வானூர்தி தாங்கிக் கப்பல்
வானூர்தி தாங்கிக் கப்பல் அல்லது விமானம் தாங்கிக் கப்பல் (aircraft carrier) என்பது வானூர்திகளை வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறங்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க் கப்பலைக் குறிக்கும். இக்கப்பல்கள் கடலில் செல்லும் ஒரு வானூர்தித் தளமாகச் செயற்படுகின்றன. இதனால், கடற்படை போர் விமானங்களின் தாக்குதல் தூரத்தை அதிகப்படுத்தவும், எதிரி நாட்டு கடற்படையை இடைமறிக்கவும் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன. ஒரு கடற்படை உலகின் எப்பகுதியுலும் அப்பகுதியில் உள்ள வானூர்தி தளங்களை நம்பியிராமல் வான் தாக்குதல்களை நடத்துவதற்கு இக்கப்பல்கள் வழி அமைத்துக் கொடுத்துள்ளன. மரக் கலங்களில் பலூன்களைக் காவிச்சென்றதில் இருந்து அணுவாற்றலில் இயங்கும் கப்பல்களில் பல வானூர்திகளைக் காவிச்செல்லும் அளவுக்கு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடல் ஆளுமை பெற இன்றைய ஆழ்கடற் படைகளுக்கு இவ்வகைக் கப்பல்கள் இன்றியமையாதவையாக உள்ளன.
வரலாறு
தொகுபலூன் தாங்கிகளே ஆளேற்றிய வான் கலங்களை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட முதல் கப்பல்களாகும். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், இவ்வாறான கப்பல்களில் இருந்து போர்க்களங்களை நோட்டமிட பலூன்கள் ஏவப்பட்டன. 1903 ஆம் ஆண்டில் நிலைத்த இறக்கை வானூர்திகள் அறிமுகமான பின்னர், 1910ல் யூஎசுஎசு பிர்மிங்காம் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் இருந்து சோதனை முறையில் முதல் வானூர்தி பறந்து சென்றது. அதன் பின்னர் கடல் வானூர்தி பராமரிப்புக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. 1911ல் வேந்திய சப்பானியக் கடற்படையின் வாகாமியா என்ற பராமரிப்பு கப்பல் நான்கு மாரீசு பார்மன் ரக கடல் வானூர்திகளை தனது மேற்பரப்பிலிருந்து பாரந்தூக்கி மூலம் கடலில் இறக்கியது. அவை பின் கடல் வழியாக மேலெழும்பி தங்கள் இலக்குகளைத் தாக்கின. இந்த நிகழ்வே கடல் தாக்குதலில் ஒரு கப்பல் வானூர்தி தாங்கியாக செயல்பட்ட முதல் நிகழ்வாகும்.
தட்டையான மேல் தளத்தைக் கொண்ட கப்பல்களின் வளர்ச்சி பல வானூர்திகளை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை உருவாக்க உதவியது. 1918ல் எச்எம்எசு ஆர்கசு, மேல் தளத்திலிருந்து வானூர்திகள் மேலெழும்பவும் தரையிறங்கவும் வசதி கொண்ட முதல் வானூர்தி கப்பலானது. 1920களில் தொடர்ந்த வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சி, எச்எம்எசு ஏர்மசு, ஓசோ, லெக்சிங்டன் வகை வானூர்தி தாங்கிக் கப்பல்கள் என்பவற்றின் உருவாக்கத்துக்கு வழி கோலியது. ஆரம்பகால வானூர்தி தாங்கிகள் பிற கப்பல் வகைகளில் இருந்து உருமாற்றம் பெற்றவையாகவே இருந்தன. சரக்கு கப்பல்கள், குரூசர்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றின் மேல்தளமும், வடிவமைப்பும் மாற்றப்பட்டு வானூர்தி தாங்கிகள் உருவாக்கபப்ட்டன. 1922ல் கையெழுத்தாகிய வாஷிங்க்டன் கடல் உடன்பாடு வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சியை பாதித்தது. இவ்வுடன்பாடு ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எவ்வளவு கப்பல்களைக் கொண்டிருக்கலாம், அவற்றின் எடையின் உச்ச வரம்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. இதன் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு சில நாடுகளே பெரும் போர்க்கப்பல்களை உருவாக்கும் உரிமை பெற்றிருந்தன. இதனால் இக்காலகட்டத்தில் கடற்படைகள் போர்க்கப்பல்களை கட்டும் போது, பின்னாளில் வானூர்தி தாங்கிகளாக மாற்றத்தக்க வடிவமைப்புகளையே விரும்பித் தேர்ந்தெடுத்தன.
