வாரிஸ் டைரி

வாரிஸ் டைரி Waris Dirie (சோமாலி: Waris Diiriye, அரபு: واريس ديري‎) (பிறப்பு 1965) என்பவர் சோமாலியவைச்சேர்ந்த மாடல், நடிகை, எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். 1997இல் இருந்து 2003வரை ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ மூலம் உலகின் பல நாடுகளிலும் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார்.ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் ஆரோக்கியம், மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடும் வாரிஸ் டைரி, நான்கு குழந்தைகளுடன் போலந்தில் வசித்து வருகிறார்.

வாரிஸ் டைரி
Waris Dirie
واريس ديري
பிறப்பு1965
Galkayo, சோமாலியா
இனம்சோமாலி
பணிமாடல், எழுத்தாளர், நடிகை, ஐ. நா. சபையின் நல்லெண்ணத் தூதர் (1997–2003)
பட்டம்Chevalier of the Légion d'honneur

வாழ்க்கை

தொகு

வாரிஸ் டைரி, சோமாலியாவில் ஒரு கிராமத்தில் பிறந்தார். வறுமை தாண்டவமாடும் அந்த நாட்டில் மாடு மேய்ப்பது, தண்ணீர் கொண்டு வருவது, வீட்டு வேலைகளைச் செய்வதுதான் பெண் குழந்தைகளின் பணி. மற்ற ஆப்பிரிக்கப் பெண் குழந்தைகளைப் போலவே ஐந்து வயதில் வாரிஸுக்கு பெண் உறுப்பு சிதைப்பு என்னும் கொடூரத்தைச் சந்திக்க நேர்ந்தது. அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். கடவுளின் விருப்பம் இதுதான் என்றார் அம்மா. ‘கடவுளுக்கு என்னைப் பிடிக்க வேண்டாம். இப்படிப்பட்ட கடவுளை எனக்கும் பிடிக்கவில்லை’ என்ற வாரிஸின் பேச்சு அம்மாவுக்குக் கலக்கத்தை உருவாக்கியது.

மறுநாள் அதிகாலை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார் வாரிஸ். பழைய பிளேடால் அவரது உறுப்பு சிதைக்கப்பட்டது. உயிரே போனதுபோல அப்படி ஒரு வலி. ரத்தம் பெருகி ஓடியது. முட்களால் தையல் போட்டுவிட்டுச் சென்றார் மருத்துவச்சி. பல நாட்கள் வலியால் துடித்த வாரிஸ், கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினார். வாரிஸை 13 வயதில் 60 வயதை தாண்டியவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார் வாரிஸின் அப்பா. வாரிஸால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒருநாள் அதிகாலை. பணம், துணி, உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல். வெற்றுக் கால்களுடன் வீட்டை விட்டு ஓட ஆரம்பித்தார் வாரிஸ். இரவு, பகலாகப் பாலைவனத்தில் ஓடிக்கொண்டே இருந்தார்.

பல துன்பங்களுக்கு ஆட்பட்டு 300 மைல்களைக் கடந்து தன் சகோதரி வீட்டுக்கு வந்து சேர்ந்தார் வாரிஸ். அங்கு மிக மோசமாக நடத்தப்பட்டார். லண்டனில் உள்ள உறவினருக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆட்கள் தேடிக்கொண்டிருந்தபோது, தானே வருவதாகச் சொன்னார் வாரிஸ். அங்கே சில ஆண்டுகள் பணிபுரிந்தார் பிறகு மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை செய்துகொண்டு, அங்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.[1][2]

திருப்புமுனை

தொகு

தற்செயலாக டெரென்ஸ் டொனொவன் என்ற புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் இவரைப் பார்த்தார் அவரிடமிருந்து வடிவழகு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுக்கொண்டார் வாரிஸ். 1987-ம் ஆண்டு புகழ்பெற்ற பைரலி காலண்டரில் அவரது புகைப்படம் வெளியானது. அதிலிருந்து வாரிஸின் வடிவழகு பயணம் ஆரம்பித்தது. விரைவில் உலகின் சிறந்த மாடலாக மாறினார்.[1][2] புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளை அலங்கரித்தார். ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திலும் நடித்தார்.

