விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்

உங்களது சொந்தப் படிமங்களையோ, அல்லது வேறு ஒருவருக்கு சொந்தமான படிமங்களை குறிப்பிட்ட அந்த நபரின் அனுமதியுடனோ விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யலாம். உங்களுக்கு சொந்தமான படிமங்களாயின், அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்வதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லையாயினும், அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்த பின்னர், அவற்றை எந்த ஒருவரும் பயன்படுத்த அனுமதியளிக்கிறீர்கள் என்பதை அறிந்து வைத்திருங்கள். படிமங்கள் உங்களுடைய சொந்தப் படிமங்களாக இருக்காதவிடத்து, படிமங்களுக்கு உரியவர்களிடம் முறைப்படி அனுமதி பெற்று அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படியல்லாவிடின், நீங்கள் தரவேற்றும் படிமங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து அகற்றப்படலாம். பொதுவாக இணையத் தளங்களில் கிடைக்கப்பெறும் படிமங்கள் காப்புரிமை கொண்டவை என்பதையும், முறையான அனுமதியின்றி அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய முடியாதென்பதையும் அறிந்து வைத்திருங்கள்.

ஒரு விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்வதற்கு படிமத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கியிருந்தால், அந்த அனுமதி மற்ற விக்கிப்பீடியாக்களுக்கும் செல்லுபடியாகும். அந்த அனுமதி எந்த விக்கிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கூறினால் போதும்.

படிமமொன்றை தரவேற்றம் செய்வதற்கான படிமுறைகள்

தொகு

காப்புரிமை பற்றித் தீர்மானித்தல்

தொகு

காப்புரிமை அற்றவை

தொகு

ஒரு படிமமானது தமிழ் விக்கியிலோ, பிறமொழி விக்கிகளிலோ அல்லது விக்கிமீடியா பொதுமம் (Wikimedia Commons) தளத்திலோ இருந்தால் அந்தப் படிமத்தின் மீது அழுத்தி, அப்படிமத்தின் விவரணப் பக்கத்திற்கு சென்று படிமம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். பொதுவாக விக்கிப்பீடியாவில் காணப்படும் படிமங்கள் யாவும் காப்புரிமைக்கு உட்படாதவை (Free License Images). ஆதலால், அங்கிருக்கும் படங்களை அனுமதியெதுவுமின்றி எவரும் பயன்படுத்த முடியும். விக்கிமீடியா பொதுமம் தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்கள், மிக இலகுவாக தமிழ் உட்பட, எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களிலும் எடுத்துப் கையாளப்படக் கூடியவையாக இருக்கும். விக்கிப்பீடியா காமன்ஸ் என்பது அனைத்துமொழி விக்கிப்பீடியாக்களுக்கும் பொதுவான படிமங்களின் சேமிப்புக் கிடங்கு. ஆதலால் படிமம் ஒன்றைப் புதிதாகத் தரவேற்றம் செய்யும்போது, அதனை விக்கிமீடியா பொதுமம் தளத்தில் தரவேற்றம் செய்தல் சிறந்த முறையாகும். உங்கள் சொந்தப் படிமமொன்றை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமொழி விக்கிகளிலோ அல்லது விக்கிமீடியா பொதுமம் தளத்திலோ தரவேற்றம் செய்யும்போது, அதை காப்புரிமை அற்றதாகச் செய்வீர்கள்.

காப்புரிமை உள்ளவை

தொகு

படிமமானது ஏதாவதொரு இணையதளத்தில் இருக்கின்றதாயின், அவ்விணையத் தளத்தில் காப்புரிமைபற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம். அப்படி எதையும் பார்க்க முடியாதவிடத்து, படிமத்தின் காப்புரிமை பற்றி அதனை உருவாக்கியவரைத் தொடர்பு கொண்டு பெறவேண்டும். அனேகமாகப் பக்கத்தை உருவாக்கியவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள இயலும்.