இரண்டாம் உலகப் போரின் போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான் போன்ற நாட்டுக் கடற்படைகளின் முதுகெலும்பாக வானூர்தி தாங்கிகள் செயல்பட்டன. போர்க்கப்பல் வெளிஓடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட வானூர்தி தாங்கிகளைத் தவிர, பல புதிய ரக வடிவமைப்புகளும் உருவாக்கப்பட்டன. காவல் வானூர்தி தாங்கிகள் (escort carriers), இலகு ரக வானூர்தி தாங்கிகள் (light carriers) போன்ற ரகங்கள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவற்றுள் ஒரு சில. போர்க்காலத்தில் அவசர பயன்பாட்டுக்காக வர்த்தக சரக்குக் கப்பல்களின் மேல் தளத்தில், ஓடு தளங்கள் பொருத்தப்பட்ட வர்த்தக வானுர்தி தாங்கிகள் (Merchant carriers) என்றொரு ரகமும் உருவானது. போர்க்கால இழப்புகளை குறுகிய காலத்தில் ஈடுசெய்ய சப்பானியக் கடற்படை போர்க்கப்பல் வானூர்தி தாங்கி (Battle carrier) என்றொரு ரகத்தையும் உருவாக்கியது (போர்க்கப்பல்களின் மேல் தளத்தை ஓடுதளமாக மாற்றியமைத்து). இவை தவிர, வானூர்திகளைத் தாங்கிச் செல்ல வல்ல நீர்மூழ்கிக் கப்பல்களும் உருவாக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப்பின், அதுவரை கடற்படைகளின் முதன்மைக் கப்பல்களாக இருந்து வந்த போர்க்கப்பல்களுக்கு பதில் வானூர்தி தாங்கிகள் முதன்மைக் கப்பல்களாகின. போர்க்களங்களில் வான்படைகளின் முக்கியத்துவம் அதிகமானதால் கடற்பகுதிகளில் வான் ஆளுமை பெற வானூர்தி தாங்கிகள் இன்றியமையாதவை ஆகி விட்டன. வானூர்திகளின் ரகங்களும், வலிமையும் கூடக் கூட அவற்றைத் தாங்கிச் செல்லும் தாங்கிகளின் எடையும் அளவும் அதிகரித்தன. தற்கால கடற்படைகளில் 75,000 டன்களுக்கு மேல் எடையுள்ள மீவானூர்தி தாங்கிகள் (Supercarriers) இடம் பெற்றுள்ளன. டீசல் அல்லது அணுஉலைப் பொறிகளால் உந்தப்படும் இவை ஒரு கடற்படை தன் நாட்டிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள பகுதிகளிலும் செயல்பட உறுதுணையாக உள்ளன. வானூர்தி தாங்கிகளைத் தவிர, உலங்கு வானூர்தி தாங்கிகள் (Helicopter carriers), நீர்நில தாக்கு கப்பல்கள் (amphibious assault ships) போன்ற புதிய ரகங்களும் உருவாகியுள்ளன.
