்களைத் தோற்கடித்தான். இதனால் சாளுக்கியர் பின்வாங்க ஆரம்பித்தனர்.[2][3] இதனை அடுத்து, பல்லவர்கள் தப்பி ஓடிய சாளுக்கிய படைகளைத் அவர்களது எல்லைக்குள் ஆழமாகப் பின்தொடர்ந்து தாக்கினர்.[2][3][4]

நிகழ்வுகள் தொகு

642 இல், சாளுக்கியத் தலைநகர் வாதாபியைக் கைப்பற்ற முதலாம் நரசிம்ம பல்லவன் தளபதி பரஞ்சோதியின் கீழ் ஒரு வல்லமைமிக்க பல்லவப் படையை அனுப்பினான்.[4][5] இரண்டாம் புலிகேசி தனது தலைநகரின் புறநகரில் பல்லவர்களை சந்தித்தான். அடுத்தடுத்த போரில் புலிகேசி உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது.[4] இப்போரின் மூலம், பல்லவர்கள் இரண்டாம் புலிகேசி மீது தீர்க்கமான வெற்றியைப் பெற்று, சாளுக்கியரின் தலைநகரைக் கைப்பற்றி 642 முதல் 654 வரை 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.[4]

முதலாம் பரமேஸ்வரவர்மனின் கல்வெட்டு இப்போர் குறித்து இவ்வாறு கூறுகிறது:

நரசிம்மவர்மன் ... (ஒரு சொல்) "விஜயம்" என்ற சொல்லின் அசைகளை, ஒரு தட்டில் எழுதியது போல, புலிகேசியின் முதுகில் எழுதியவர், இது பரியாலா, மங்கங்களா, சூரமரா போன்றவற்றின் போர்களில் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன், வாதாபியை அழித்தவர்.[6]

உதயசந்திரமங்களம் கல்வெட்டு பின்வருமாறு கூறுகிறது:

பெரியார்-பூமனிமங்கலா, சூரமாரா மற்றும் பிற இடங்களில் அடிக்கடி வல்லபராஜாவை வென்று, வாதாபியை நசுக்கிய (அகத்தியருக்கு சமமான) நரசிம்மவர்மன்[3]

வேலூர்பாளையம் கல்வெட்டு பின்வருமாறு கூறுகிறது:

உபேந்திரா (விட்டுணு) போன்று புகழ்பெற்ற முதலாம் நரசிம்மன் தனது எதிரிகளின் புரவலரைத் தோற்கடித்து, அவர்களிடமிருந்து வாதாபியின் நடுவில் நிற்கும் வெற்றியின் தூணை எடுத்துக்கொண்டான்[3]

போருக்குப் பின் தொகு

தனது வெற்றியைக் கொண்டாடும் முகமாக முதலாம் நரசிம்மன் வாதாபியில் மல்லிகார்ச்சுனா கோவிலைக் கட்டினான்.[4] "வாதாபி-கொண்டான்" என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டான்.[4][7] வாதாபியில் தக்கிண-ஐரப்பா கோயிலின் சுவர்களில் தனது வெற்றியைப் பதிவுசெய்யும் ஒரு கல்வெட்டைச் செதுக்கினான்.[5] பரஞ்சோதி வாதாபியில் இருந்து பல்லவ நாட்டிற்கு "வாதாபி கணபதி" உட்பட ஏராளமான போர்ச் செல்வங்களைக் கொண்டு வந்தார்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 திக்சித், ப. 94
  2. 2.0 2.1 2.2 2.3 Dikshit, பக். 96
  3. 3.0 3.1 3.2 3.3 Heras, பக். 35
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Dikshit, p 98-99
  5. 5.0 5.1 Heras, p 38
  6. Heras, p 34
  7. Heras, ப 39

உசாத்துணைகள் தொகு

  • Dikshit, D. P. (1980). Political History of the Chalukyas of Badami. Abhinav Publications. 
  • Heras, H. (1933). Studies in Pallava History. Madras: B. G. Paul and Co. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதாபிப்_போர்&oldid=3796810" இலிருந்து மீள்விக்கப்பட்டது