விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/ஊடகச் சந்திப்பு/

குறுக்கு வழி:
WP:10press

செப்டம்பர் 25, 2013 புதன் அன்று மாலை 4.30 மணிக்கு, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு மணி நேர ஊடகச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுப் பணியை விளக்கியதோடு, சென்னையில் செப்டம்பர் 29 அன்று நடக்கும் நிகழ்வு குறித்து ஊடகக் கவனம் பெறவும் முயன்றோம். இந்நிகழ்வில் வழங்கிய ஊடக அறிக்கையை இங்கு காணலாம்.

இடம் தொகு

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம்,

அரசினர் தோட்டம்,

அரசு விருந்தினர் மாளிகை பின்புறம்,

சென்னை 600002

கலந்து கொண்டவர்கள் தொகு

  • செல்வா
  • இரவி
  • சுந்தர்
  • சீனிவாசன்
  • பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் விக்கிப்பீடியர் ஒருவர் - ஊடகச் சந்திப்பு குறித்த முழு வழிகாட்டலைத் தந்ததுடன், அதற்கான இட வசதி, உணவு ஏற்பாடுகளை மிகவும் அலைந்து கவனித்துக் கொண்டார்.

இற்றை தொகு

  • 50 ஊடக நிறுவனங்களுக்குச் சந்திப்பு குறித்த தொலை நகல் அனுப்பப்பட்டிருந்தது. சந்திப்பு நடக்க இருக்கிறது என்று சமூக ஊடகங்களிலும் மடல்களிலும் பரப்புரை செய்யப்பட்டது.
  • தினகரன், Indian Express, UNI, தின இதழ், தின முரசு, தமிழன் தொலைக்காட்சி, வின் தொலைக்காட்சி, மாலை தமிழகம், மூன் தொலைக்காட்சி, சவுத் இந்தியன் டைம்சு ஆகிய பத்து ஊடக நிறுவனங்களில் இருந்து செய்தியாளர்கள் வந்திருந்தனர்.
  • வந்திருந்தோருக்கு ஊடக அறிக்கை அச்சு வடிவில் தரப்பட்டது. வந்திராதோருக்குத் தொலை நகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
  • கேள்வி பதில் நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏன் இன்னும் பல துறைகளில் முழுமையான கட்டுரைகள் இல்லை என்பது முக்கிய கேள்வியாக கேட்கப்பட்டது. விளக்கினோம். முறையான சந்திப்பு முடிந்த பிறகும் ஓரிரு இதழாளர்கள் மிக்க ஆர்வத்துடன் பேசி குறிப்புகளை எடுத்துக் கொண்டார்கள்.
  • இந்திய விக்கிப்பீடியா திட்டங்களில் வேறு எவரும் இவ்வாறு முறையான சந்திப்பு நடத்தியதில்லை என்றே அறிகிறேன். தமிழுக்கு இது முதல் சந்திப்பு. ஓரிருவராவது இதற்கு வருவார்களா என்ற ஐயத்துடன் தான் இதனை ஏற்பாடு செய்தோம். விக்கிப்பீடியா என்ற பெயருக்காக வருவார்கள் இதழாளர் மன்றப் பொறுப்பாளர் ஊக்கப்படுத்தினார். சந்திப்பு தொடங்கிய போது ஓரிருவர் தான் இருந்தனர். பிறகு ஒவ்வொருவராக சேர்ந்து கொண்டனர். ஊடகக்காரர்களுக்கு பணம் அன்பளிப்பு தந்தால் தான் ஊடகங்களில் செய்தி வரும் என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால், செய்தி வராவிட்டாலும் பரவாயில்லை... அப்படி எல்லாம் இறங்கி விக்கிப்பீடியாவின் பெயரைக் களங்கப்படுத்தக்கூடாது என்று யாருக்கு எந்த அன்பளிப்பும் வழங்கவில்லை.
  • ஊடகச் சந்திப்பு முடிந்த பிறகு உடனே செய்திகள் வெளிவரவில்லை. ஞாயிறன்று தினகரன் இதழில் இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் வெளிவந்திருந்தது. ஊடகச் சந்திப்பில் விரிவான பேட்டியை எடுத்திருந்த இந்தியன் எக்சுப்பிரசு நிருபர், மிக விரிவான செய்தி ஒன்றை 30 செப்டம்பர் அன்று வெளியிட்டிருந்தார்.