போர்க்கப்பல்களைப் போன்று வானூர்தி தாங்கிகளிடம் சுடுதிறன் இருப்பதில்லை. அவற்றில் மிகக் குறைவான அளவிலெயே பீரங்கி குழுமங்கள் பொருத்தப்படுகின்றன. ஒரு வானூர்தி தாங்கியால் தனியே எதிரி நாட்டு போர்க்கப்பல்களின் தாக்குதலை சமாளிக்க இயலாது. இதனால் வானூர்தி தாங்கிகள் எப்போதும் தனியே செயல்படுவதில்லை; பிற போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் சூழ ஒரு வானூர்தி தாங்கி குழுமமாகவே (Carrier group) செய்லபடுகின்றன. கடல் ஒப்பந்தகளால் வானூர்தி கப்பல்களின் எடையின் உச்சவரம்பு கட்டுப்பாடு இரண்டாம் உலகப் போருக்குப்பின் தளர்ந்ததால், புதிய வானூர்தி தாங்கி ரகங்களின் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்கக் கடற்படையின் நிமிட்சு ரகம், ஃபோர்ட் ரகம் போன்றவை ஒரு லட்சம் டன்களுக்கு மேல் எடை கொண்டவையாக உள்ளன.
வகைகள்
தொகுவானூர்தி தாங்கிகள் பயன்பாடு, அளவு, வானூர்தி மேலுழும்பும் விதம், உந்துபொறி வகை ஆகியவற்றைக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன.
உந்துபொறி
தொகுவானூர்தி தாங்கிகளின் உந்துபொறிகள் டீசல் அல்லது அணு ஆற்றலால் இயங்குகின்றன. பொதுவாக சிறிய வானூர்தி தாங்கிகள் டீசல் பொறிகளாலும், மீதாங்கிகள் அணு ஆற்றலாலும் இயக்கப்படுகின்றன. தற்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கடற்படையிடம் மட்டும் அணு ஆற்றலால் இயங்கும் வானூர்தி தாங்கிகள் உள்ளன.
பயன்பாடு
தொகுபயன்படும் காரியத்தைப் பொறுத்து பின்வருமாறு வானூர்தி தாங்கிகள் வகைப்படுத்தப்படுகின்றன:
- கடற்படை வானூர்தி தாங்கி - நேரடியாகப் போரில் ஈடுபட
- காவல் வானூர்தி தாங்கி - பிற கப்பல் கூட்டங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட
- உலங்கு வானூர்தி தாங்கி - உலங்கு வானூர்திகளை மட்டும் தாங்கிச் செல்ல
- நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு வானூர்தி தாங்கி
- கடல் வானூர்தி பராமரிப்பு கப்பல் - கடல் வானூர்திகளை பராமரித்து தாங்கிச் செல்ல
அளவு
தொகுதற்கால கடற்படைகளில் எடையும் அளவுமே வானூர்திகளை வகைப்படுத்த பெரும்பாலும் பயன்படுகின்றன. அளவு / எடை அடிப்படையில் வானூர்தி தாங்கிகளின் வகைகள்:
- இலகு ரக வானூர்தி தாங்கி
- கடற்படை வானூர்தி தாங்கி
- மீவானூர்தி தாங்கி
வானூர்தி மேலெழும்பும் முறை
தொகுவானூர்திகள் மேலெழும்பும் முறையைப் பொறுத்து வானூர்தி தாங்கிகளின் வகைகள்:
- கவண் எறி துணை புறப்பாடு ஆனால் தடுக்கப்பட்ட தரையிறங்கல் (Catapult Assisted Take-Off But Arrested Recovery - CATOBAR)
- குறுகிய புறப்பாடு ஆனால் தடுக்கப்பட்ட தரையிறங்கல் (Short Take-Off But Arrested Recovery - STOBAR)
- குறுகிய புறப்பாடு மற்றும் செங்குந்து தரையிறங்கள் (Short Take-Off Vertical Landing - STOVL)
வானூர்தி தளம்
தொகுஒரு வானூர்தி தாங்கிக் கப்பலின் மிக முக்கியமான பகுதி தன் வானூர்தி தளம் (flight deck). இதுவே வானூர்திகளின் புறப்பாட்டிற்கும் தரையிறங்கலுக்கும் பயன்படுகிறது. தற்கால வானூர்தி தாங்கிகள் அனைத்தும் தட்டையான மேற்தள வடிவமைப்பை உடையனவாக உள்ளன. தரை ஓடு தளங்களுடன் ஒப்பிடுகையில், வானூர்தி தாங்கிகளின் ஓடுதளங்கள் குறைவான நீளத்தையே கொண்டுள்ளன. இதனால் இவற்றிலிருந்து புறப்படவும், தரையிறங்கவும் பல புதிய உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. வானூர்திகள் தளத்திலிருந்து கப்பல் செல்லும் திசையில் புறப்படுகின்றன. இதற்கு உதவி செய்யும் வகையில் வானூர்திகள் புறப்படும் போது வானூர்தி தாங்கி அதிகமான வேகத்தில் காற்றடிக்கும் திசையில் செலுத்தப்படும். இதனால் மேற்தளத்திலிருந்து புறப்படும் வானூர்தியின் பின்காற்று அதனை மெலெழும்ப உதவுகின்றது. அதே போல வானூர்தி தரையிறங்க வரும் போதும் இம்முறைமை வானூர்திக்கும் கப்பலுக்கும் இடையேயான சார்பு வேக வேறுபாட்டைக் குறைத்து வானூர்தி பத்திரமாகத் தரையிறங்க பயன்படுகிறது.
