விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 12, 2013

தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களின் ஊடாக வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களினூடாக ஆந்திரக் கலைப் பாணியினதும், மராட்டியர்களினூடாக மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணியினதும், ஆங்கிலேயரினூடாக மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது. சோழர் ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன. 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், தஞ்சாவூரின் ராஜூக்கள் சமுதாயத்தினர், விஜயநகர பேரரசின் நாயக்கர்கள், மற்றும் திருச்சி, மற்றும் மதுரை நாயுடுக்கள் ஆகிய ஆட்சியாளர்கள் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். பல நூற்றாண்டுகளாக நாயக்கர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய 'மூச்சிகள்' எனப்படும் ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்தப் பாணி ஓவியங்கள் குலத் தொழிலாகப் படைக்கப்பட்டன. மேலும்...


குத்துக்கோடு என்பது வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் ஒரு உச்சியிலிருந்து அந்த உச்சியின் எதிர்ப்பக்கத்தைத் தனக்குள் கொண்டிருக்கும் கோட்டிற்கு வரையப்படும் ஒரு செங்குத்துக்கோடாகும். எதிர்ப்பக்கத்தைக் கொண்டிருக்கும் கோடானது அப்பக்கத்தின் நீட்சி எனப்படும். இந்தப் பக்க நீட்டிப்பும் குத்துக்கோடும் வெட்டிக்கொள்ளும் புள்ளி, குத்துக்கோட்டின் அடி எனப்படும். குத்துக்கோடு வரையப்படும் முக்கோணத்தின் உச்சிக்கும் குத்துக்கோட்டின் அடிக்கும் இடையேயுள்ள தூரம் குத்துக்கோட்டின் நீளம் எனப்படும். குத்துக்கோட்டின் நீளம் முக்கோணத்தின் பரப்பைக் காண்பதற்குப் பயன்படுகிறது. முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் குத்துக்கோட்டின் நீளம் இரண்டின் பெருக்குத்தொகையில் பாதியளவாக முக்கோணத்தின் பரப்பு அமையும். முக்கோணவியல் சார்புகள் மூலம் குத்துக்கோட்டின் நீளமானது முக்கோணத்தின் பக்கநீளங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒரு இருசமபக்க முக்கோணத்தின் சமமில்லாத மூன்றாவது பக்கத்திற்கு வரையப்படும் குத்துக்கோட்டின் அடி, அப்பக்கத்தின் நடுப்புள்ளியாக அமையும். மேலும்...