  • சென்னைக் கூடல் நிகழ்வு காலையில் தொடங்கும் முன்பு இருந்து பகல் உணவுக்குச் செல்லும் வரை ஊடகக் காரர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். முதலில் இந்தப் போக்கினைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒரு நிறுவனத்தில் உள்ளவர் மற்ற நிறுவனங்களில் உள்ள தோழர்களுக்குச் சொல்லிச் சொல்லி என்று ஒவ்வொருவராக வரத் தொடங்கியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழ் விக்கிப்பீடியர்கள் நல்ல சமூகப் பணியைச் செய்து வருகிறார்கள் என்ற உண்மையான அக்கறை அனைத்து நிருபர்களிடமும் காணப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் பால் உள்ள இந்த மதிப்பையும் நமது உள்ளாற்றலையும் உணர்ந்து சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • விக்கிப்பீடியர்கள் அனைவரையும் அன்று சந்திக்கும் வாய்ப்பு இருந்ததால் ஏற்கனவே பேசிய நிருபர்களும் தத்தம் ஒளிப்படக் குழுவினருடன் வந்திருந்தனர். பல பயனர்களும் அவர்களுடன் பேசிக் கொண்டே இருந்ததில் அவர்களால் அரங்கில் நடந்த நிகழ்வுகளைக் கூட கவனிக்க இயலவில்லை. பலதரப்பட்ட பயனர்களையும் அறிமுகப்படுத்த முனைந்தாலும், ஊடகக்காரர்கள் சில போக்குகளின் சார்பாளர்களாக உள்ளவர்களை முன்னிலைப்படுத்தித் தான் எழுத முனைகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, தொடங்கியவர் என்பதால் மயூரநாதன், பெண் என்பதால் பார்வதி / பூங்கோதை, மாணவி என்பதால் அபிராமி, மூத்தவர் என்பதால் செங்கைப் பொதுவன், பேராசிரியர் என்பதால் செல்வா என்று குறிப்பிட்ட முகங்களைத் தான் முன்னிறுத்த விரும்புகிறார்கள். வேறு பலர் சொன்ன கருத்துகளையும் தொகுத்து இவர்களில் ஒருவர் சொன்னதாக எழுதுவது வாடிக்கையான ஒன்று என்றும் கூறினார்கள்.
  • கருத்துகளை நினைவில் வைத்துச் சட்டென்று எடுத்துச் சொல்வதற்கு ஊடக அறிக்கை மிகவும் உதவியது. சில ஊடகக்காரர்கள் ஏற்கனவே இணையத்தில் இருந்த அறிக்கையைப் படித்து விட்டே வந்திருந்தார்கள். மின்மடல்களிலும் குறுஞ்செய்திகளிலும் ஊடகக் குறிப்புகளை அனுப்பி வைக்க WP:10pr என்ற குறுமுகவரி இருந்தது உதவியது. கூடலன்று இவ்வளவு ஊடகக்காரர்கள் வருவார்கள் என்பதை எதிர்பார்க்காததால் போதுமான அளவு ஊடக அறிக்கைகளை அச்சடித்து வைத்திருக்கவில்லை. அதே போல் நிகழ்வு முடிந்த மறுநாள் சில ஊடகக்காரர்கள் நிகழ்வு தொடர்பான படங்களைக் கேட்டார்கள். இதற்கு ஏற்றவாறு தொழில்முறையாக நாம் பணிக்கமர்த்திய நிறுவனத்திடம் இருந்து சில படங்களைப் பெற்று வைத்து இருந்திருக்க வேண்டும். இவற்றை அடுத்த முறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • சில ஊடகக்காரர்கள் பயிற்சிகளைக் கவனித்துத் தாங்களும் கற்றுக் கொள்ள விரும்பியதைக் காண முடிந்தது.
  • அனைத்து ஊடகக்காரர்களும் அடுத்து தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பாக வரும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அடுத்த சில நாள் செய்தித் தாள்கள், இணையத்தளங்களைக் கவனித்து வாருங்கள். வெளியாகும் செய்திகளை இங்கே ஆவணப்படுத்தி வருகிறோம்.

ஊடக ஒருங்கிணைப்பு தொடர்பாக ஒரு தொடர்ச்சியைப் பின்பற்ற முடியும் என்றும், தொழில்நேர்த்தியுடன் ஊடகங்களைக் கையாள முடியும் என்றும் ஒரு நம்பிக்கையை விதைத்திருப்பதே இந்த ஊடகச் சந்திப்பின் பெறுபயன்.