விதியுடனான ஒப்பந்தம்
"விதியுடனான ஒப்பந்தம்" ("Tryst with Destiny") அல்லது விதியுடனான சந்திப்பு என்பது இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தன்று அதாவது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி அன்று நள்ளிரவில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய அரசியல் நிர்ணய சபையில்ஆற்றிய ஆங்கில மொழி உரையாகும். இந்த சொற்பொழிவில்இந்திய வரலாறு அதன் இயல்பை மீறி பயணிப்பதன் அம்சங்கள் குறித்து பேசினார். இந்தச் சொற்பொழிவு 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பேச்சுக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1] மேலும் இந்தியாவில் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்கு எதிரான இந்திய விடுதலை இயக்கத்தின் ஒற்றுமையான போராட்டத்தின் சாராம்சத்தை எடுத்துக்கூறும் ஒரு முக்கிய சொற்பொழிவாக இது கருதப்படுகிறது. இந்தச் சொற்பொழிவில் காலனித்துவ சகாப்தத்தின் முடிவை அறிவித்து அந்த தருணத்தில் மக்கள் மனதில் கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பையும் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்று நேரு குடிமக்களைக் கேட்டுக்கொண்டார்.
“பல ஆண்டுகளுக்கு முன்னர் நாம் விதியைக் குறித்த நேரத்தில் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த நேரம் வந்து விட்டது. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில், இந்தியா சுதந்திரத்துடன் விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும். ஒரு வரலாறு முடிவுக்கு வந்து மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது. இப் புனிதமான நேரத்தில், இந்திய மக்களாகிய நாம் மனித குலத்துக்குச் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.”
என்பதாகத் துவங்கிய அந்த உரை,
“உலக நாடுகளுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நாம் நமது வாழ்த்துகளையும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்ற உறுதியையும் தெரிவித்துக் கொள்வோம். நமது அன்பிற்கினிய தாய்த்திரு நாடான இந்தியாவிற்கு நாம் என்றும் கடமை செய்வோம்! ஜெய்ஹிந்த் ! ஜெய் ஜவான்!”
என்பதாக முடிந்தது. தனது சொற்பொழிவில் விடுதலை இயக்கத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தி நாட்டு மக்களை ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Great speeches of the 20th century". The Guardian. 8 February 2008 இம் மூலத்தில் இருந்து 2 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161202020709/https://www.theguardian.com/theguardian/series/greatspeeches.
- ↑ "Jawaharlal Nehru (1889-1964): Speech On the Granting of Indian Independence, August 14, 1947". Modern History Sourcebook. Fordham University. October 1998. Archived from the original on 18 August 2012. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
வெளி இணைப்புகள்
தொகு- Video of Nehru's "Tryst with Destiny" address
- Nehru, Jawaharlal. "Speech On the Granting of Indian Independence, 14 August 1947". Modern History Sourcebook. Internet History Sourcebook Project. பார்க்கப்பட்ட நாள் 3 March 2010.