விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 12, 2012
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன் மாநகரத்தில் நடைபெற்றன. தற்கால உலக ஒலிம்பிக் விளையாட்டை மூன்றாவது முறையாக நடத்தும் பெருமையை இலண்டன் மாநகரம் பெற்றது. 1908 மற்றும் 1948 ஆண்டுகளில் இருமுறை இங்கு இவ்விளையாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன. 1944 ஆண்டு இங்கு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி இரண்டாவது உலகப்போர் காரணமாக இரத்தானது. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நாடுகள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நான்கு முறை ஒலிம்பிக் நடத்திய அமெரிக்கா (1904, 1932, 1984, 1996) உள்ளது. ஜெர்மனி (1936, 1972), ஆஸ்திரேலியா (1956, 2000), பிரான்ஸ் (1900, 1924), கிரீஸ் (1896, 2004) ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தி உள்ளன. இதுவரை இலண்டன் (இங்கிலாந்து), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), பாரிஸ் (பிரான்ஸ்), ஏதென்ஸ் (கிரீஸ்) ஆகிய நகரங்கள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளன. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நகரம் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. ஆனால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு பின் லண்டன் நகரம் முதலிடத்தை தனித்துப் பிடித்துள்ளது. மேலும்...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டப் பகுதிகளில் பேசப்படும் தமிழ் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் என்றழைக்கப்படுகிறது. இலங்கையில் வழக்கத்திலுள்ள பேச்சுத் தமிழ் வழக்குகளில் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் இப்பகுதிக்கே உரிய வட்டார வழக்குகள் கொண்டு தனி ஒரு பேச்சு வழக்காகத் திகழ்கிறது. மட்டக்களப்பு பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் மற்றும் இலங்கையின் திருகோணமலை, கொழும்பு, மலையகப் பிரதேசங்களில் வழக்கத்திலுள்ள பேச்சுத் தமிழில் இருந்து குறிப்பிடத்தக்களவு வேறுபட்டுக் காணப்படுகிறது. மட்டக்களப்புப் பேச்சுத் தமிழானது மட்டக்களப்புத் தமிழகத்திற்கு உரியதாயினும் நகர மற்றும் கிராமங்களில் தன்னகத்தே சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றது. கல்வி, வளர்ச்சி, பிற சமூகத்தினருடனான தொடர்புகள் என்பன இதற்குக் காரணம் எனலாம். இசுலாமியர் சமூகத்தை அண்டிய வட்டாரத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் இசுலாமியர்களின் பேச்சுத் தமிழிலுள்ள சொற்களைக் கொண்டதாகவும், கிராமங்களில் பண்டைய தமிழ்ச் சொற்கள் மாறாமலும், நகரத்திலுள்ள பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கன. மேலும்...