வானம்பாடி (இதழ்)

வானம்பாடி என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கோயமுத்தூரில் 1970 ஆம் ஆண்டுகளில் வெளியான ஒரு கவிதைச் சிற்றிதழ் ஆகும்.[1] இது பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின், விலையிலாக் கவிமடல் என்ற முழக்கத்துடன் வெளிவந்தது.

வரலாறு தொகு

1970இல் கோயம்புத்தூரில் சோஷலிஸ்ட்டுகளாகவும் சற்று காங்கிரசு ஆதரவு மனோபாவம் கொண்டவர்களாகவும் இருந்த தமிழ்க்கவிஞர்கள் ஒன்றுகூடி வானம்பாடி இயக்கத்தைத் தோற்றுவித்தனர். புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்கினிப்புத்திரன், சக்திக்கனல், இரவீந்திரன், ஞானி, பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ. இராஜாராம், மீரா, மு. மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் முதலானோர் வானம்பாடி இதழில் எழுதிச் சிறப்புற்றனர். இவர்களின் வருகைக்குப்பின் புதுக்கவிதை சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்தது.

வானம்பாடி' கவிமடல், விகடன் அளவில், தனி அட்டை இன்றி, நல்ல தாளில், எளிமையான வசீகரத்துடன் அச்சாகி வந்தது. அதன் முதல் இதழில் கூடுகள் திறக்கின்றன என்ற மூன்று பக்கத் தலையங்கம், மகாகவி பாரதிக்கு அஞ்சலி செலுத்தியது.

வானம்பாடியானது புவியரசின் மருமகனின் அச்சகமான மலர்விழி அச்சங்க்கதில் அச்சடிக்கப்பட்டு புவியரசின் வீட்டு முகவரியில் இருந்து வெளியானது. அதில் வந்த கவிதைகள் எல்லாமே அன்றைய திமுக அரசையும் நிலைப்பாடுகளையும் எதிர்த்து எழுதப்பட்டவையாக இருந்தன. இதழானது 32 பக்கங்களில் இருந்து 60 பக்கங்கள் வரை கொண்டதாக, 300 பிரதிகள்வரை வெளியிடப்பட்டு இலவசமாக அளிக்கப்பட்டது.[2]


கால ஒட்டத்தில் 'வானம்பாடி' காலம் தவறி எவ்வெப்போதாவது வரலாயிற்று. வானம்பாடிக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளைத் தொகுப்புகளாக வெளியிடுவதில் ஆர்வம் கொண்டார்கள். 'வானம்பாடி’ கவிதை இதழை 'சிற்பி' பொள்ளாச்சியிலிருந்து பிரசுரிக்க முற்பட்டார். மலையாளம், தெலுங்கு மற்றும் பிற மொழிக் கவிதைகள் அதில் தமிழாக்கமாக வெளியிடப் பெற்றன. சில இதழ்களே வெளிவந்தன.

1981 ஜனவரியில் 'உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பிதழ்' என்று 'வானம்பாடி' உருவாயிற்று. கவிதை சம்பந்தமான நல்ல கட்டுரைகளும் பல கவிதைகளும் இதில் வெளியாயின. குறிப்பிடத்தகுந்த இந்த சிறப்பிதழ் தயாரிப்புக்குப் பிறகு 'வானம்பாடி' இதழ் எதுவும் வரவில்லை. இது வானம்பாடியின் 20-வது மடல் என்று கணக்கிடப்பட்டிருந்தது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "வானம்பாடி - ஒரு பார்வை!". நக்கீரன். பார்க்கப்பட்ட நாள் 25-04-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ஷங்கர்ராமசுப்ரமணியன் (21 சூலை 2018). "ஸ்தயேவ்ஸ்கி கொடுத்த ஞானம்!- கவிஞர் புவியரசு பேட்டி". செவ்வி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2018.
  3. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 109–115. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானம்பாடி_(இதழ்)&oldid=3578240" இலிருந்து மீள்விக்கப்பட்டது