காப்புரிமை உள்ள படிமங்களை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமொழி விக்கிகளிலோ அல்லது விக்கிமீடியா பொதுமம் தளத்திலோ தரவேற்றம் செய்ய விரும்பினால், உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அப்படிமத்தைப் பயன்படுத்துவதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும். அத்துடன், உரிமையாளரிடம், நீங்கள் அந்தப் படிமத்தை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யும்போது, அது காப்புரிமை அற்றதாக்கப்படும் என்பதையும் எடுத்துக் கூறி அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org க்கு, குறிப்பிட்ட படிமத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

நியாயமான பயன்பாடு காரண விளக்கம்

தொகு

நியாயமான பயன்பாடு என்று குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட படிமத்துக்கான காப்புரிமை உள்ளவரிடம் அனுமதி பெறாது, ஒரு குறிப்பிட்ட விக்கி கட்டுரைக்குத் தகுந்த விளக்கம் அளிக்க அந்தப் படிமம் அவசியமானது, வேறு மாற்று இல்லை, தரம் குறைந்த பிரிதிறன் கொண்ட படிமம் ஏற்றப்படுகிறது போன்ற காரணங்களைக் கூறி நிபந்தனை முறையில் அந்த விக்கியில் தரவேற்றம் செய்வதாகும்.

நீங்கள் சில நேரங்களில் காப்புரிமை அற்ற படிமங்களைப் பெறுதல் இயலாததாக இருந்து, கட்டுரைக்கு மிகத் தேவையாக இருந்தால் நியாயப் பயன்பாட்டினை தகுந்த காரணங்களை விளக்கி நியாயப்படுத்த வேண்டும். உரிமையில்லா படிமங்களையோ அல்லது பிற ஊடகங்களையோ பயன்படுத்தினால், இரு விடயங்களைப் படிம விவரணப் பக்கத்தில் உள்ளிடுவது தேவையாகும்:

  1. தகுந்த காப்புரிமை குறிச்சொல் கொண்டு நியாய பயன்பாட்டினை விளக்குதல். பட்டியலுக்குப் பார்க்கவும் விக்கிப்பீடியா:படிம காப்புரிமை குறிச்சொற்கள்/உரிமையற்றவை .
  2. விவரமான நியாயப் பயன்பாடு காரண விளக்கம். ஒவ்வொரு கட்டுரையிலும் படிமத்தைப் பயன்படுத்தும்போது தனியான, குறிப்பிட்ட காரண விளக்கத்தை அளிக்க வேண்டும். எந்தக் கட்டுரையில் இந்தப் படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காரண விளக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

இதற்கான உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல் பக்கத்தைப் படித்த பின்னரே படிமத்தைத் தரவேற்றவும். இக் கொள்கைப்படி தரவேற்றப்பட்டுள்ள ஓர் படத்திற்கான எடுத்துக்காட்டு

காமன்சில் உள்ள படங்கள் முழு காப்புரிமை துறப்புடன் பொதுபரப்பில் இருப்பதால், இப்படிமத்தின் உரிமையாளர், தனது அனைத்து காப்புரிமைகளையும் துறந்து முழுமையான கட்டற்ற உரிமம் வழங்குவாரேயானாலன்றிக் காமன்சில் தரவேற்ற முடியாது. மாறாக ஒரு விக்கியில் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைப்படி, அந்தக் கட்டுரைக்கு மட்டும் நியாயமான பயன்பாடாகக் கருதப்படும் படங்கள் தகுந்த காரணங்கள் மற்றும் காப்புரிமை விளக்கங்களுடன் அந்த குறிப்பிட்ட விக்கியில் இருக்கலாம். அப்படி ஒரு விக்கியில் காணப்படும் ஒரு படிமமானது, வேறொரு விக்கியிலும் அவசியமேற்படுமிடத்து, அதே நியாயமான பயன்பாட்டுக் கொள்கைப்படி, தகுந்த காரணங்கள் காப்புரிமை விளக்கங்களுடன் தரவேற்றம் செய்யப்படலாம்.

படிமங்களை கட்டுரையில் தரவேற்றும் முறை

தொகு

படிமம் ஏற்கனவே உள்ளதா என அறிதல்

தொகு

வேறு இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் ஒரு படிமமாயின், அது ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளதா என்பதை பெயர்களைக் கொடுத்து தேடிப் பார்க்கலாம். அல்லது, தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களின் பட்டியலை சென்று பார்வையிடலாம்.