புறப்பாடு
தொகுவானூர்தி தாங்கிகளின் மேற்தளத்திலிருந்து வானூர்திகள் புறப்பட பல வழிகள் பயன்படுகின்றன. சில வானூர்தி தாங்கிகளில் நீராவி ஆற்றலை பயன்படுத்து கவண் எறி ஒன்று வானூர்திகளை உந்தித் தள்ளுகிறது. இதன் மூலம் மேலெழும்பத் தேவையான குறைந்தபட்ச வேகம் வானூர்திக்கு கிட்டுகிறது. கவண் எறியின் உந்துதலுடன், வானூர்தியின் பொறிவிசையும் சேரும் போது வானூர்தி எளிதாக தளத்திலிருந்து மேலெழும்பி விடுகிறது. வேறு சில வானூர்தி தாங்கிகளில் கவண் எறி நுட்பத்துக்கு பதில் சறுக்குமேடை (ski-jump ramp) நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இத்தகு தாங்கிகளில் ஓடுதளத்தில் ஒரு முனை சற்று மேல் நோக்கி எழும்பியிருக்கும். ஓடுதளத்தில் ஓடி சறுக்கு மேடையில் ஏறும் வானூர்திகள் இதனால் மேல் நோக்கியும், முன்னோக்கியும் ஒரே நேரத்தில் உந்தித் தள்ளப்படுகின்றன. செங்குத்தாக புறப்பாடு/தரையிறக்கம் செய்யககூடிய வானூர்திகளுக்கு இது போன்ற நுட்பங்கள் தேவையில்லை
தரையிறக்கம்
தொகுவானூர்திகள் தளத்தில் தரையிறங்கும் போது அவற்றின் வேகத்தை மிகக் குறுகிய காலத்தில் குறைக்க ஓடு தளத்தின் குறுக்கே கம்பிகள் விரிக்கப்பட்டிருக்கும். வானூர்தி தரையிறங்கும் போது அதன் வால் பகுதியிலுள்ள கொக்கி அக்கம்பிகளைக் கவ்வும்படி ஓட்டுனர் அதனைக் கையாளுவார். பலமான இக்கம்பிகளால் பிடித்திழுக்கப்படும் வானூர்தியின் வேகம் விரைவாகக் குறைந்து அதன் ஓட்டம் நிற்கும். செங்குத்து புறப்பாடு/தரையிறங்கு திறனுள்ள ஊர்திகளுக்கு இந்த கம்பி நுட்பம் தேவையில்லை.