வாரிஸ் ஃபவுண்டேஷன்

தொகு

கனவிலும் எதிர்பார்க்காத வசதியான லண்டன் வாழ்க்கை, உலகப் புகழ் எல்லாம் கிடைத்தாலும் வாரிஸால் பெண் உறுப்புச் சிதைப்பை மறக்க முடியவில்லை. ஐந்து வயதில் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறையின் பாதிப்பு உயிர் உள்ள வரை போகாது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் உயிர் போய்விடும். மாதவிடாய் நேரத்திலும் மிகுந்த துன்பம். உறுப்புச் சிதைக்கப்பட்ட நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் நோய்த் தொற்றால் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றன. இதனால் வாரிசின் சகோதரி கூட மரணம் அடைந்தார். கன்னித் தன்மையைப் பாதுகாப்பதற்காக மதத்தின் பெயரால் இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது. திருமணத்தின்போதுதான் தையலை வெட்டிவிடுவார்கள். குடும்பம் நடத்துவதும் குழந்தை பிறப்பும் கஷ்டம்.

தாயும் குழந்தையும் இறந்துவிடும் அபாயம் அதிகம். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் வசிப்பவர்கள் மட்டுமில்லை. அங்கிருந்து வந்து ஐரோப்பாவில் வசிப்பவர்கள்கூட எவ்வளவு படித்திருந்தாலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு இதைச் செய்யாமல் விடுவதில்லை. மதம் என்று வந்துவிட்டால் அங்கே கேள்விக்கே இடமளிப்பதில்லை’ என்கிறார் வாரிஸ்.

1999-ம் ஆண்டு முதல் முறையாகத் தன் வாழ்க்கையையும் வலியையும் வெளியே சொன்னார் வாரிஸ். அதற்காக வாரிஸ் ஃபவுண்டேஷன் ஒன்றையும் ஆரம்பித்தார். பின்னர் அது ‘டெசர்ட் ஃபவுண்டேஷன்’ ஆனது. இந்தப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை வாரிஸுக்குச் சிறப்பு நல்லெண்ணத் தூதுவர் பொறுப்பை அளித்தது. ஐந்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பைத் திறம்படச் செய்தார் வாரிஸ்.[3][4]

சூடான், எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, பெர்லின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற ஏராளமான நாடுகளில் வாரிஸின் ஃபவுண்டேஷன் இயங்கி வருகிறது. இவற்றின் மூலம் பெண் உறுப்புச் சிதைப்பைத் தடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்குக் கல்வி அளிக்கப்படுகிறது.

சுயசரிதை

தொகு

தன்னுடைய வாழ்க்கையைப் ‘பாலைவனப் பூ’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார் வாரிஸ்.[1] 1 கோடியே 10 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது. பின்னர் 2009இல் திரைப்படமாகவும் வெளிவந்து உலகம் முழுவதும் பரவலான கவனத்தை ஈர்த்தது.[5]

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Stellan Consult Limited (2008). "Desert Flower". Parents (265–270): 76. 
  2. 2.0 2.1 Mary Zeiss Stange, Carol K. Oyster, Jane E. Sloan, ed. (2011). Encyclopedia of Women in Today's World, Volume 1. SAGE. p. 402. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4129-7685-5. {{cite book}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. "Messengers of Peace and Goodwill Ambassadors at the United Nations". Un.org. பார்க்கப்பட்ட நாள் 2014-04-17.
  4. UNFPA Goodwill ambassador, Waris Dirie, wins award UNFPA – United Nations Population Fund, April 17, 2001.
  5. Katja Hofmann (2008-02-09). "Model Liya Kebede to star in 'Flower'". Variety.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரிஸ்_டைரி&oldid=3843425" இலிருந்து மீள்விக்கப்பட்டது