படிமங்களை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்தல்

தொகு
  • பயனர் கணக்கை வைத்திருக்கும் ஒருவரின் கணக்கானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர் தனது கணக்கில் புகுபதிகை செய்த பின்னர் படிமத்தை தரவேற்றம் செய்ய முடியும்.
  • முதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய விரும்புகின்றீர்களாயின், தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், கோப்பைப் பதிவேற்று இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். விக்கிமீடியா பொதுமத்தில் தரவேற்றம் செய்ய விரும்பின், Wikimedia Commons இல் வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், Upload file இணைப்பைச் சொடுக்கிச் செல்லுங்கள்.
  • அங்கே காணப்படும் படிவத்தில் தேவையான விபரங்களை நிரப்புங்கள்.
  • உங்கள் கணினியிலுள்ள படிமக்கோப்பை (மூலக் கோப்பின் பெயர்) அதற்குரிய இடத்தில் தெரிவு செய்து, அதற்கான இலக்கு கோப்பின் பெயரையும் (தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் கொடுக்க விரும்பும் பெயர்) கொடுங்கள்.
  • ‘சுருக்கம்' என்ற இடத்தில் கோப்பைப் பற்றி சுருக்கமாக விபரம் கொடுங்கள். இது குறிப்பிட்ட கோப்புபற்றிய தேடலுக்கும், பயன்பாட்டிற்கும் பின்னாளில் உதவும். நியாய பயன்பாட்டு காரண விளக்கத்தையும் இங்கு இடுதல் வேண்டும்.
  • அனுமதி என்ற இடத்தில் படிமத்திற்கான பொருத்தமான காப்புரிமையை தெரிவு செய்ய வேண்டும். நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தெரிவு செய்யும்போது, காப்புரிமை விதிகள் எதையும் நீங்கள் மீறாமல் இருக்க வேண்டும்.
  • பின்னர் 'கோப்பைப் பதிவேற்று' என்ற விசையை அழுத்தினால், உங்களது படிமம் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்டுவிடும்.

கட்டுரையில் படிமத்தை தரவேற்றம் செய்தல்

தொகு
தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்
தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் படிமத்தை தரவேற்றம் செய்திருந்தால், நீங்கள் தரவேற்றம் செய்த படிமத்தின் பெயரை, உங்கள் கட்டுரையின் தொகுப்பில் இட வேண்டும். உதாரணத்திற்கு படிமம்:நுங்கு1.JPG என்ற படிமமானது, பனம்பழம் என்ற கட்டுரையின் தொகுப்பில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

படிமம்:நுங்கு1.JPG|rightt|thumb|150px|குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு

இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட பெயர் நுங்கு1.JPG என்பதாகவும், கட்டுரையில் குறிப்பிட்ட படிமத்திற்கு வழங்கப்பட்ட பெயர்/தலைப்பு, குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு என்று இருப்பதையும் காணலாம். அத்துடன், கட்டுரையில் படம் அமைந்திருக்கும் இடம், படிமத்தின் அளவு என்பனவும் குறிப்பிட்ட வார்ப்புருவில் மாற்றியமைக்கப் படலாம்.

விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்
தொகு

விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களும் நேரடியாகவே தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் தரவேற்றப்பட முடியும். இது மேற்குறிப்பிட்டது போலவே இணைப்பு கொடுக்கப்படலாம். ஆனால் படத்திற்கான தலைப்பை நாம் தமிழில் மாற்றிவிட முடியும். உதாரணத்துக்கு, தொற்றுநோய் என்ற கட்டுரையில், 'நோய்க்கடத்தல்' என்ற பகுதியில் வரும் முதலாவது படம் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டு பின்னர் உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Image:OCD handwash.jpg|thumb|right|தொற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கியமான முறைகளில் ஒன்று கைகளை கழுவுதல்.

இந்தப் படிமத்தின் இலக்கு பெயர் Image:OCD handwash.jpg என்று விக்கிமீடியா பொதுமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை ஆங்கிலக் கட்டுரையில் பதிவேற்றம் செய்தபோது, பின்வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்..

Image:OCD handwash.jpg|thumb|right|Washing one's hands, a form of hygiene, is the number one way to prevent the spread of infectious disease.

இதில் நாம் படிமத்திற்கான கட்டுரையில் கொடுக்கப்படும் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் பதிவேற்றம் செய்துள்ளோம்.

வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்
தொகு

வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்களை, அதற்குரிய வார்ப்புருவைக் கொடுத்து நாம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் நேரடியாக தரவேற்றம் செய்ய முடியாது. அந்த குறிப்பிட்ட படிமங்களை நமது கணினியில் தரவிறக்கம் செய்து, பின்னர் அதை மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவிலோ, அல்லது விக்கிமீடியா பொதுமத்திலோ தரவேற்றம் செய்த பின்னரே, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் தரவேற்றம் செய்ய முடியும்.

காணொலி வழிகாட்டல்

தொகு

மேலும் பார்க்க

தொகு

ஆங்கிலக் கட்டுரையைக் காண

தொகு

Wikipedia:Uploading images