பயன்பாட்டிலுள்ள வானூர்தி தாங்கிகள்
தொகுதற்போது உலகில் ஒன்பது நாடுகளின் கடற்படைகளில் மொத்தம் 22 வானூர்தி தாங்கிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:
நாடு | பெயர் | கப்பல் ஓடு எண் | எடை | ரகம் | உந்து வகை | செயல்பாடு துவக்கம் |
---|---|---|---|---|---|---|
பிரேசில் | என்.ஏ.இ சாவ் பாலோ | A12 | 32,800 டன்கள் | கிளெமென்சியாவூ | டீசல் | நவம்பர் 15, 2000 |
பிரான்சு | சார்லஸ் டி கோல் | R91 | 42,000 டன்கள் | - | அணு ஆற்றல் | மெ 18, 2001 |
இந்தியா | ஐ.என்.எசு. விராட் | R22 | 28,700 டன்கள் | சென்டார் | டீசல் | மே 20, 1987 |
இத்தாலி | கோண்டி டி கவூர் | 550 | 27,100 டன்கள் | - | டீசல் | மார்ச் 27, 2008 |
இத்தாலி | ஜுசேப்பே கரிபால்டி | 551 | 13,850 டன்கள் | - | டீசல் | செப்டம்பர் 30, 1985 |
உருசியா | அட்மைரல் குசுநெட்சோவ் | 063 | 55,000 டன்கள் | அட்மைரல் குசுநெட்சோவ் | டீசல் | ஜனவரி 21, 1991 |
எசுப்பானியா | பிரின்சிபே தே ஆசுட்டூரியாசு | R11 | 16,700 டன்கள் | - | டீசல் | மே 30, 1988 |
தாய்லாந்து | எச்.டி.எம்.எசு சக்ரி நாருபெட் | CVH-911 | 11,400 டன்கள் | - | டீசல் | ஆகஸ்ட் 10, 1997 |
ஐக்கிய இராச்சியம் | எச்.எம்.எசு இல்லுசுடிரியசு | R06 | 22,000 டன்கள் | இன்வின்சிபிள் | டீசல் | ஜுன் 20, 1982 |
ஐக்கிய அமெரிக்கா | யூ.எசு.எசு. எண்டர்பிரைசு | CVN-65 | 94,700 டன்கள் | - | அணு ஆற்றல் | நவம்பர் 25, 1961 |
ஐக்கிய அமெரிக்கா | யூ.எசு.எசு. நிமிட்சு | CVN-68 | 100,000 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | மே 3, 1975 |
ஐக்கிய அமெரிக்கா | யூ.எசு.எசு. டுவைட். டி. ஐசனாவர் | CVN-69 | 101,600 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | அக்டோபர் 18, 1977 |
ஐக்கிய அமெரிக்கா | யூ.எசு.எசு. கார்ல் வின்சன் | CVN-70 | 101,300 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | மார்ச் 13, 1982 |
ஐக்கிய அமெரிக்கா | யூ.எசு.எசு தியடோர் ரூசுவெல்ட் | CVN-71 | 104,600 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | அக்டோபர் 25, 1986 |
ஐக்கிய அமெரிக்கா | யு.எசு.எசு. ஆபிரகாம் லிங்கன் | CVN-72 | 100,000 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | நவம்பர் 11, 1989 |
ஐக்கிய அமெரிக்கா | யூ.எசு.எசு. ஜார்ஜ் வாஷிங்க்டன் | CVN-73 | 104,200 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | ஜூலை 4, 1992 |
ஐக்கிய அமெரிக்கா | யு.எசு.எசு. ஜான். சி. ஸ்டென்னிஸ் | CVN-74 | 103,300 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | டிசம்பர் 9, 1995 |
ஐக்கிய அமெரிக்கா | யூ.எசு.எசு. ஹாரி எஸ். ட்ரூமன் | CVN-75 | 103,900 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | ஜூலை 25, 1998 |
ஐக்கிய அமெரிக்கா | யூ.எசு.எசு. ரோனால்ட் ரீகன் | CVN-76 | 101,400 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | ஜூலை 12, 2003 |
