விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு

ஓர் விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு என்பது விளையாட்டைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது அனுமதிக்கின்ற ஓர் அமைப்பாகும். இவை பல்வேறு வடிவங்களில் பல்வேறு கட்டுப்பாட்டுப் பொறுப்புகளுடன் அமைந்துள்ளன. காட்டாக, இவை தாங்கள் கட்டுப்படுத்தும் உடற்றிறன் விளையாட்டில் விதிகளை மாற்றியமைக்கவும் விதிகளை மீறியதற்கு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரம் கொண்டுள்ளன. கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு பலதரப்பட்ட பொறுப்புகள் உள்ளன. பன்னாட்டு ஒலிம்பிக் குழு போன்று உலகளவில் பல்வேறு விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்துவதிலிருந்து இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் போன்று ஒரேஒரு விளையாட்டை தேசிய அளவில் கட்டுப்படுத்துவது வரை பலவாறு உள்ளன. தேசிய அமைப்புகள் பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்தோ இணையாமலோ இருக்கலாம். உலகளவில் பன்னாட்டு விளையாட்டுக் கூட்டமைப்புகள் 19வது நூற்றாண்டின் இறுதியில் உருவாகத் தொடங்கின.