ஐக்கிய அமெரிக்கா | யூ.எசு.எசு. ஜார்ஜ் ஹெச். டபிள்யூ. புஷ் | CVN-77 | 102,000 டன்கள் | நிமிட்சு | அணு ஆற்றல் | ஜனவரி 10, 2009 |
எதிர்கால வானூர்தி தாங்கிகள்
தொகுபல நாடுகளின் கடற்படைகள் தற்போது பல புதிய வானூர்தி தாங்கிகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:
நாடு | பெயர் | கப்பல் மேலோடு எண் | எடை | ரகம் | வகை | செயல்பாடு துவக்கம் | தற்போதைய நிலை |
---|---|---|---|---|---|---|---|
சீனா | ஷி லாங்[1] | - | 60,000 டன்கள் | வார்யாக் | டீசல் | 2015 (கணிப்பு) | மறுகட்டமைப்பு நடைபெறுகிறது |
இந்தியா | ஐ.என்.எசு விக்ரமாதித்தியா[2] | - | 44,570 டன்கள் | அட்மைரல் கோர்ஷ்கோவ் | டீசல் | 2012 (திட்டமிடப்பட்டுள்ளது) | மறுகட்டமைப்பு நடைபெறுகிறது |
இந்தியா | ஐ.என்.எசு விக்ராந்த்[2] | - | 40,000 டன்கள் | விக்ராந்த் | டீசல் | 2014 (கணிப்பு) | கட்டப்பட்டு வருகிறது |
இந்தியா | ஐ.என்.எசு விஷால்[2] | - | 65,000 டன்கள் | விக்ராந்த் | டீசல் | 2017 (கணிப்பு) | கட்டப்பட்டு வருகிறது |
ஐக்கிய இராச்சியம் | எச். எம். எசு குயின் எலிசபெத்[2] | R08 | 65,600 டன்கள் | குயின் எலிசபெத் | டீசல் | 2020 (கணிப்பு) | கட்டப்பட்டு வருகிறது |
ஐக்கிய இராச்சியம் | எச். எம். எசு பிரின்சு ஆஃப் வேல்சு[2] | R09 | 65,600 டன்கள் | குயின் எலிசபெத் | டீசல் | 2023 (கணிப்பு) | கட்டப்பட்டு வருகிறது |
ஐக்கிய அமெரிக்கா | ஜெரால்ட் ஆர். ஃபோர்ட்[3] | CVN-78 | 100,000 டன்கள் | ஃபோர்ட் | அணு ஆற்றல் | 2015 (கணிப்பு) | கட்டப்பட்டு வருகிறது |
ஐக்கிய அமெரிக்கா | பெயரிடப்பட்டவில்லை[3] | CVN-79 | 100,000 டன்கள் | ஃபோர்ட் | அணு ஆற்றல் | 2018 (கணிப்பு) | கட்ட ஆணையிடப்பட்டுள்ளது |
ஐக்கிய அமெரிக்கா | பெயரிடப்பட்டவில்லை[3] | CVN-80 | 100,000 டன்கள் | ஃபோர்ட் | அணு ஆற்றல் | 2021 (கணிப்பு) | கட்ட ஆணையிடப்பட்டுள்ளது |
மேற்கோள்கள்
தொகு- ↑ Fisher, Richard (10 March 2009). "China's Aircraft Carriers". International Assessment and Strategy Center. Archived from the original on 24 February 2011. பார்க்கப்பட்ட நாள் 8 September 2010.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 International Institute for Strategic Studies; Hackett, James (ed.) (2010-02-03). The Military Balance 2010. இலண்டன்: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1857435575.
{{cite book}}
:|author2=
has generic name (help) - ↑ 3.0 3.1 3.2 O'Rourke, Ronald (10 June 2010). Navy ஃபோர்ட் (CVN-78) Class Aircraft Carrier (pdf) (Report). Congressional Research Service. பார்க்கப்பட்ட நாள் 8 September 2010.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அமெரிக்க வானுர்தி தாங்கிகள் பரணிடப்பட்டது 2013-10-17 at the வந்தவழி இயந்திரம்
- வானூர்தி மேற்தளம் குறிட்த தகவல்கள்
- How Stuff Works—Aircraft Carriers
- வானூர்தி தாங்கிகளின் பட்டியல்